SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பண்பாடு வளர்க்கும் பழங்குடிகளின் பூமி: சங்ககாலத்து ‘மழநாடு’ தான் அரியூர் என்னும் நம்ம அரூர்

2020-12-03@ 12:38:17

‘‘நிகழ்வுகளை விட, அந்த நிகழ்வுகளால் பதிந்திருக்கும் நினைவுகளே என்றென்றும் நிலைத்திருக்கும் பொக்கிஷங்கள். இப்படி பண்பாடும், கலாச்சாரமும் நிலைத்திருக்கும் தமிழ்நிலத்தில் ஒவ்வொரு பகுதியும் அளப்பரிய பெருமைகளை கொண்ட அரிய பொக்கிஷமாக திகழ்கிறது. இந்த பகுதிகள் குறித்து நாம் அறிந்த, அறியாத தகவல்களை நினைவலைகளில் சுழல வைப்பதற்காக வருகிறது இந்த ‘பிளாஷ்பேக், சிவனருள் நிரம்பிய ஊர் என்பதால் அரியூர் என்று  அழைக்கப்பட்ட இந்த ஊர், காலத்தின் சுழற்சியில் அரூர் என்று உருமாறியது.  சங்க இலக்கியங்களில் அரியூரானது மழநாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மழநாட்டின் எல்லைகளாக எருமைநாடு (தற்போதைய மைசூர்), சித்தூர் லட்டிகம், லால்குடி, சேர்வராயன்மலை போன்றவை இருந்துள்ளது. அதாவது தமிழகத்தின் தற்போதைய அரியலூர், பெரம்பலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, துறையூரை உள்ளடக்கியது மழநாடு. ஓரியும், அதியனும் ஆண்ட மழநாடு, அன்றைய காலகட்டத்தில் 180 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மிகப்பெரும் நாடாக இருந்துள்ளது.

மழவர் என்றால் தலைவன் என்று பொருள். தகடூர் நாடு என்னும் தர்மபுரியில் போர்வீரர்களாக விளங்கிய பழங்குடியினரே மழவர் என்று அழைக்கப்பட்டுள்ளனர். பதிற்றுபத்து என்ற சங்க நூலில் ‘மழவர் மெய்மறை’ என்ற தொடர் இடம் பெற்றுள்ளது இதற்கு சாட்சியமாக உள்ளது. மழநாட்டை ஆட்சி செய்த அதியனையும், ஓரியையும் ‘மழவர்பெருமகன்’ என்று புலவர்கள் போற்றி பாடியுள்ளனர்.

இப்படி மன்னராட்சியில் மகுடம் சூடிய அரூர், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஒருங்கிணைந்த பாராமஹால் என்னும் சேலம் மாவட்டத்தில் வட்டமாக இடம் பெற்றிருந்தது. 1965ம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் பிரிக்கப்பட்டபோது தனித்தாலுகாவாக உருவானது. தற்போது 165 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய மிகப்பெரும் தாலுகாவான அரூர், முக்கிய பேரூராட்சிகளில் ஒன்றாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் தற்போது அச்சல்வாடி, அக்ரஹாரம், பையர்நாயக்கன்பட்டி, செல்லம்பட்டி, சின்னாங்குப்பம், தொட்டம்பட்டி, எல்லபுடையாம்பட்டி, கோபாலபுரம், கோபிநாதம்பட்டி, ஜம்மனஹள்ளி, கே.வேட்ரப்பட்டி, கீழ்மொரப்பூர், கீரைப்பட்டி, கொக்காரப்பட்டி, கொளகம்பட்டி, கொங்கவேம்பு, கோட்டப்பட்டி, எம்.வெளாம்பட்டி, மாம்பட்டி, மருதிப்பட்டி, மத்தியம்பட்டி, மோபிரிபட்டி, நரிப்பள்ளி, பறையப்பட்டி புதூர், பெரியப்பட்டி, பே.தாதம்பட்டி, பொன்னேரி, செட்ரப்பட்டி, சிட்லிங், தீர்த்தமலை, வடுகப்பட்டி, வேடகட்டமடுவு, வீரப்பநாயக்கன்பட்டி, வேப்பம்பட்டி என்று 34 ஊராட்சி மன்றங்கள் உள்ளது.

சித்தேரிமலை,  சிட்லிங் மலை, வச்சாத்திமலை என்று மலைகிராமங்கள் சூழ்ந்த அரூர், பழங்குடியின மக்களுக்கான தனிசட்டமன்றத் தொகுதியாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறது. அரூர் சட்டமன்றத் தொகுதி 1951ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக இந்த தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற துரைசாமி கவுண்டரை தொடர்ந்து முனுசாமி கவுண்டர், மாணிக்கம், தீர்த்தகிரி, எஸ்.ஏ.சின்னராஜி, அண்ணாமலை, சபாபதி, ராஜமாணிக்கம், அபராஞ்சி, வேதம்மாள், கிருஷ்ணமூர்த்தி, டில்லிபாபு, முருகன், சம்பத்குமார் என்று பலரது குரல் சட்டமன்றத்தில் மக்களுக்காக ஒலித்துள்ளது. நகரம் என்று ஒரு தரப்பினர் கூறினாலும் இன்றும் கிராமங்களின் தொகுப்பாகவே அரூர் உள்ளது. உழைக்கும் மக்கள் நிறைந்தும், வரலாற்று பெருமைகள் நிறைந்தும் நிற்கிறது. ஆனாலும் மேம்பாடு என்பது இதுவரை இங்குள்ள மக்களுக்கு மட்டுப்படாத ஒன்றாகவே இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு மேம்பாட்டு  திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என்பதே அரூர் மண்ணின் மைந்தர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • kite_chennai

  மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!

 • poland-fish-16

  போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!

 • ruto-wins-presidency

  கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..

 • ragul-inde-15

  டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

 • independence-15

  75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்