SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேறு நபருடன் பேசியதை மறைத்து என்னிடம் பேசுவதை தவிர்த்ததால் காதலியை படுகொலை செய்தேன்: கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்

2021-09-24@ 17:10:10

தாம்பரம்: வேறு நபருடன் பேசியதை மறைத்து, என்னிடம் பேசுவதை தவிர்த்ததால் காதலியை படுகொலை செய்தேன் என கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை, பாரதிபுரம், ரவி தெருவை சேர்ந்தவர் மதியழகன். மாநகர பேருந்து டிரைவர். இவருக்கு ஸ்வேதா (21) என்ற மகளும் ஒரு மகனும் உள்ளனர். ஸ்வேதா, சேலையூர் அகரம்தென் பிரதான சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு மைக்ரோபயாலஜி மற்றும் கிழக்கு தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்துவ கல்லூரியில் ஒரு ஆண்டுக்கான லேப் டெக்னீசியன் டிப்ளமோ படித்து வந்தார்.

நேற்று மதியம் ஸ்வேதா, தன்னுடன் படிக்கும் தோழி சங்கீதாவுடன் ரயிலில் குரோம்பேட்டையில் இருந்து தாம்பரம் ரயில் நிலையம் வந்தார். பின்னர், கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ரயில்வே குடியிருப்பு அருகே வந்தபோது, ஒரு வாலிபருடன் ஸ்வேதா பேசினார். வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாலிபர் திடீரென, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஸ்வேதாவின் கழுத்தில் குத்தி கொலை செய்து, தானும் கழுத்தை அறுத்து கொண்டார். இதை பார்த்து பயந்துபோன தோழி சங்கீதா கூச்சலிட்டார். இதை பார்த்ததும் ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் ஓடி வந்தனர். பின்னர் சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து ஸ்வேதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மயங்கிய நிலையில் இருந்த வாலிபரை அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது கழுத்தில் 9 தையல் போடப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது,  நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை, ஆதமங்கலம் பகுதியை ராமச்சந்திரன் (24) என்பது தெரியவந்தது.  போலீசாரிடம் ராமச்சந்திரன் அளித்த வாக்குமூலம் வருமாறு: நான், கடந்த 2019ம் ஆண்டு சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு ரயிலில் செல்லும்போது ஸ்வேதா, அவரது தாயுடன் பயணம் செய்தார். அவரை பார்த்தவுடன் எனக்கு பிடித்தது.

அவருக்கும் என்னை பிடித்திருந்தது. இருவரும் கண்ணசைவில் பேசி கொண்டோம். பின்னர் எங்களது செல்போன் எண்களை பறிமாறி கொண்டோம். மெசேஜ், வாட்ஸ்அப் என பேச தொடங்கினோம்.  நாளடைவில் காதலிக்க தொடங்கினோம். நான் பொறியியல் படிப்பை முடித்த பின்னர், கடந்தாண்டு மறைமலை நகர் பகுதியில் அறை எடுத்து தங்கி, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அடிக்கடி நேரில் சந்தித்து காதலை வளர்த்து வந்தோம். சினிமா தியேட்டர்கள், வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று தனிமையில் நேரத்தை கழித்துள்ளோம்.

இந்நிலையில் ஸ்வேதா, கிழக்கு தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் மருத்துவ கல்லூரிகளில் டிஎம்எல்டி படிப்பதற்காக சேர்ந்தார். அதற்கு பிறகு என்னிடம் பேசுவதை படிப்படியாக குறைத்து கொண்டார். பேசாதது பற்றி கேட்டதற்கு, நமது  காதல் விஷயம் வீட்டில் தெரிந்துவிட்டது. அதனால்தான் சரிவர பேச முடியவில்லை என்றார். எப்போது அவருக்கு கால் செய்தாலும் செல்போன் எண் பிஸியாகவே இருந்தது. இதனால் அவள் மீது சந்தேகம் எழுந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன் இருவரும் நேரில் சந்தித்தபோது அவளது செல்போனை சோதித்து பார்த்தேன். அதில், ஹரிணி என்ற பெயரில் ஒரு செல்போன் எண் பதிவாகியிருந்தது.

அந்த எண்ணிற்கு ஸ்வேதா  அதிக நேரம் பேசியது தெரிந்தது. அந்த செல்போன் எண்ணை என்னுடைய செல்போனில் ட்ரூ காலரில் சோதனை செய்து பார்த்தபோது டேனியல் என்ற பெயர் வந்தது.  அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியபோது, ஸ்வேதாவின் நண்பர் என கூறினார். ஸ்வேதாவிடம் கேட்டபோது, ‘என்னிடம் சண்டையிட்டு, ஏன் இவ்வளவு சீப்பாக நடந்து கொள்கிறாய். இனி உனக்கும் எனக்கும் ஒத்து வராது. இருவரும் பிரேக் செய்து கொள்ளலாம்’ என்றாள். அதிலிருந்து தொடர்ந்து என்னை விட்டு விலகி செல்ல முயற்சி செய்து வந்ததோடு என்னிடம் செல்போனில் பேசுவதையும் தவிர்த்து வந்தாள்.

இதனால் ஸ்வேதாவை கொலை செய்துவிட்டு நானும் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டு நேரில் சந்தித்து பேச வேண்டும் என கூறினேன். அவள் தவிர்த்து வந்தாள். இதனால் கடந்த ஒரு மாதங்களாக எப்படியாவது கொலை செய்ய வேண்டும் என திட்டம் தீட்டி தொடர்ந்து நேரில் சந்திக்க வேண்டுமென வற்புறுத்தி வந்தேன். அப்போது, இருவரும் காதலித்தபோது ஒருவருக்கு ஒருவர் வாங்கி கொடுத்த பரிசு பொருட்களை திரும்ப கொடுத்து விட்டு பிரிந்து விடலாம் என கூறி கிழக்கு தாம்பரத்தில் உள்ள ரயில்வே குடியிருப்பு பகுதிக்கு வரும்படி சொன்னேன். நான் ஏதாவது செய்து விடுவேனோ என்ற அச்சத்தில் சங்கீதாவை அழைத்து வந்தார்.

சங்கீதா சிறிது தூரம் நின்றிருந்தார். நாங்கள் தனியாக பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நாம் பிரிந்து செல்ல வேண்டாம் என எடுத்து கூறினேன். ஆனால் அவர் பிரிவதில் உறுதியாக இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த நான் தயாராக வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தில் குத்தி கிழித்தேன். பின்னர் மார்பு, வயிற்றுப்பகுதி என 6 இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்தினேன். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிரிழந்தார். இதை பார்த்த சங்கீதா கூச்சலிட பொதுமக்கள் என்னை பிடிப்பதற்காக ஓடிவந்தனர். அதற்குள் நான் எனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தேன். இவ்வாறு  வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Avanyapuram

  அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

 • Jallikkattu

  ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

 • Bogi_Festival_People_Celebrate

  போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

 • simla-snow-11

  உறையும் பனி...வெண்பனி போர்வையுடன் காட்சியளிக்கும் சிம்லா: குளுகுளு புகைப்படங்கள்

 • pig-heart-human-11

  உலகில் முதன்முறையாக பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்