SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராயல் சேலஞ்சர்சிடம் பணிந்தது ராயல்ஸ்: பந்துவீச்சில் மோரிஸ் அசத்தல்

2020-10-18@ 00:22:28

துபாய்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், டி வில்லியர்சின் அதிரடியால் ஆர்சிபி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அந்த அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. பெங்களூர் அணியில் சிராஜ், துபேவுக்கு பதிலாக குர்கீரத் சிங், ஷாபாஸ் அகமது (அறிமுகம்) இடம் பெற்றனர். பேட்டிங் வரிசையில் உத்தப்பா புரமோட் செய்யப்பட்டு பென் ஸ்டோக்சுடன் இணைந்து இன்னிங்சை தொடங்கினார்.

இருவரும் முதல் விக்கெட்டுக்கு 5.4 ஓவரில் 50 ரன் சேர்த்து துடிப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ஸ்டோக்ஸ் 15 ரன் எடுத்து மோரிஸ் வேகத்தில் விக்கெட் கீப்பர் டி வில்லியர்ஸ் வசம் பிடிபட்டார். அதிரடியாக விளையாடிய உத்தப்பா 41 ரன் (22 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி, சாஹல் வீசிய 8வது ஓவரின் 4வது பந்தில் பிஞ்ச்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே சாம்சன் (9 ரன்) விக்கெட்டை பறிகொடுக்க, ராயல்ஸ் அணி 69 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திடீர் சரிவை சந்தித்தது.

இந்த நிலையில், கேப்டன் ஸ்மித் - பட்லர் ஜோடி பொறுப்புடன் விளையாடிய 4வது விக்கெட்டுக்கு 58 ரன் சேர்த்தது. பட்லர் 24 ரன் எடுத்து மோரிஸ் வேகத்தில் சைனியிடம் பிடிபட்டார். கடைசி கட்டத்தில் ஸ்மித் - திவாதியா இணைந்து 46 ரன் சேர்த்தனர். ஸ்மித் 57 ரன் (36 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி மோரிஸ் பந்துவீச்சில் ஷாபாஸ் வசம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். கடைசி பந்தில் ஆர்ச்சர் (2 ரன்) அவுட்டாக, ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன் குவித்தது. திவாதியா 19 ரன்னுடன் (11 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆர்சிபி பந்துவீச்சில் மோரிஸ் 4 ஓவரில் 26 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். சாஹல் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 178 ரன் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் பெங்களூர் களமிறங்கியது. படிக்கல், பிஞ்ச் இருவரும் துரத்தலை தொடங்கினர். பிஞ்ச் 14 ரன் எடுத்து கோபால் பந்துவீச்சில் உத்தப்பாவிடம் பிடிபட்டார். படிக்கல் - கேப்டன் கோஹ்லி ஜோடி 2வது விக்கெட்டுக்கு 79 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தது. படிக்கல் 35 ரன் (37 பந்து, 2 பவுண்டரி), கோஹ்லி 43 ரன் (32 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

வள்ளல் உனத்கட்: ஆர்சிபி 13.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 102 ரன் எடுத்திருந்த நிலையில், டி வில்லியர்ஸ் - குர்கீரத் ஜோடிக்கு ராஜஸ்தான் வீரர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். 12 பந்தில் 35 ரன் தேவை என்ற இக்கட்டான நிலையில், உனத்காட் வீசிய 19வது ஓவரை டி வில்லியர்ஸ் சிதறடித்தார். அவர் முதல் 3 பந்துகளையும் சிக்சர்களாகப் பறக்கவிட்டு ராயல்சின் வெற்றிக் கனவை கலைத்தார். குர்கீரத் தன் பங்குக்கு ஒரு பவுண்டரி அடிக்க, அந்த ஓவரில் மட்டும் ஆர்சிபி அணிக்கு 25 ரன் கிடைத்தது.

அடுத்து ஆர்ச்சர் வீசிய கடைசி ஓவரின் 4வது பந்தை சிக்சருக்குத் தூக்கிய டி வில்லியர்ஸ் தனது அரை சதத்தை பூர்த்தி செய்ததுடன் வெற்றியையும் வசப்படுத்தி அசத்தினார். ஆர்சிபி 19.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 179 ரன் எடுத்து வென்றது. டி வில்லியர்ஸ் 55 ரன் (22 பந்து, 1 பவுண்டரி, 6 சிக்சர்), குர்கீரத் 19 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் பந்துவீச்சில் தியாகி, கோபால், திவாதியா 1 விக்கெட் வீழ்த்தினர். டி வில்லியர்ஸ் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • gandhi-birthday

  காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்