தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே கூர்க்காம்பட்டியைச் சேர்ந்தவர் வெள்ளையன் மகன் ஸ்ரீதரன்(24), பிஇ பட்டதாரியான இவர் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்தார். கடந்த 29ம் தேதி, கடைவீதிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக, மறுநாள் (30ம் தேதி) பெற்றோர் ஏரியூர் போலீசில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை, அப்பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் உள்ள விவசாய நிலத்தில், ஸ்ரீதரின் உடல் மீட்கப்பட்டது. மின்வேலியில் சிக்கி அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால், அவர் அடித்து கொலை செய்யப்பட்டு மின்வேலியில் சிக்கியது போல் சித்தரிக்கப்பட்டு இருக்கலாம் என்று உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஸ்ரீதரின் உறவினர்கள் நேற்று ஏரியூர் போலீசாரிடம் முறையிட்டபோது, சரியான பதில் கிடைக்காததால், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், காவல் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

