SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வைகுண்டராஜனுக்கு சொந்தமான இடங்களில் 5வது நாளாக ரெய்டு: ஏராளமான ஆவணங்கள் பறிமுதல்

2018-10-30@ 00:51:29

சென்னை: வைகுண்ட ராஜனுக்கு சொந்தமான இடங்களில் 5வது நாளாக நேற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து வைகுண்டராஜனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. தென் மாவட்டங்களில் தாது மணல் விற்பனையை தொழிலதிபர் வைகுண்டராஜன் செய்து வந்தார். நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள கீரைக்காரன்தட்டில் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் கடற்கரையோர பகுதிகளில் அரசு அனுமதித்த அளவை மீறி அதிகமாக தாது மணல் வெட்டி எடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக தொடர் புகார்கள் எழுந்தன. அதேநேரம், போலி கணக்குகள் மூலம் பல கோடி ரூபாய் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வரி ஏய்ப்பு செய்ததும் தெரியவந்தது.

இதை கடந்த 2017ம் ஆண்டு நெல்லை மாவட்ட ஆட்சியராக இருந்த கருணாகரன், உரிய ஆதாரங்களுடன் கண்டுபிடித்து அரசுக்கு அறிக்கை அளித்தார். இந்நிலையில் தாது மணல் ஏற்றுமதியில் பல கோடி ரூபாய் முறைகேடாக வெளிநாடுகளில் சட்ட விரோத முதலீடு செய்ததாகவும், முறையாக வருமான வரி செலுத்த வில்லை என்றும் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கடந்த 25ம் தேதி தமிழகம் முழுவதும் வைகுண்ட ராஜனுக்குச் சொந்தமான 100 இடங்களில் காலை 6 மணிக்கு ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனை, நெல்லை மாவட்டம், கீரைக்காரன்தட்டில் உள்ள விவி மினரல்ஸ் அலுவலகம், வல்லவன் விளை, ஆவுடையாள்புரம், உவரி, விவி பொறியியல் கல்லூரி, தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகா, அரசூர் கிராமத்தில் உள்ள வைகுண்டராஜன் தம்பி சுகுமாருக்கு சொந்தமான பிஎம்சி ெதாழிற்சாலை,

கீரைக்காரன்தட்டில் உள்ள வைகுண்டராஜன் மற்றும் உறவினர்களான சுகுமார், சந்திரேசன், ஜெகதீசன் ஆகியோருக்கு சொந்தமான வீடுகள், சென்னையில் திருவான்மியூர், எழும்பூர், நுங்கம்பாக்கத்தில் உள்ள விவி மினரல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் ₹8 கோடி வரை ரொக்கம் மற்றும் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் சோதனை முடிவுற்றாலும், திசையன்விளையில் மட்டும் 5வது நாளாக தொடர் சோதனை நடந்து வருகிறது. இதற்கிடையில் சென்னையில் தங்கி இருந்த வைகுண்டராஜனை, வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று விமானம் மூலம் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்று திசையன்விளையில் வைத்து சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து நேரடியாக விசாரணை நடத்தினர்

விசாரணை குறித்து அதிரடி தகவல்
வருமான வரித்துறை விசாரணை குறித்த அதிரடி தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. வழக்கமாக, வருமான வரித்துறை அதிகாரிகள் உள்ளூர் சட்டம் ஒழுங்கு போலீசாரை விசாரணைக்கு அழைத்துச் செல்வார்கள். ஆனால் கடந்த சில மாதங்களாக விசாரணைக்கு அழைத்துச் செல்வதில்லை. மத்திய போலீசை மட்டுமே அழைத்துச் சென்று வந்தனர். ஆனால் தற்போது கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு போலீஸ் உடை அணிவித்து அவர்களைத்தான் அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் திசையன்விளையில் 7 கி.மீ. தூரத்துக்கு முன்னாலேயே வைகுண்டராஜனின் ஆட்கள், அந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் மறித்து சோதனையிடுவார்கள். முன்கூட்டி கண்காணிக்கச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளையும் அப்படித்தான் மறித்தனர். இதனால் சோதனை நடத்திய அன்று, அவ்வாறு மறித்தவர்களையும், கண்காணிப்பு கோபுரத்தில் கண்காணித்துக் கொண்டிருந்தவர்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பிறகுதான் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர் என்று தெரியவந்தது.

ரெய்டு வரத்தான் செய்யும்
இதற்கிடையே, தூத்துக்குடி விமான  நிலையத்தில் வைகுண்டராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: என்னை விடுங்கள்,பசியாக இருக்கிறேன். நாளைக்கு திசையன்விளைக்கு வாருங்கள், உங்களுக்கு நிறைய  தகவல் சொல்கிறேன். என்ன வேண்டுமோ அவ்வளவும் கேளுங்கள். இப்போதைக்கு இதுக்கு மேல சொல்ல முடியாது. யாராவது பிரியாணி வாங்கி வைச்சிருக்கீங்களா சொல்லுங்க. சாப்பிட்டு சொல்றேன். வேற என்ன பதில் சொல்ல. நீங்க தகவல் இருந்தா சொல்லுங்க. ரெய்டு என்ன ரெய்டு?. வியாபாரின்னா ரெய்டு வரத்தான் செய்யும். பதில் சொல்லவேண்டியது தான். ஏதாவது ஒரு கம்ப்ளைய்ன்ட் கொடுத்தாலும் ஒரு எப்ஐஆர் போடுவாங்க, விசாரிப்பாங்க. அதுக்கு நாம ஒரு பதில சொல்வோம். அவ்வளவு  தான். இதுல என்ன இருக்கு. ரெய்டுக்கு காரணம் தொழில் போட்டியா என்னன்னு எனக்கு தெரியல. பார்த்தா தான் தெரியும். விசாரிச்சா தான் தெரியும். தொழில் போட்டிதான்னு  உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க. நான் அதையும் எடுத்துக்கிறேன். சரி  பார்ப்போம், நான் சாப்பிடல, பசிக்குது என்றவாறே புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • birds-flu-10

  பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

 • raksha-rakhi-8

  ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

 • china_taiwan

  தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

 • guinness-record-pull-ups-08

  பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

 • egypt-sun-temple-8

  எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்