SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் நிரந்தர ஆட்சியாக திமுக ஆட்சி அமைந்திட தொண்டர்கள் அடித்தளம் அமைக்க வேண்டும்: முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

2021-09-16@ 01:28:37

சென்னை: தமிழகத்தில் இனி நிரந்தர ஆட்சியாக திமுக ஆட்சி அமைந்திட தொண்டர்கள் அடித்தளத்தை உருவாக்க வேண்டும் என்றும், உள்ளாட்சி தேர்தலில் முழு வெற்றியை பெற கட்சியினர் தீவிரமாக உழைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக முப்பெரும் விழாவில் பேசினார். பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ம் தேதி, அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி, திமுக தொடங்கப்பட்ட செப்டம்பர் 17ம் தேதி ஆகிய இந்த மூன்று முக்கிய நிகழ்வுகளையும் இணைத்து திமுக முப்பெரும் விழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான திமுக முப்பெரும் விழா நேற்று சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. விழாவுக்கு, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். திமுக பொது செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், எம்பிக்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிற்றரசு வரவேற்புரையாற்றினார்.

விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றி பேசியதாவது: ‘பகுத்தறிவுப் பகலவன்’தந்தை பெரியாரின் பிறந்தநாள் செப்டம்பர் 17. தந்தை பெரியாரால் ஏற்றி வைக்கப்பட்ட ‘இனமானச் சுடரொளி’ பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் இன்று. தமிழகத்தில் வாழும் தமிழர்களுக்கு மட்டுமல்ல, கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கும் பாதுகாப்பு அரணாக விளங்கிக் கொண்டிருக்கும் திமுக தோன்றிய நாள் செப்டம்பர் 17. இந்த மூன்று விழாக்களையும் இணைத்து செப்டம்பர் 15ம் நாளில் ‘முப்பெரும் விழா’ நடத்தப்படுகிறது.
கலைஞரால் ‘மாணிக்கம்’என்று புகழப்பெற்ற மதிவாணன், தந்தைப் பெரியார் பெயரிலான விருதைப் பெற்றிருக்கிறார்.

பேரறிஞர் அண்ணா பெயரிலான விருதை தேனி மூக்கையா பெற்றுள்ளார். கலைஞர் பெயரிலான விருதை கும்மிடிப்பூண்டி வேணு பெற்றுள்ளார். பாவேந்தர் பெயரிலான விருதை வழக்கறிஞரான வாசுகி ரமணன் பெறுகிறார். பேராசிரியர் பெயரிலான விருதை முபாரக் பெறுகிறார். இந்த பெருமைக்குரியவர்கள், பெருமைக்குரிய விருதுகளைப் பெற்றுள்ளனர்.
‘முரசொலி சில நினைவலைகள்’என்ற தொடர் கட்டுரை 100 நாட்களாக முரசொலியில் வெளியானது. நமது அண்ணன் முரசொலி செல்வம், ‘எங்களை உருவாக்கியவர்’என்று இங்கே பலரும் சொன்னார்கள்.

என்னை உருவாக்கிய காரணகர்த்தாக்களுள் அவரும் ஒருவர். என் மீது அக்கறை எடுத்துக் கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார். இப்போதும் வழங்கிக் கொண்டிருக்கிறார். நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் நம்முடைய தலைவர் இல்லை என்ற குறையை எனக்கு இன்றைக்குப் போக்கிக் கொண்டு இருப்பவர் முரசொலி செல்வம்.  முரசொலியின் தொடக்க காலத்தில் நானும் எனது சகோதரர்களும் எப்படியெல்லாம் பணியாற்றினோம் என்பதை அண்ணன் செல்வம் சொல்லி இருக்கிறார்கள். முரசொலி என்பது தாளாக மட்டும் இல்லாமல் வாளாகவும் இன்றைக்கு நம்முடைய கைகளில் இருக்கிறது.

அவரால் வெளியிடப்பட்டுள்ள இந்தப் புத்தகம் அதற்குச் சாட்சியாக இருக்கிறது.  திமுகவினருக்கு இது பொக்கிஷம்.  ஜெயலலிதாவின் ஆட்சியில் 1992ம் ஆண்டு முரசொலி செல்வம் சட்டமன்றத்தில் கூண்டில் ஏற்றப்பட்டார். சட்டமன்ற வரலாற்றில் முன்னும் பின்னும் எடுத்துக்காட்டு இல்லை என்கிற அளவுக்கு பேரவைக்குள் கூண்டு வைக்கப்பட்டு அதில் செல்வம் ஏற்றப்பட்டார். ‘கூண்டு கண்டேன், குதூகலம் கொண்டேன்’ என்று ‘முரசொலி’யில் கலைஞர் எழுதினார். கலைஞர் பாணியில் சொல்ல வேண்டுமானால், ‘இந்த புத்தகம் கண்டேன், குதூகலம் கொண்டேன்’ என்றுதான் நான் சொல்ல வேண்டும்.

