மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது: அதிமுகவின் விசுவாசமுள்ள தொண்டர்கள் உழைப்பால், ஜெயலலிதாவின் உத்தரவால் மூன்று முறை முதல்வராக இருந்த அதிமுகவின் விசுவாச தலைவர் என்று கூறி வரும் ஒருவர்(ஓபிஎஸ்), சமீபத்தில் திமுக மீண்டும் 2026ல் ஆட்சிக்கு வரும் என்று வாய் கூசாமல் கூறுகிறார். அப்போதே கோடிக்கணக்கான தொண்டர்களின் இதயம் உடைந்து ரத்தம் வடிகிறது.
அவருக்கு தெரியுமா தெரியாதா? தனக்கு பதவி இல்லை என்று சொன்னால், கோயிலாக வணங்குகிற அதிமுக தலைமைக் கழகத்தையே சுக்கு நூறாக அடித்து உடைத்து சிதைத்தார். அப்போதே தொண்டர்கள் இதயம் சிதைந்தது அவருக்கு தெரியுமா தெரியாதா? ஜெயலலிதா நம்மோடு இல்லை என்ற ஒரே காரணத்திற்காக எதையெல்லாம் அதிமுக தொண்டர்கள் வெறுப்பார்களோ, அருவருப்பார்களோ அதை எல்லாம் தொடர்ந்து எந்த அச்சமும் இல்லாமல் கூச்சமும் இல்லாமல் நாடகத்தை அரங்கேற்றி வருகிறாரே அந்த விசுவாச தலைவர். இத்தனை களேபரங்கள் எதற்காக? ஒன்றும் இல்லை.
அதிகாரத்திற்காகத்தான். தங்களுக்கு ஜெயலலிதா கொடுத்த அடையாளத்தை தொலைத்துவிட்டு சிலர் வீதியில் (சசிகலா, டிடிவி) உள்ளனர். தொண்டர்களால் புறக்கணிக்கப்பட்டு, மக்களால் புறக்கணிக்கப்பட்டு, இன்றைக்கு தங்களுக்கு முகவரி கொடுத்த இயக்கத்தை சிதைப்பதற்கு, வியூகம் அமைத்துக் கொண்டு வீதியிலே அலைகிறார்கள். இப்போது கடைசியாக பசும்பொன்னில், அரசியல் நாடகத்தை, தேர்தல் வியூகத்தை, கருப்பு வரலாற்றை, சந்திப்பு என்கிற பெயரில் திட்டமிட்ட நாடகத்தை அரங்கேற்றி ஒரு நாள் பரபரப்பு செய்தியை உருவாக்கி இருக்கிறார்கள்.
அரசியலிலே இது போன்ற பல நாடகங்களை இந்த தமிழ்நாடு கண்டிருக்கிறது. அரசியலிலே கோலோச்சுபவர்கள் தங்கள் பாதை மாறுகிறபோது, தங்கள் பாதை விலகுகிற போது, லட்சிய பாதையில் இருந்து விலகி அரசியலில் பூஜ்ஜியங்கள் ஆகியுள்ளார்கள். ஆகவே, அரசியலிலே பூஜ்ஜியங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ராஜ்ஜியங்கள் அமைத்ததாக வரலாறு கிடையாது. இன்றைக்கு தொண்டர்களால் பசுந்தோல் போர்த்திய புலியாக தான் பார்க்கப்படுகிறது. எத்தனை, எத்தனை துரோக நாடகத்தை நீங்கள் அரங்கேற்றினாலும் ஒருபோதும் தொண்டர்கள் நம்ப மாட்டார்கள்.
எத்தனை விளக்கங்களை கொடுத்து நீலி கண்ணீர் வடித்தாலும் உண்மை சுடத்தான் செய்யும். ஆகவே ஒரு சாமானியர், ஒரு எளியவர், ஒரு தொண்டர், நாடாள முடியுமா? அதிமுகவை கட்டிக் காக்க முடியுமா? என்ற கேள்விக்கு மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜெயலலிதா ஆட்சி மலரும். சில பூஜ்ஜியங்களால் ராஜ்ஜியங்களுக்கு தடை போட முடியாது. பூஜ்யம் பூஜ்ஜியமாக இருக்குமே தவிர, ராஜ்ஜிய கனவு நனவாகாது. கட்சியால் நீக்கி வைக்கப்பட்ட ஒரு நபர் (செங்கோட்டையன்) இன்றைக்கு விளக்கம் கொடுக்கிறார்.
அந்த நபர் இதே தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெறுகிற திமுக ஆட்சி கண்ணியமிக்க ஆட்சியாக நடைபெறுகிறது என்று பாராட்டு சான்றிதழ் தந்துவிட்டு, ஜெயலலிதாவின் ஆட்சி அமைக்க ஒன்று கூடுவோம் என்று கூறுகிறார். தொண்டர்களும், தமிழ்நாட்டு மக்களும் இந்த துரோக நாடகத்தை ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழக மக்கள் மனதிலும் சட்டசபையிலும் பதிவிருக்கிறது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு உங்கள் பதவி வேட்டைக்காக ஆடிய ஆட்டங்களை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களால், அதிமுகவிற்கு எந்த சலசலப்பையும் ஏற்படுத்த முடியாது. சறுக்கியவர்கள் எல்லாம் சாதித்ததாக வரலாறு இல்லை. இவ்வாறு பேசியுள்ளார்.
