SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கால்வாய் சீரமைப்பில் கல்லா கட்டின இலை கட்சி புள்ளிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-10-07@ 00:07:55

‘‘ரவுடிகளுக்கு வார்டன்களே இன்பார்மர்களாக இருக்கிறார்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி சிட்டியில பழிக்கு பழியா 4 மர்டர் நடந்துச்சு. இதுல ஈடுபட்ட ரெண்டு ரவுடி கோஷ்டிகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டாங்க. இதுல ஒரு ரவுடியை தீர்த்துக்கட்ட வெளிமாவட்ட ரவுடிகளையும் களம் இறக்கி, காரியத்தை கச்சிதமா முடிச்சிட்டாங்க. இதனால கிச்சிப்பாளையம் பகுதியே கலகலத்து போய் கிடக்குது. இந்த கேசுல குண்டாசுல கைதான 5 பேரு, மாங்கனி மாவட்ட சென்ட்ரல் பிரிசன்ல இருந்து வெளியே வந்திருக்காங்க. இவங்க வெளியே வந்தால் உயிருக்கு ஆபத்து இருப்பதை தெரிஞ்சுக்கிட்ட போலீசு, சிலரை பிடிக்க திட்டம் போட்டு ஜெயிலுக்கு வெளியே காத்துக்கிட்டிருந்தாங்க.. இந்த ரகசிய திட்டத்தை தெரிஞ்சுக்கிட்ட ரவுடிகள், வெளியே வந்தா கைது பண்ணிடுவாங்களோன்னு பயந்து போய், ஜெயில்ல இருந்து வெளியே வர மறுத்துட்டாங்களாம். அவங்க  சொந்தக்காரங்களும் ரகளை பண்ணிட்டாங்களாம். போலீஸ் போட்ட திட்டம் எப்படி ரவுடிகள் காதுக்கு போனதுன்னு தெரியாம அதிகாரிகள் குழம்பி போயிருக்காங்க. என்கொயரியில, ரவுடிகள் காதுல ரகசிய திட்டத்த ஓதுனது, அவர்களுக்கு  விசுவாசமான வார்டர்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கால்வாயில் கல்லா கட்டின இலை கட்சிக்காரர்கள் இப்போ சிக்கலில் மாட்டி உள்ளார்களாமே..’’
‘‘வடமாநில புண்ணிய நதி பெயரில் முடியும் மாவட்டத்தில் உள்ள காட்டுராஜா ஊருக்கு, ‘‘தூங்காநகரின்’’ புலிப்பட்டியிலிருந்து பெரியாறு கால்வாய் மெயின் வாய்க்கால் வழியாக விவசாயத்திற்கு தண்ணீர் வருகிறது. இங்கிருந்து 20 கிமீ தூரத்தில் 3 வாய்க்கால்கள் பிரிகின்றன. இதன்மூலம் 20க்கும் மேற்பட்ட பொதுப்பணித்துறை கண்மாய்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட கண்மாய்கள் பாசன வசதி பெறுகின்றன. இதன்மூலம் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பயனடைந்தன. இந்த கால்வாயில் தண்ணீர் வராததால், பல இடங்களில் முட்புதர் மண்டி சேதமடைந்தன. இதையடுத்து கடந்த இலைக்கட்சி ஆட்சி காலத்தில், ரூ.9.50 கோடி மதிப்பில், 3 வாய்க்கால்களையும் சீரமைக்கும் பணிகள் நடந்தன. சுமார் 2 கிமீ தூரத்துக்கு பெயரளவில் பணிகளை செய்தது போல பாவ்லா காட்டி விட்டு ஒப்பந்ததாரர்கள் சென்று விட்டனராம். இந்தப்பணிகள் மூலம் இலைக்கட்சியினர், அதிகாரிகள் பல கோடி அளவு முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதுதொடர்பாக முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைகட்சிக்கு ஆதரவாக மாவட்ட தனிப்பிரிவு அதிகாரி செயல்படுவதாக சொல்கிறார்களே..’’
‘‘டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் செல்வத்துக்கே ராஜ்ஜியம் என்ற பெயரானவர் மாவட்ட தனிப்பிரிவு அதிகாரியாக கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்டாராம்... தனிப்பிரிவு அதிகாரியாக பொறுப்பேற்றதில் இருந்தே சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் என அனைவரிடமும் மார்தட்டிக் கொண்டு சொல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தாராம்... மூன்று ஆண்டுகள் கடந்தும் டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் எஸ்பிக்களாக இருந்த 4 பேர் மாறி சென்று விட்டனர். ஆனால்... 3 ஆண்டுகள் கடந்தும் இவர் மட்டும் மாறாமல் அதே பொறுப்பில் நீடித்து வருகிறாராம்... கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து காவல் நிலையங்களிலும் தனிப்பிரிவு காவலர்களாக பணியாற்றி வந்த 18பேர் கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு மாற்றம் செய்யப்பட்டு புதிதாக 18பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால்... தனிப்பிரிவு காவலர்களுக்கு அதிகாரியாக உள்ள இவர் மட்டும் கடந்த ஆட்சியில் மாற்றப்படவில்லையாம்...  