SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீட் விலக்கு

2021-09-13@ 00:34:30

தமிழகத்தில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மருத்துவ கல்லூரியில் சேருவதற்கு நீட் தேர்வு மூலமே மாணவர்கள் சேர்க்கை என்பதை ஒன்றிய அரசு சட்டமாக கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் கடந்த 2018ம் ஆண்டு முதல் தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்பட்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால், இதுவரை 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தேர்வு எழுதுவதில் நடக்கும் குளறுபடி கணக்கில் அடங்காது. தொடக்கத்தில் வெளிமாநிலங்களுக்கு சென்று கூட மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தற்போது தமிழக மையங்களில் தேர்வு எழுத மாணவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும், தேர்வு எழுதும் முன்பு நடக்கும் சோதனைகள் மாணவ, மாணவிகளை துன்பத்தில் ஆழ்த்துகிறது.

கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வை கண்டு தொடர்ந்து அச்சத்தில் உள்ளனர். 2 முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி அடைய முடியாதவர்களுக்கு நீட் தேர்வு மனரீதியாக பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. சேலம் மாவட்டம் மேட்டூரில் நேற்று நீட் தேர்வு அச்சத்தால் தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தை மீண்டும் உலுக்கியுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழகத்தில் பல்ேவறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. ஆளும்கட்சியான திமுகவும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு, தேர்தல் அறிக்கையிலும் நீட் தேர்வை ரத்து செய்திட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழுவையும் அமைத்தார். அக்குழுவும் முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்து விட்டது.

இந்நிலையில் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதா தமிழக சட்டசபையில் இன்று நிறைவேற உள்ளது. இந்தியாவின் பிற மாநிலங்களும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், அம்மாநில முதல்வர்களையும் ஒருங்கிணைத்து நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை திமுக முன்னெடுக்க உள்ளது. மேலும் தமிழக அரசின் சார்பில் சட்டரீதியான போராட்டமும் தொடர்ந்து நடக்கும் என முதல்வர் உறுதியளித்துள்ளார். நீட் தேர்வில் மாணவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள், தேர்வில் நடக்கும் முறைகேடுகள், கேள்வித்தாள் அவுட், ஆள் மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளை ஒன்றிய அரசு தொடர்ந்து உணர மறுக்கிறது. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற போக்கில் நாடு முழுவதும் நீட் தேர்வை நடத்தி முடிப்பதிலே அதன் கவனம் உள்ளது. ஒன்றிய அரசின் அலட்சியமானது தொடர்ந்து மாணவர்கள் தவறான முடிவெடுக்கவே வழிவகுக்கும். எனவே தமிழக சட்டசபை இன்று கொண்டுவரும் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பதோடு, ஒன்றிய அரசும் மாணவர்களின் வலியை உணர்ந்து செயல்படுவதே நல்லது.

Like Us on Facebook Dinkaran Daily News
 • gandhi-birthday

  காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்