‘உங்களுக்காக உழைக்கக் காத்திருக்கிறோம், எங்களுக்கு வாக்களியுங்கள்’ என்று நாட்டு மக்களிடம் நாம் வாக்குகளைக் கேட்டோம். இந்த நான்கு மாத காலத்தில் திமுக அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்கள் உங்களுக்குத் தெரியும். இந்த நான்கு மாதகாலத்தில் நாட்டு மக்களிடையே ‘நல்லவர்கள் நாம்’ என்று பெயர் எடுத்துள்ளோம். இந்த நான்கு மாதகாலத்தில் ‘வல்லவர்கள் நாம்’ என்று பெயர் எடுத்துள்ளோம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்கள் இவர்கள் என்று பெயர் எடுத்துள்ளோம். திமுக ஆட்சி சொன்னதைச் செய்யும்’ என்ற நம்பிக்கையை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறோம்.

நான்கு மாதகாலத்தில் இத்தனைத் திட்டங்களை நிறைவேற்ற முடிகிறது என்றால் அடுத்து என்னென்ன திட்டங்கள் வரவிருக்கிறது என்று எண்ணிப் பாருங்கள். ஒவ்வொரு மாதம் முடியும்போதும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு துறையிலும் விடியல் பிறக்கப் போகிறது. கொரோனா பேரிடரில் இருந்து மக்களைக் காப்பாற்றியது தான் மாபெரும் சாதனையாகும். இப்படியாக மக்களுக்கு கொடுத்த அத்தனை வாக்குறுதிகளையும் நாம் நிறைவேற்றித் தருவோம். கடந்த ஒருமாதமாக நடந்த மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கெடுத்துப் பேசிய அமைச்சர்கள், தங்கள் துறை சார்பில் ஏராளமான அறிவிப்புகளைச் செய்துள்ளார்கள்.

அந்த பணிகள் எவ்வாறு நடக்கிறது என்று மாதம் இருமுறை ஒவ்வொரு துறையையும் நான் ஆய்வு செய்து மக்களிடத்தில் சேர்க்கின்ற கடமைதான் என்னுடைய கடமை. இதனை இங்கு சொல்வதற்கு காரணம், இன்னும் நமக்கு ஏராளமான பணிகள் காத்திருக்கின்றன. விரைவில் ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருக்கிறது. அதன்பிறகு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறோம். இவைகளில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். கோட்டையில் நாம் கையெழுத்துப் போடும் திட்டங்கள், குக்கிராமங்கள் வரை போக வேண்டுமானால் உள்ளாட்சி அமைப்புகள் முழுமையாக நம் வசம் இருக்க வேண்டும்.

வாக்களித்த மக்களுக்கும், வாக்களிக்காத மக்கள் இவர்களுக்கு வாக்களிக்கவில்லையே ஏங்கும்படியாகும் நம் பணி இருந்திட வேண்டும். இனி, தமிழ்நாட்டில் நிரந்தரமாக நம்முடைய ஆட்சிதான் நடந்திட வேண்டும். அதற்குத் தேவையான அடித்தளத்தை திமுக தொண்டர்கள் உருவாக்கியாக வேண்டும். ‘பெரியாரின் பிள்ளைகள் நாம், பேரறிஞரின் தம்பிகள் நாம், கலைஞரின் உடன்பிறப்புகள் நாம்’ என்பதைக் கட்சியிலும் ஆட்சியிலும் நிரூபித்து வண்ணமிகு தமிழ்நாட்டை உருவாக்க இந்த முப்பெரும் விழாவில் உறுதியேற்போம் என்றார்.

விழாவில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்பி மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட திமுக முன்னணியினர் பங்கேற்றனர். இந்த முப்பெரும் விழாவை மாவட்டங்களில்-ஒன்றியங்களில் இருந்து காணொலி வாயிலாக காணவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nia-23-kerala

  பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

 • ship-22

  இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

 • putin-action-protest

  புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

 • iran_ladies

  ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

 • INS_ship

  நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்