Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

குடிபோதையில் வீட்டு முன் ரகளை; வாலிபரை சரமாரியாக குத்திக்கொன்ற சென்னை ஐ.டி. ஊழியர், மனைவி: திருமங்கலம் அருகே பரபரப்பு

திருமங்கலம், செப். 3: திருமங்கலத்தில் குடிபோதையில் வீட்டு முன்பு ரகளை செய்த வாலிபரை, கத்தியால் குத்திக் கொன்ற சென்னை ஐடி ஊழியர் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் முகமதுஷாபுரத்தில் உள்ள 4வது தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன்(41). சென்னை ஐடி நிறுவன ஊழியர். இவரது மனைவி சிந்துஜா (37). இரு மகன்கள் உள்ளனர். பேரையூர் அருகே காளப்பன்பட்டியை சேர்ந்தவர் பாண்டித்துரை (31). சேடபட்டி பகுதியில் உள்ள சோலார் பிளாண்டில் வேலை செய்து வந்தார். திருமணமானவர்.

நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் ராஜேஷ்கண்ணன் வீட்டின் முன்பு பாண்டித்துரை மது போதையில் ரகளை செய்தார். இதை ராஜேஷ்கண்ணன் தம்பதி கண்டித்துள்ளனர். ஆனால் பாண்டித்துரை தொடர்ந்து ரகளை செய்தவண்ணம் இருந்தார். இதனால் பாண்டித்துரைக்கும், அவர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜேஷ்கண்ணனும், சிந்துஜாவும் சேர்ந்து, பாண்டித்துரையை கத்தியால் சரமாரியாக குத்தி கம்பியால் தாக்கினர். இதில் அவருக்கு இடதுபக்க வயிற்றிலும், முதுகுப்பகுதியிலும் படுகாயம் ஏற்பட்டது.

ரத்த வெள்ளத்தில் கிடந்த பாண்டித்துரையை, அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியில் பாண்டித்துரை இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் திருமங்கலம் டவுன் போலீசார், வழக்குப்பதிந்து ராஜேஷ் கண்ணன், சிந்துஜா ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஜேசிபி ஆபரேட்டர் ஓட ஓட வெட்டிக்கொலை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அடுத்த கொந்தகை அருகே இலந்தைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் அழகப்பன் மகன் ஆதிகண்ணன் (24). ஜேசிபி ஆபரேட்டர். இவரது மனைவி சூரியகலா. தம்பதிக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளனர். இவர் நேற்று காலை டூவீலரில் இலந்தைகுளத்தில் இருந்து புறப்பட்டு கீழடி வழியாக மதுரை நோக்கி டூவிலரில் சென்றுக் கொண்டிருந்தார். காலை 7.45 மணியளவில் கீழடி அருகே பள்ளிச்சந்தைபுதூர் பகுதியில் சென்றபோது பின்னால் 3 டூவீலர்களில் 7 பேர் கொண்ட கும்பல், அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஆதிகண்ணனை துரத்திச் சென்று கீழ் தள்ளியது.

இதையடுத்து ஆதிகண்ணன் அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் புகுந்து தப்பியோட முயன்றார். ஆனால், விடாமல் தொடர்ந்து துரத்தி சென்ற அக்கும்பல், அவரை சரமாரியாக வெட்டி கொன்று தப்பியது. முன்விரோதத்தால் கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என கீழடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பிய கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.