பட்டாசு ஆலை வெடித்தது 38 பேர் பலி
2012-09-06@ 11:45:47

சிவகாசி : சிவகாசி அருகே நேற்று பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. 38 பேர் உடல் கருகியும் சிதறியும் பலியாயினர். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் பலர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. போர்க்களம் போல் காட்சியளித்த அப்பகுதியில் எங்கும் மரண ஓலம் கேட்டது. ஆலையில் பட்டாசுகள் வெடித்தபடி இருந்ததால் மூன்று கி.மீ சுற்றளவில் உள்ள கிராம மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியிலிருந்து ஆர்.ஆர்.நகர் செல்லும் சாலையில் உள்ளது முதலிப்பட்டி கிராமம். அங்கு ஓம்சக்தி பயர் ஒர்க்ஸ் என்ற பெரிய பட்டாசு ஆலை உள்ளது. பால் பாண்டி என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். ஆலையில் 45 சிறு சிறு அறைகள் இருந்தன. தீபாவளி விற்பனைக்காக பேன்சி ரக வெடிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வந்தது. ஒரு அறையில் 4 பேர் வீதம் 180 பேர் பணியாற்றினர். ஆலை வளாகத்தில் மொத்தம் 250க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்தனர்.
பகல் 12.10 மணிக்கு ஒரு அறையில் வெடிகளை காய வைத்தபோது திடீரென ஏற்பட்ட உராய்வில் வெடிமருந்துகள் தீப்பற்றி வெடித்து சிதறின. உடனே தொழிலாளர்கள் அலறியடித்து ஓடினர். வெடிகள் தொடர்ந்து வெடித்ததில் அடுத்தடுத்த அறைகளுக்கும் வேகமாக தீ பரவியது. ஒவ்வொரு அறையாக குண்டு வெடிப்பது போன்ற சத்தத்துடன் வெடித்து சிதறியது. எங்கும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. வெடிமருந்து துகள்களும் கட்டிட சிதறல்களால் ஏற்பட்ட தூசும் பரவி எல்லாமே மங்கலாக தெரிந்தது. ஒரு புறம் வெடி சத்தமும் மறுபக்கம் மரண ஓலமும் அப்பகுதியே பெரிய போர்க்களம் போல் காட்சியளித்தது. இதனால் மீட்புக்கு யாரும் அருகில் செல்ல முடியவில்லை. அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் பதறியபடி விரைந்து ஓடிவந்தும் பக்கத்தில் செல்ல முடியாமல் தவிப்புடன் பார்த்துக் கொண்டு நிற்க நேரிட்டது.
ஆலையில் வாசலை ஒட்டி வெடிமருந்து சேமிப்பு அறை இருந்தது. அங்கு பேன்சி ரக வெடிகளுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை குவித்து வைத்திருந்தனர். அடுத்தடுத்த அறைகள் வெடித்து சிதறிய தீப் பொறி, வெடிமருந்து சேமிப்பு அறையிலும் விழுந்தது. 1.15 மணிக்கு அந்த அறை பயங்கரமான சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்போது ஆயுதக்கிடங்கு வெடித்து சிதறியதுபோலவே தீ ஜுவாலை 200 மீட்டர் தூரம் வரை பறந்து சென்றன.
வேடிக்கை பார்த்து கொண்டிருந்த 5 பேர் தீயில் சிக்கி பலியாயினர். ஆலையின் முன்புறம் திரண்டிருந்த 26 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாயினர். அப்பகுதியில் ஆங்காங்கே உடல் கருகி பலர் பிணமாக கிடந்தது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை சணல் பைகளில் வாரி எடுத்து சென்று காப்பாற்ற முயன்றனர். சிலர் கைகளில் தூக்கிச் சென்றனர். அப்போது, உடல் கருகி சதைகள் தொங்கியபடியும் ரத்தம் சொட்ட சொட்ட உயிருக்கு போராடியது கொடூரமாக இருந்தது.
பட்டாசு ஆலையில் பலரின் உடல்கள் மண்ணில் புதைந்தும் கருகியும் ஆங்காங்கே கிடந்தன. இந்த கோர விபத்தில் 38 பேர் பலியாயினர். 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மாலையில்தான் ஆலை வளாகத்திற்குள் தீயணைப்பு படையினரும் கிராம மக்களும் மீட்புப்பணிக்கு செல்ல முடிந்தது. அதுவரை தீ எரிந்தபடி இருந்தது.
தீயணைப்பு படையினர் சென்று பார்த்தபோது 40 அறைகளும் இடிந்து தரைமட்டமாகி இருந்தன. 3 மணி நேரம் வரை போராடி தீயை அணைத்தனர். இதுவரை காணாத பெரிய விபத்தை நேரில் கண்ட சுற்றுவட்டார மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சிவகாசி, விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, மதுரை அரசு மருத்துவமனைகளில் காயமடைந்தவர்கள் சேர்க்கப்பட்டனர்.
