SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலையில் இருந்து நட்சத்திரங்கள் இடம் மாறப்போவதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-10-05@ 00:15:08

‘‘பேச்சாளர்களின் மூச்சு நின்றுவிடும்போல இருக்கேனு ராயப்பேட்டையில் இருந்து புலம்பல் எனக்கு கேட்கிறது. உங்களுக்கு...’’ என பேச்சை இழுத்தார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியில் பிரபல நகைச்சுவை நடிகரான சிங்கமானவரு, நாஞ்சிலானவர் பெயரை கொண்டவர் உள்பட ஏராளமான நட்சத்திர பேச்சாளர்கள் என்று ஆயிரத்து நூறு பேர் வரை இருக்காங்க. இலை கட்சியின் முன்னாள் முதல்வர்கள் இருந்தபோது பேச்சாளர்களை நன்றாக கவனித்து வந்தாங்க... அவர்களை நன்றாக தேர்தலுக்கு பயன்படுத்தினாங்க. ஆனால், சேலம்காரர், தேனிகாரர் வந்த பிறகு பேச்சாளர்களின் நிலை படுமோசமாம். இதில், நட்சத்திர பேச்சாளர்களையும் இலை கட்சியின் தலைமை கண்டுக்கொள்ளவே இல்லையாம். இப்போது கூட, இந்த பேச்சாளர்களை நடக்க உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தலையாம். இனியும் பயன்படுத்துவார்களா.. நம்மளுக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்களா... இல்ல கண்டுக்காம விட்டுடுவாங்களான்னு நட்சத்திர பேச்சாளர்கள் உள்பட அனைவருக்கும் சந்தேகம் வந்து இருக்காம். இதனால தலைமையை சந்தித்து முறையிடுவது அல்லது வேறு கட்சிக்கு செல்வது என்பது குறித்து தீவிரமாக யோசித்து வர்றாங்களாம். அது மட்டுமல்லாமல் இது தொடர்பாக சிங்கமானவரு, நாஞ்சிலானவரை ஒருங்கிணைத்து பேசிக்கொண்டிருக்கிறார்களாம். அப்புறம், ஒவ்வொரு தீபாவளி,  பொங்கல் பண்டிகைக்கு பேச்சாளர்களுக்கு ரூ.1 லட்சம் படியாக கட்சி தலைமை வழங்குவது வழக்கம். உள்ளாட்சி தேர்தலில் பிரசாரத்துக்கு அழைக்காததால வர உள்ள தீபாவளி படி கிடைக்குமா என்ற சந்தேகத்தில் இருக்காங்க. முக்கியமாக வர்ற  17ம் தேதி கட்சி தொடங்கப்பட்டு 50 ஆண்டு பொன்விழா கொண்டாடப்போறாங்க. இது தொடர்பாகவும் பேச்சாளர்கள் கிட்ட யாரும் பேசவே இல்லையாம். இதனால், எல்லா பேச்சாளர்களும் அதிர்ச்சியில் இருக்காங்க. அது மட்டுமல்லாமல் சில சினிமா நட்சத்திரங்கள் கட்சி மாறப்போறங்களாம். தங்களை ஜெயலலிதா இறந்த பிறகு யாரும் கண்டு கொள்ளவில்லை. முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற வேதனையோடு கட்சியில் இருப்பதை விட இடம் பெயர்ந்துவிடலாமா என்று யோசித்து கொண்டு இருக்க. சிலர் மூவ்மென்டை ஆரம்பிச்சுடாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பெண்களுக்கும் மாஜி அமைச்சர்களுக்கும் ஏழாம் பொருத்தம்போல...’’ - சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.
‘‘திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சி மாஜி அமைச்சர் ஒருவர் பெண் விவகாரத்தில் சிக்கியுள்ளார். அவரும், சம்பந்தப்பட்ட அந்த பெண்ணும் பேசிக்கொள்ளும் ஏழு ஆடியோ அடுத்தடுத்து வெளியானது. பணம் விவகாரத்தில் சிக்கியிருக்கும் அந்த பெண், ‘எப்படியாவது பிரச்னையை தீர்த்து வையுங்கள். இல்லையேல் நானும் எனது குழந்தைகளும் உங்கள் வீட்டு முன் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்துவோம்’ என எச்சரிக்கிறார். ஆனால், மாஜி அமைச்சரோ, செல்லமாக அசடு வழிய பேசி, அவரை சமாதானப்படுத்துகிறாராம். நேர்மையானவராக இருந்தால் சவுண்ட் விட்டிருக்கலாம். பணம் விஷயம் உண்மை என்பதால்தான் இந்த ‘பம்மாத்து’ பேச்சு என்கிறார்கள் இலை வட்டாரத்தில்,
போனில் பேசிய அந்த பெண் யார். மாஜி அமைச்சருடன் எப்போது, எந்த வகையில் தொடர்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் கட்சி மேலிடம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற கேள்வி இலை தொண்டர்கள் மத்தியில் அடுக்டுக்காக எழுந்துள்ளதாம். இந்த புகைச்சல் மாஜி அமைச்சருக்கு மட்டுமின்றி, கட்சியிலும் பெரும் கலக்கத்தை உருவாக்கியுள்ளது. இதை சுட்டிகாட்டி தான் ஏற்கனவே 2 முன்னாள் அமைச்சர்கள் சிக்கி உள்ள நிலையில், 3வதாக நம்மாளும் சிக்குவாரோ என்று பேசிக் கொள்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘விருதுநகர் மாவட்டத்தில் இலை டார்டாராக கிழித்து தொங்க விடும் வேலையை, அவங்க கட்சிக்காரங்களே செய்துவிடுவாங்க போல...