SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்களின் ஆட்சி

2021-10-03@ 00:28:11

கிராமங்கள்தான் இந்தியாவின் முதுகெலும்பு என்று கூறினார்  தேச தந்தை மகாத்மா காந்தி.  ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது கிராமத்தில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. ஒரு நாட்டின் அடிப்படையே கிராமம் தான். இதை உணர்ந்த தலைவர்கள் கிடைத்தால் நாடே வளம்பெறும்.  கிராமசபை கூட்டம் என்பது ஆண்டுதோறும், குடியரசு தினம் (ஜனவரி 26), தொழிலாளர் தினம் (மே1), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2)  ஆகிய 4 நாட்கள் கண்டிப்பாக நடத்த வேண்டும். தமிழகத்தில் இதற்கு முன் இருந்த அதிமுக ஆட்சி கிராமசபைகளை கூட்டாமல் இருந்தது. கடைசியாக கடந்த 2020 ஜனவரி 26ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் கிராமசபை கூட்டம் நடைபெறவே இல்லை.

கொரோனாவை காரணம் காட்டி அதிமுக அரசு அடுத்தடுத்த கூட்டங்களுக்கு தடைபோட்டது. கொரோனா பரவல் குறைந்த காலகட்டத்தில் கூட கூட்டத்தை நடத்தவில்லை. இதனால், மக்கள் கிராமசபை கூட்டங்களை அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக தமிழகம் முழுவதும் நடத்தி, மக்களுக்கான இயக்கம் தாங்கள்தான் என்ற முத்திரையை பதித்தது. இப்போது, சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில், முத்தாய்ப்பாக மதுரை மாவட்டம் பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினே நேரடியாக கலந்து கொண்டுள்ளார். முதல்வர் ஒருவர் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்பது இதுவே முதல் முறை.

அதிலும், பாப்பாபட்டியை பற்றிய வரலாறு தெரிந்தவர்கள் மனதில் அங்கு நடந்த சமூக அநீதியும், அங்கு 2006ல் சமூக நீதியை உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின்  நிலைநாட்டியதும் நினைவுக்கு வருகிறது. மதுரை மாவட்டம், செல்லம்பட்டி யூனியனுக்கு உட்பட்ட பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம், ஊராட்சிகளின் தலைவர் பதவிகள் எஸ்.சி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டன.  இதை இந்தப்பகுதிகளைச் சேர்ந்த பிற சமூகத்தினர் ஏற்காததால் 1996 முதல் இந்த ஊராட்சிகளில் தேர்தல் நடத்துவதில் சிக்கல். தேர்தல் நடந்தாலும், தேர்ந்து எடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

 இந்த சூழ்நிலையில் பெரும் முயற்சிக்கு பிறகு கடந்த 2006-ல் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோதுதான் இந்த ஊராட்சிகளுக்கு தேர்தல் சுமூகமாக நடத்தி முடிக்கப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து அங்கு தேர்தல் எந்த பிரச்னையுமின்றி நடந்து வருகிறது. இந்த பாப்பாபட்டியில் நடந்த கிராமசபை கூட்டத்தில்தான் முதல்வர் பங்கேற்றுள்ளார்.

 மற்ற ஆட்சியாளர்கள் எல்லாம் இது என் ஆட்சி, என்னுடைய ஆட்சி என்று கூறும் போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டும் இது என்னுடைய ஆட்சி அல்ல, நம்முடைய ஆட்சி, உங்கள் ஆட்சி என்று மக்களிடம் சொல்லி வருகிறார். ஆம், இது உண்மையிலேயே மக்களுக்கான ஆட்சி, இவர்தான் என்றென்றும் நம்ம முதல்வர் என்று தமிழக மக்கள் மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறார்கள். முதல்வரின் மக்கள் நலப்பணி தொடரட்டும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • dog-police-2

  சென்னை எழும்பூர் காவல் அருங்காட்சியகத்தில் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சி: ஆர்வமுடன் கண்டு ரசிக்கும் பள்ளி மாணவர்கள்...கை குலுக்கி உற்சாகம்..!!

 • MKStalin_Inspectetd_Thoothukudi

  தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 • IncomeTax_Raid_SaravanaStores

  சென்னையில் உள்ள அனைத்து சரவணா ஸ்டோரிஸ் கடைகளில் வருமான வரித்துறை சோதனை

 • Landslide_Tirupati

  திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் மண்சரிவு

 • Pelicans_wild lake_Velachery

  வேளச்சேரி-மேடவாக்கம் கூட்டு சாலையில் உள்ள காட்டு ஏரியில் உணவுக்காக காத்திருக்கும் கூழைக்கடா (பெலிக்கான்) நீர்பறவைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்