10 ஆண்டுகளில் நடந்த பட்டாசு ஆலை விபத்து
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் பிற பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த முக்கியமான பட்டாசு விபத்துகள்:
24.9.2002
கோவில்பட்டி அருகே முடக்கமிட்டான்பட்டி பட்டாசு தீ விபத்தில் 16 பேர் பலி. 34 பேர் காயம்.
2.7.2005
சிவகாசி மீனாம்பட்டி விபத்தில் 20 பேர் பலி. 15 பேர் காயம்.
22.2.2006
சிவகாசி பர்மா காலனி விபத்தில் 12 பேர் பலி.
12.6.2007
சிவகாசி நாராயணபுரம் விபத்தில் 4 பேர் பலி.
7.7.2009
மதுரை அருகே வடக்கம்பட்டி விபத்தில் 19 பேர் பலி.
20.7.2009
சிவகாசி நமஸ்கரித்தான்பட்டி விபத்தில் 18 பேர் பலி.
27.7.2009
சிவகாசி விபத்தில் 3 பேர் பலி.
16.6.2010
சிவகாசி விபத்தில் 7 பேர் பலி.
24.9.2010
சிவகாசி விபத்தில் ஒருவர் பலி.
21.1.2011
விருதுநகர் விபத்தில் 8 பேர் பலி.
26.4.2011
சிவகாசி விபத்தில் 2 பேர் பலி.
29.6.2011
தூத்துக்குடி குரும்பூரில் 4 பேர் பலி.
5 அமைச்சர்கள் குழு விரைவு
இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் உதவி
சென்னை : முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள முதலிப்பட்டியில் தனியார் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வெடிவிபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த வெடிவிபத்தில் 35 பேர் காயம் அடைந்து, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மதுரையில் இருந்து மருத்துவர்கள் குழு ஒன்றை அனுப்பி இவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த துயர சம்பவம் குறித்து எனக்கு தகவல் கிடைத்தவுடன், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், ராஜேந்திர பாலாஜி செல்லப்பாண்டியன் ஆகியோரை உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் மற்றும் காயமடைந்து மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூற அனுப்பி வைத்துள்ளேன்.
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார். அமைச்சர்கள் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சென்று இறந்தவர் களின் உறவினர்களுக்கும், காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கும் ஆறுதல் கூறினர். பிறகு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.
*சிவகாசியில் 9 ஆயிரத்துக்கு அதிகமான பட்டாசு ஆலைகள் உள்ளன.
*இந்தியாவின் பட்டாசு உற்பத்தியில் 90 சதவீதம் சிவகாசியில் உற்பத்தி ஆகிறது.
*இந்தியாவின் தீப்பெட்டி உற்பத்தியில் 80 சதவீதம் சிவகாசியில்தான் உற்பத்தி ஆகிறது.
*பட்டாசு, தீப்பெட்டி உற்பத்தி தவிர அச்சு துறையிலும் சிவகாசி முன்னணியில் உள்ளது.
*உலகிலேயே ஆப்செட் அச்சகங்கள் அதிகம் உள்ள நகரங்கள் பட்டியலில் சிவகாசிக்கு இரண்டாவது இடம். 400க்கும் மேற்பட்ட அச்சகங்கள் இங்கு உள்ளன.
*இந்த நகரில் வேலை இல்லா திண்டாட்டம் என்பதே கிடையாது. எல்லோருக்கும் ஏதாவது ஒரு வேலை கண்டிப்பாக கிடைக்கும்.
*இங்குள்ள மக்களின் சுறுசுறுப்பை பார்த்து குட்டி ஜப்பான் என்று பெயர் சூட்டினார் நாட்டின் முதல் பிரதமர் நேரு.
மேலும் செய்திகள்
தருமபுரி அருகே பண்ணையில் மின்னல் தாக்கியதால் 5,000 கோழிகள் தீயில் கருகி நாசம்
ரூ.24.98 கோடி நிதி ஒதுக்கீடு: வைகை அணை-பேரணை இடையே பாசன கால்வாய் சீரமைப்பு பணி தீவிரம்
கம்பத்தில் இருந்து கேரள மாநிலத்தின் புதிய வழித்தடங்களில் அரசு பஸ் இயக்கப்படுமா?: ஏலத்தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், மக்கள் எதிர்பார்ப்பு
காவல்துறையில் பயன்படுத்தும் வாகனங்களை எஸ்பி., ஆய்வு
பைக்காரா அணையின் கரையோரத்தில் இறந்து கிடந்த பெண் புலி
குன்னூர் ரன்னிமேடு ரயில் நிலையம் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி