SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கரன்சியை எதிர்பார்த்து ஏமாந்துபோன குக்கர் கட்சியினரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-10-12@ 01:40:07

‘‘உ ள்ளாட்சி தேர்தலை சாக்காக வைத்து தப்பிக்க நினைக்கிறார்களாமே ஊராட்சி செயலாளர்கள்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வேலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் ஊராட்சி செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்களின் கல்வி மற்றும் பிற சான்றுகளின் உண்மைத்தன்மை அறிவதற்காக அனுப்பி வைக்கப்பட்டதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10க்கும் மேற்பட்டவர்களின் கல்வி மற்றும் பிற சான்றுகள் போலியானவை என்று கண்டறியப்பட்டது. குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் பலரும் போலி சான்றிதழ் விவகாரத்தில் சிக்கி, தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கதிகலங்கி நின்றிருந்தனர்.
இந்த நிலையில்தான் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் அனைவரும் அதுதொடர்பான பரபரப்பில் ஆழ்ந்துவிட்டனர். இதனால் தங்கள் மீதான நடவடிக்கை அப்படியே அமுங்கிவிடும். தேர்தல் முடிந்தவுடன் யாரை பிடிக்க முடியுமோ அவர்களை பிடித்து தங்களை காப்பாற்றிக் கொள்ளலாம் என்று போலி சான்று கொடுத்து சிக்கிய ஊராட்சி செயலாளர்கள் குதூகலத்தில் உள்ளார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இரட்டை தலைமையால் அதிகாரிகள் தவித்து வருகிறார்கள் போல...’’ என சிரித்தார் பீட்டர் மாமா.
‘‘டாஸ்மாக்கில்  தூங்கா நகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களின் பல்வேறு மண்டலங்களின் முதுநிலை  மேலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்து வருகிறார்களாம். மாநிலத் தலைநகரில் நிர்வாக தலைமை நிலையில் முருகப்பெருமான் பெயரிலானவர் இருக்கிறார். இவருக்கு கீழே மண்டலங்கள்தோறும் முதுநிலை மேலாளர்களும் இருக்கின்றனர். முருகப்பெருமான் பெயர் கொண்டவரிடம் இருந்து வரும் உத்தரவுகளையே இவர்கள் நிறைவேற்றலாம் என்ற நிலையில், மாநிலத் தலைநகரின் தலைமையில் இருந்து, ஜோதிமயமான அதிகாரி அடிக்கடி தொடர்பு கொள்கிறாராம். இவர், மண்டலங்களின் முதுநிலை மேலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளை கண்டபடியான உத்தரவுகளால் ஆட்டிப் படைக்கிறாராம். அத்தோடு தனது உத்தரவையே நிறைவேற்றிட வேண்டும். தலைமை நிலையில் இருப்பவர் சொல்வதை கேட்க வேண்டியதில்லை என்றெல்லாம் அழுத்தம் கொடுப்பதாகவும் புகார் எழுகிறது.  கட்டளைகள் ஒருபுறத்திலிருந்து வந்தால்தான் முழுமையாக செயல்படலாம். இப்படி இருபுறத்திலும் மாற்றி மாற்றி உத்தரவுகள் வருவதால் ஒரு பணியும் செய்ய  முடியாமல் தவித்து வருகிறோம் என்று இங்கிருக்கும் அதிகாரிகள் புலம்பி  தவித்து வருகிறார்கள். அத்தோடு, யாருக்கு என்னென்ன அதிகாரம் என்பதை  வரைமுறைப்படுத்தினால்தான், அந்தந்த அதிகாரிகளுக்கு ஏற்ப இணைந்து சிறப்பாகச் செயலாற்றலாம் என்று வெளிப்படையாகவே பேசி வரும் அதிகாரிகள், இதுகுறித்து உயர்நிலை அதிகாரிக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலை பெண் அதிகாரிகள் இன்னும் கோலோச்சிக் கொண்டிருப்பதாக தகவல் வருகிறதே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாவட்டத்தில் பத்திரப்பதிவு துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், கோவை மதுக்கரை, கணபதி, பெரியநாயக்கன்பாளையம், மற்றும் மாவட்ட பதிவாளர் அலுவலக வழிகாட்டி துறையில் பணிபுரியும் சார்-பதிவாளர், வடவள்ளி, தொண்டாமுத்தூர் சார்-பதிவாளர் என பலரும், இலைக்கட்சி விசுவாசிகளாகவே உள்ளனர். பெண் அதிகாரிகளாக உள்ள இவர்கள் அனைவரும், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இப்பணியில் அமர்ந்தனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பல புயல்கள் வீசிய பின்னரும், இன்னும் அதே இடத்தில் வலுவாக ஒட்டிக்கொண்டுள்ளனர். சுமார் ஐந்து வருடத்திற்கு மேலாக கோவையிலேயே கோலோச்சி வருகின்றனர். இந்த பெண் அதிகாரிகளையும் கொஞ்சம் கண்டுகொள்ள வேண்டும் என்கிறார்கள் இத்துறை ஊழியர்கள்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கரன்சியை எதிர்பார்த்து ஏமாந்துபோனார்களாமே குக்கர் கட்சியினர்..’’
‘‘இடைத்தேர்தலில் கூட வரிந்துகட்டி நிற்கும் குக்கர் கட்சியில், 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் ஆளையே காணோமென பரவலான பேச்சு ஏற்பட்டிருக்காம். குறிப்பா விழுப்புரம் மாவட்டத்தில் சட்ட மன்றத் தேர்தலில் பலத்தைக்  காட்டுவதற்காக வேட்பாளரை நிறுத்தி கரன்சியை வாரி இறைத்தார்களாம். இதனால் உள்ளாட்சித் தேர்தலிலும் கரன்சியை எதிர்பார்த்து  நம்பிக்கையில் ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்களாம். ஆனால், குக்கர் கட்சித்தலைவர் உள்ளாட்சித்  தேர்தலில் கட்சியினரை கண்டுகொள்ளவில்லையாம். கட்சியினரும் தலைமையில்  இருந்து பணம் வரும் என்ற மகிழ்ச்சியில் சீட்டு வாங்கலாம் என்றுகாத்திருந்து  ஏமாற்றம்தான் மிஞ்சியதாம். உள்ளாட்சி தேர்தலுக்கு ஒரு கூட்டம் போடுவதற்கு கூட கட்சியில் வழியில்லாததால், குக்கர் சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்த கூட ஆளில்லாமல் பரிதாபத்திற்கு ஆளாகிவிட்டதாம் குக்கர் கட்சி.
கூட்டணியில் இருந்த முரசு கட்சியில் கூட சரி பாதி அளவுக்கு உள்ளாட்சித் தேர்தல் களம் கண்ட நிலையில் தேர்தல்களில் கரன்சியை வாரிவழங்கிய குக்கர்கட்சியின் நிலை பரிதாபத்தோடு உள்ளதாக கட்சியினர் வருந்திக் கூறினர்’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • omigron-7

  ஒமிக்ரான் தொற்றால் பயம் வேண்டாம்!: சென்னை ஒமந்தூரார் மருத்துவமனையில் தனி வார்ட் ரெடி..!!

 • rannnasss

  பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 4ம் திருநாள்!!

 • tomatoes

  கோயம்பேடு மார்க்கெட்டில் கெத்து காட்டும் தக்காளி

 • chennai-7

  ஒண்ணுமே தெரியலியே: கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புழுதி பறப்பதால் அல்லல்படும் வாகன ஓட்டிகள்..!!

 • suna1122

  கண்ணை கசக்கும் சூரியனோ.... சூரியனின் தெளிவான புகைப்படத்தை பகிர்ந்த வானியல் புகைப்பட வல்லுநர்!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்