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மெடல் மாவட்டத்தின் இலைக்கட்சி நிர்வாகத்தில் முந்தைய பால்வளமும், முந்தைய எம்எல்ஏவும் மோதிக்கொண்டனர். இதில், இலை கட்சி நிர்வாகிகள் இரு பிரிவுகளாக மாறி ஒருவரை ஒருவர் எதிரிபோல பார்க்கிறார்களாம். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், இவர்கள் தனித்தனியாக நடத்தி வருவதால், தொண்டர்கள் கலங்கி நின்றனர். ‘சுழி’யில் முடியும் தொகுதியில் உள்ள 6 ஒன்றியத்தினரும் ‘பால்வளத்திற்கு’ எதிராக பொங்கி, முன்னாள் எம்எல்ஏவிடம் சரணடைந்தனர். மீண்டும் மாவட்ட பொறுப்புக்கு ‘பால்வளம்’ வந்ததால், இவருடன் இணைந்தே செயல்பட்டனர். இதற்கிடையில், பால்வளமும், முன்னாள் எம்எல்ஏவும் மீண்டும் இணைந்தனர். தற்போது தனக்கு நெருக்கமாக இருந்த கிழக்கு முக்கிய நிர்வாகியுடன், பால்வளத்திற்கு மோதலாம். இந்த மோதல்தான் சமீபத்தில் முன்னாள் முதல்வர் முன் அடிதடியாக மாறியது. இப்படியே நிர்வாகிகள் மாறி, மாறி மோதிக் கொண்டால், மாவட்டத்தில் கட்சியின் நிலை கிழிந்த இலைபோல டார்டாராக கிழிந்த நிலையில்தான் பார்க்க முடியும் என்கிறார்கள் அக்கட்சியின் தொண்டர்கள்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தாமரை மண்டல தலைவர் கிலியில் இருக்க என்ன காரணம்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மலைக்கோட்டை மாவட்டத்தில் தாமரை கட்சி நிர்வாகி கடைசி பெயர் கொண்டவரான சிவமானவர் என்பவர் ஒரு மூதாட்டியிடம் இருந்து அவரது வீடு அருகில் உள்ள பல லட்சம் மதிப்பிலான நிலத்தை விலைக்கு வாங்கினாராம். அந்த இடத்தில் வீடு கட்டி குடும்பத்தோடு குடியேறி விட்டாராம். நாட்கள் ஆக ஆக மூதாட்டி வீட்டையும் சிவமானவர் அபகரிக்க திட்டமிட்டுள்ளாராம். அந்த மூதாட்டியிடம் நீ இறந்த பின்னர் உன் முழு வீட்டையும் நானே அனுபவித்துக்கொள்வேன். போலீசில் புகார் கொடுத்தாலும் போய் கொடு. நான் கட்சியில் பெரிய பொறுப்பில் உள்ளேன். மத்தியில் எங்களுடைய ஆட்சி தான் உள்ளது. என்னிடம் பெரிய பெரிய ரவுடிகள் உள்ளார்கள். என்னை யாரும் எதுவும் கேட்க முடியாது என மிரட்டியுள்ளார். உயிருக்கு பயந்த அந்த விதவை மூதாட்டி சமீபத்தில் மாவட்ட உயரதிகாரியை நேரில் சந்தித்துள்ளார். அப்போது அந்த மூதாட்டி கணவரை இழந்து தனியாக வசித்து வரும் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. பல லட்சம் மதிப்பிலான எனது சொத்தை அபகரிக்க முயற்சிக்கும் தாமரை கட்சி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவாக கொடுத்து சென்றாராம். இந்த மனுவை படித்து பார்த்த உயரதிகாரி, சம்பந்தப்பட்ட தாமரை கட்சி நிர்வாகி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறை உயரதிகாரிக்கு உத்தரவிட்டாராம்.. விதவை மூதாட்டி மனு கொடுத்த தகவல் தற்போது கசிய தொடங்கியிருப்பதால் தாமரை கட்சி நிர்வாகி கிலியில் உள்ளாராம். ரவுடிகளை கட்சியில் சேர்த்தால் இப்படிதான் நடக்கும் என்பது ஊருக்கே தெரிந்த ரகசியம்தானே...’’ என்று சொல்லி சிரித்தார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • dog-police-2

  சென்னை எழும்பூர் காவல் அருங்காட்சியகத்தில் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சி: ஆர்வமுடன் கண்டு ரசிக்கும் பள்ளி மாணவர்கள்...கை குலுக்கி உற்சாகம்..!!

 • MKStalin_Inspectetd_Thoothukudi

  தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 • IncomeTax_Raid_SaravanaStores

  சென்னையில் உள்ள அனைத்து சரவணா ஸ்டோரிஸ் கடைகளில் வருமான வரித்துறை சோதனை

 • Landslide_Tirupati

  திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் மண்சரிவு

 • Pelicans_wild lake_Velachery

  வேளச்சேரி-மேடவாக்கம் கூட்டு சாலையில் உள்ள காட்டு ஏரியில் உணவுக்காக காத்திருக்கும் கூழைக்கடா (பெலிக்கான்) நீர்பறவைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்