தற்போது ஆட்சி மாறியும்... காட்சிகள் மாற வில்லையாம்.. பழைய பாசத்தில் இலைகட்சிக்கு ஆதரவாகவும் மாஜி அமைச்சருக்கு விசுவாசியாகவும் தான் இருந்து வருகிறாராம்... இலைகட்சி நிர்வாகிகள் மீது ஏதாவது பெட்டிசன் வந்தால் கூட தனிப்பிரிவு அதிகாரியால் விசாரிக்க கூட முடிய வில்லை என மாவட்ட காக்கிகளுக்குள் புலம்புகிறார்களாம்’’
‘‘மசாஜ் சென்டர் விவகாரம் பரபரப்பாகி இருக்கே.. விரிவா சொல்லுங்க..’’ என ஆர்வத்துடன் கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ  கல்லூரி மருத்துவமனை அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து மதுரையை சேர்ந்த  சிலர் மசாஜ் சென்டர் நடத்தி வந்துள்ளார்கள். கல்லூரியில் படிக்கின்ற மேல்தட்டு மாணவர்களை குறி வைத்து தொடங்கப்பட்ட இந்த மசாஜ் சென்டரில் இரவு பகலாக ஆண்களும், பெண்களும் தினசரி வந்துபோக, ஆண்களுக்கான மசாஜ் சென்டரில்  இளம்பெண்களுக்கு என்ன வேலை என்று கேள்வி எழுந்தது. இது தொடர்பான தகவல்கள்  அரசல் புரசலாக வெளியே வர இதனை வளைந்து வளைந்து கண்காணித்து வந்த போலீசார் 2 தினங்களுக்கு முன்னர் திடீரென்று அதிரடியாக மசாஜ் சென்டரில் புகுந்து கையும் களவுமாக 3 இளம் பெண்கள் உட்பட சிலரை பிடித்து அடித்து உதைத்து ஆட்டோவில் அழைத்து ஸ்டேஷன் கொண்டு வந்தனர். போலீசார் சோதனை நடத்தியதை கண்டு வீட்டின் மொட்டை மாடிக்கு ஓடிச்சென்று பதுங்கிக்கொண்ட இளம்பெண்ணையும் போலீசார் பிடித்து ஸ்டேஷன் கொண்டு வந்தனர். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் ஆஹா... ஓஹோ... பேஷ்... பேஷ்... என்று போலீசாரின் நடவடிக்கையை பாராட்டினார்கள். ஸ்டேஷனில் விடியவிடிய விசாரணை நடந்த நிலையில் வீட்டை வாடகைக்கு விட்டவர் தரப்பில் விடியவிடிய பல லட்சங்களை வாரி இறைக்க விசாரணையின் போக்கு மாறியது. காரணம் அவர் வெளிநாடு ஒன்றில் நல்ல நிலையில் இருப்பவராம், தனக்கு கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது, வீட்டிற்காக தனது பெயரில் வழக்குப்பதிவு வந்துவிடக்கூடாது என்பதுதான் அவர் வைத்த கோரிக்கையாம். விளைவு பிடிபட்ட 3 இளம்பெண்களும் தாயும், 2 மகள்களும்தான் என்று கணக்கு காட்டி வழக்குப்பதிவும் இல்லை, கைது நடவடிக்கையும் இல்லை என்று கூறி அனைவரையும் ‘‘எச்சரித்து’’ போலீசார்  வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டார்கள்.
இங்கிருந்து மசாஜ் சென்டரை இடமாற்றிவிட வேண்டும் என்று மட்டும் காவல்துறை உத்தரவிட்டதாம். இதனால் எதற்கும் அசராத கும்பல் அடுத்த இடத்தை தேடிக்கொண்டு இருக்கிறார்களாம். இளைஞர்களையும், இளம்பெண்களையும் சீரழிக்கும் இதுபோன்ற கும்பலை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய காவல்துறையே அவர்களை உரம்போட்டு வளர்ப்பது ஏனோ என்று அந்த பகுதிவாசிகள் கேள்வி எழுப்புகிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • IncomeTax_Raid_SaravanaStores

  சென்னையில் உள்ள அனைத்து சரவணா ஸ்டோரிஸ் கடைகளில் வருமான வரித்துறை சோதனை

 • Landslide_Tirupati

  திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் மண்சரிவு

 • Pelicans_wild lake_Velachery

  வேளச்சேரி-மேடவாக்கம் கூட்டு சாலையில் உள்ள காட்டு ஏரியில் உணவுக்காக காத்திருக்கும் கூழைக்கடா (பெலிக்கான்) நீர்பறவைகள்

 • Austalia_Vaccination

  ஆஸ்திரியாவில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்

 • omicron virus

  ஓமைக்ரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளில் விமான நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்