SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உள்ளாட்சி தேர்தலில் மாஜி அமைச்சரின் நூதன பழிவாங்கலை சொல்கிறார்: wiki யானந்தா

2021-10-16@ 01:49:38

‘‘தூங்கா நகரத்தில் முறைகேடுகள் மட்டும் எப்போதும் தூங்காமல் உலவிக் கொண்டே இருக்கிறதே...’’ என்றார் பீட்டர் மாமா.
 ‘‘இந்த நகரத்து பல்கலையின் தொலைநிலை பிரிவில் எப்போதும் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. கடந்த காலத்து ‘துணையரசர்’ இருந்த வரை மூன்று ஆண்டு பட்டப்படிப்பை, குறுகிய காலத்தில் படித்து தேர்வெழுதுவதற்கான வழிமுறைக்கு ஒப்புதல் அளிக்கவில்லையாம்.  தற்போது இங்கே ‘துணையரசர்’ இல்லாத நிலையில், இந்த குறுகிய காலத்தில் தேர்வெழுதும் நடைமுறைக்கு சிண்டிகேட் ஒப்புதல் அளித்திருக்கிறதாம். இது மூத்த பேராசிரியர்கள், மாணவர் இயக்கங்கள் என பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பை வலுக்க செய்திருக்கிறது. இதுதவிர, ‘தொலைநிலை’ பிரிவில் பல்கலை.யில் பணி புரிவோரின் உறவினர்கள், இப்பிரிவிற்கான மாணவர் சேர்க்கை மையத்தை எடுத்து நடத்தக்கூடாது என்றே விதி இருக்கிறது. இந்த விதிமுறைகளை புறந்தள்ளி கடந்த ஆட்சிக்காலத்தில் ‘துணை பதிவு’ அந்தஸ்திற்குரிய பெண்ணானவர், தனது மகளுக்கு ‘ஹனிபீ’ மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் மாணவர் சேர்க்கை மையத்துக்கு அனுமதி தந்துள்ளார். தற்போது அந்த ‘துணை பதிவு’ பெண்மணியின் மகள் தான், ‘தொலைநிலை’ பிரிவில் கேரளா உள்ளிட்ட மாநில மாணவர் சேர்க்கை மையத்திற்கும் இடைத்தரகராக இருந்து பல்வேறு முறைகேடுகளை ஏற்கனவே செய்திருக்கிறார். தற்போது குறுகிய காலத்தில் பட்டப்படிப்பை முடிக்கும் அனுமதி வாங்கும் விஷயத்திலும் மூளையாக இருந்து ‘‘சுப்ரீம் பவரான சிண்டிகேட்டை’’ சுருட்டி எடுத்து, ஒப்புதல் வாங்கியுள்ளாராம். ‘‘பதிவு’’க்கும் உறவினர் என்பதால், தாயும், மகளும் காட்டும் கோப்புகளிலும், நீட்டும் இடங்களிலும் ‘‘பதிவு’’ கையொப்பம் இடுவாராம். தொலைநிலைப்பிரிவை இந்த துணை பதிவு பெண்மணியாரே தற்போது இயக்கி வருகிறாராம். இதில் பல லட்சங்கள் கைமாறி வருவதால், உயர்கல்வித்துறையின் உயர்நிலையில் இருப்போர் கல்வியின் தரம் ரொம்பவே முக்கியம். இதை தடுக்கவேண்டும் என்று அரசுக்கு புகார்களை தட்டிக் கொண்டிருக்கிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களின் காலை வாரி பழி தீர்த்துக் கொண்ட கதையை சொல்லேன் கேட்க ஆர்வமாக இருக்கு...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புரம் என்று தொடங்கும் மாவட்டத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இலை கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. மா.செவும், தொகுதி பொறுப்பாளரான மாஜி சட்ட மந்திரி தேர்தலின்போது பெயரளவில் கூட்டத்தை மட்டும் நடத்தினாராம். ஆனால், தேர்தலில் யாருக்கும் ஓட்டு கேட்டு களத்துக்கு போகவே இல்லையாம். மாவட்ட செயலாளர் வந்து கேன்வாஸ் செய்து இருந்தால் தொண்டர்கள் கொஞ்சம் சுறுசுறுப்பாக வேலை செய்து இருப்பாங்க. ஆனால், மாஜி வராததால், தொண்டர்களும் வேலை செய்யவில்லையாம். இதற்கு வாய்மொழி உத்தரவும் காரணம் என்று பேசிக்கிறாங்க. நிஜத்தை சம்பந்தப்பட்டவர்கள்தான் சொல்லணும். காரணம், தேர்தல் களத்திற்கு வந்து பிரசாரம் செய்யாதபோதே, நம்ம தேர்தலில் விழப்போறோம் என்று வேட்பாளர்களுக்கு தெரிந்துவிட்டதாாம். எனவே, அப்போதே மாஜி சட்டம் மீது கட்சியினர், அதிருப்தியை தெரிவித்து வந்தாங்க. அதற்கு ஏற்றார்போல தேர்தல் முடிவுகள் மேலும் கட்சியினரிடையே கோபத்தை அதிகரித்துள்ளதாம்.

