SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிகாசோ ஓவியம் தான் பிரியாமல் நம்முடன்... இன்று (அக்.25) பிகாசோ பிறந்தநாள்

2019-10-25@ 12:58:04

எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் அதில் மூலதனத்தை விட மூளை மிகமிக முக்கியமானது. சிறந்த தொழிலதிபராக வேண்டுமா? இன்னும் 25 ஆண்டுகளுக்கு பிந்தைய வணிக முறையை அறிந்திருக்க வேண்டும். இந்த வர்த்தக மந்திரம் அறிந்திருந்தால் நீங்கள் ஜெயிக்க மட்டுமல்ல... சாதிக்கவும் முடியும். அப்படி ஒரு மனிதர்தான் பாப்லோ பிகாசோ. உலக அளவில் அதிகமாக அறியப்பட்ட ஒரு ஓவியர்களுள் முக்கியமானவர். ஒரு தோற்றத்தை பிரதிபலிப்பது மட்டுமல்ல... அதை மாறுபட்ட முறையில் வரைந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தவர் பிகாசோ.

ஸ்பெயின் நாட்டின் மலாகா நகரில் அக்.25, 1881ம் ஆண்டு பிறந்தவர் பாப்லோ பிகாசோ. சிறுவயதிலேயே ஓவியத்தின் மீது பிகாசோவுக்கு பிரியம் ஏற்பட்டது. ஸ்பெயின் நாட்டில் பிரபலமான காளைச்சண்டை போட்டிகளை பார்க்க பிகாசோ அடிக்கடி செல்வது வழக்கம். மற்றவர்கள் மோதலை ரசிக்க, பிகாசோ காளைகளை கலை வடிவத்தில் பார்த்தார். வீட்டிற்கு சென்றதும் கடகடவென வரையத் தொடங்கினார். மகனின் ஓவியத்திறமையை பெற்றோர் பாராட்ட தவறவில்லை.

1904 முதல் 1906 வரை வரைந்த ஓவியங்கள் இளஞ்சிவப்பு, சிவப்பு நிறங்களைக் கொண்டு தீட்டப்பட்டன. பின்னர் 1904ல் பிரான்ஸ் தலைநகரான பாரீசுக்கு சென்று ஓவியங்களை வரையத்தொடங்கினார். அப்போது அவர் வரைந்த ‘லெஸ்டெமாய்ஸ்லெஸ் டி அவிக்னான்’ என்ற ஓவியம் உலகை ஸ்தம்பிக்க வைத்தது. 5 பெண்களின் நிர்வாண கோலத்தை நேர், வளைவு கோடுகள், முக்கோண வடிவங்களில் மாறுபட்ட முறையில் வரைந்திருந்தார். அச்சு அசலாக காகித காப்பியாக ஓவியம் கருதப்பட்ட அக்காலத்தில் இந்த கியூபிக் ஸ்டைல் ஓவியம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அது மட்டுமல்ல... ஓவியக்கலையில் நவீனத்தையும் ஏற்படுத்தியது.

தனது ஓவியங்கள் விலை மதிக்க முடியாத ஒன்றாக அவர் கருதினாலும், வயிற்றுப்பிழைப்பை ஓட்ட வேண்டுமே? பார்த்தார். உடனே சாலையோரங்கள் விற்க தொடங்கினார். ‘‘அட... இது என்னப்பா... இதைப்போய் வித்துக்கிட்டு இருக்கே...’’ என்று கேலி பேசினர் சிலர். ‘‘வழக்கமாக இல்லாம இது வேற மாதிரி இருக்கே...’’ என்று வாங்கிச் சென்றனர் பலர். ஏதோ நல்லா ஓவியம் வரைபவர் என்ற திறமையோடு அவர் நிற்கவில்லை. மேலும், அச்சுப்பொறியாளர், மண்பாண்ட கலைஞர், மேடை நாடகம், சிற்பி என அவர் வெளிப்படுத்திய திறமைகள் ஏராளம்.

அந்தக்கால அஷ்டவதானி அவர். அவரது பீங்கான் சிற்பங்களும் பிரசித்தி பெற்றவை. இரவில் நீண்ட நேரம் விழித்திருந்து காலையில் தாமதமாக எழுவது அவரது பழக்கம். 91 வயது வரை உயிர் வாழ்ந்தாலும், அவர் ஓவியம் வரைவதை விடவே இல்லை. ‘‘இப்படி எல்லாம் கஷ்டப்பட வேண்டுமா... போதும் ஓய்வெடுங்கள்’’ என்றபோது, ‘‘ஒரு 30 வயது இளைஞனை பார்த்தால் இந்த கேள்வி கேட்கிறீர்கள்...’’ என்று மிரள வைத்தாராம். எண்ணற்ற ஓவியங்கள் வரைந்தாலும் சிலவற்றை மட்டுமே விற்பனை செய்வாராம். காரணம்... அவரது மார்க்கெட்டிங் பிளான். நிறைய ஓவியங்கள் வந்தால், தனது ஓவியத்துக்கு பெரிய விலை கிடைக்காது. மதிப்பு இருக்காது என்பாராம். பார்த்தீர்களா? அந்தக்காலத்திலே மனிதருக்கு மாஸ்டர் மைண்ட் இருந்திருக்கிறது.

ஒரு நாளைக்கு பல மணி நேரம் நின்றுகொண்டே வரையும் ஆற்றல் இவருக்குண்டு. அமைதிக்கான அடையாளமாக புறாவை பிரபலப்படுத்தியதும் இவர்தான். ‘கொரியப் படுகொலைகள், போரும், அமைதியும்’ என்று போர்களுக்கு எதிராகவும் தூரிகை தீட்டியவர் பிகாசோ.ஓவியத்தில் அவர் காட்டிய நவீனத்தை புரிந்து கொள்ளாமல் கேட்டபோது, ‘‘குயிலின் கீதத்தை கேட்கிறீர்களா? என்ன புரிகிறது. குரலின் இனிமைதானே. அப்படித்தான் ஓவியத்தையும் ரசிக்க வேண்டும். ஆராயக்கூடாது’’ என்று பேசி எதிராக பேசுபவர்களை மடக்கத் தெரிந்த வித்தைக்காரர். வரைந்து கொண்டே வாழ்ந்தவர், தனது 91வது வயதில் ஏப்.8, 1973ம் ஆண்டு பாரீசில் உயிரிழந்தார். ஆனாலும், தனது ஓவியங்கள் வழியாக அவர் வண்ணமயமாக வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்.

ஒரு ஓவியத்தின் விலை ரூ.17 கோடி

1955ம் ஆண்டு பிகாசோ வரைந்த ‘லே பாம் தால்கே’ என்ற ஓவியம் நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் இந்திய மதிப்பின்படி ரூ.17 கோடிக்கு விலை போனது. அதுவும் வெறும் 11 நிமிடங்களில் ஏலம் குளோஸ். இதுதான் உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட ஓவியம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nia-23-kerala

  பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

 • ship-22

  இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

 • putin-action-protest

  புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

 • iran_ladies

  ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

 • INS_ship

  நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்