கவுரமாக கணிசமான இடங்களில் கூட வெற்றி பெறாமல், பல ஒன்றியங்களில் சுயேச்சைகள் அதிக அளவு வெற்றி பெற்று, இலை கட்சியை பின்னுக்குத் தள்ளி விட்டார்களாம். இதனால் பல லகரம் செலவு செய்த இலை கட்சி வேட்பாளர்கள் பணமும் போச்சு, கட்சி கவுரவமும் போச்சு என்று கடும் அதிருப்தியில் உள்ளார்களாம். இது குறித்து மாஜி மக்கள் பிரதிநிதி தன் அடிபொடிகளிடம், சட்டமன்ற தேர்தலில் தன்னை கட்சியினரே உள்ளடி வேலை செய்து தோற்கடித்தார்கள். அதற்கு கட்சியினரை பழி வாங்குவதற்காக நான் பதவியில் இல்லை என்றால் நீங்களும் இருக்கக்கூடாது என்று நினைத்தேன். அதுதான் பிரசாரத்துக்கும் போகல.. பணமும் கொடுக்கல.. தீவிரமான தொண்டர்களை ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டேன் என்று கூலாக சொல்கிறாராம்... அட..அட அண்ணன் எவ்வளவு விவரம் தெரிந்தவரு...’’ என்று பாராட்டி தள்ளுறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ெநற்களஞ்சிய மாவட்டத்தில் மட்டும் ரெய்டு நடப்பது இல்லையாமே, நியாயமான ரேட்ல சரக்கை விற்கிறார்களா என்ன...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘நெற்களஞ்சிய மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் 163 உள்ளது. கடந்த ஆட்சியில் ஒரு சில கடைகளில் மட்டும் மதுக்கடையுடன் இணைந்த பார் இருந்தது. இதில் மற்ற அனைத்து கடைகளும் அந்தந்த பகுதியை சேர்ந்த இலை கட்சி முக்கிய பிரமுகர்கள் கட்டுப்பாட்டில் கடைகளுக்கு அருகில் பார் நடத்தப்பட்டு வந்ததாம். இதனால் அனைவரும் கரன்சியில் புரண்டார்களாம். ஆட்சி மாற்றத்திலும் நெற்களஞ்சிய மாவட்டத்தில் தற்போதும் 163 டாஸ்மாக் கடையையொட்டி அனுமதியின்றி பார்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பார்களில் தினமும் லட்சக்கணக்கில் வருவாய் பார்க்கப்படுகிறதாம்... இதில் பெரும்பாலான பார்கள் இலைகட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கையிலேயே தற்போது வரை உள்ளதாம். இதனால் இலை கட்சி முக்கிய பிரமுகர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கடைகளில் ரெய்டு அடிக்கலாமா. வேண்டாமா என்ற மனநிலையில் இலைகட்சி விசுவாசியான டாஸ்மாக் அதிகாரிகள், மதுவிலக்கு அதிகாரிகள் இருந்து வருகின்றார்களாம். இதனால் அனுமதியின்றி பார் நடத்தி வரும் இலை கட்சி பிரமுகர்கள் குஷியில் உள்ளார்களாம். ஆட்சி மாறினாலும், காட்சிகள் இன்னும் மாற வில்லை. பழைய பாசத்தில் இலைகட்சிக்கு விசுவாசியாகத்தான் ஒரு சில அதிகாரிகள் செயல்படுவதாக டாஸ்மாக் பணியாளர்களுக்குள் அரசல், புரசலாக பேசிக்கிறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Tribute_MKStalin_Pipin Rawat

  முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி: வெலிங்டன் மைதானத்தில் இருந்து உடல்கள் சூலூர் புறப்பட்டது

 • BIPIN RAWAT

  முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

 • BlackBox_Helicopter_Coonoor

  குன்னூரில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி கண்டெடுப்பு

 • MK Stalin_Wellington_Army officials_helicopter_crash

  வெலிங்டனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: ஹெலிகாப்டர் விபத்து குறித்து ராணுவ அதிகாரிகள் விளக்கம்

 • Vaikunda Ekadasi

  பூலோக வைகுண்டத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 6ம் திருநாள்.

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்