சந்தேகப்பட்டதால் வாக்குவாதம் பஸ் ஸ்டாண்டில் தோழியை தாக்கிய வாலிபருக்கு தர்ம அடி
ராசிபுரம் : நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை சேர்ந்தவர் பிரவீன்குமார்(30). இவரும், தோழியான அத்தனூரை சேர்ந்த 28 வயது பெண்ணும், ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்டில் பஸ்சிற்காக காத்திருந்தனர். அப்போது, இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றி, ஒருவரை ஒருவரை தாக்கிக் கொண்டனர். அப்போது, பிரவீன்குமார் அந்த பெண்னை சரமாரியாக தாக்கினார்.
இதனை கண்ட அங்கிருந்த மக்கள், பிரவீன்குமாரை பிடித்து தர்மஅடி கொடுத்து, அந்த பெண்ணை மீட்டனர். இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடம் சென்ற ராசிபுரம் போலீசார், பிரவீன்குமாரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண்ணை, சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தாக்குதலுக்கு ஆளான பெண் கூறுகையில், ‘எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது.
கணவரை பிரிந்து வசிக்கும் நான், விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு பதிவு செய்துள்ளேன். இந்நிலையில், பிரவீன்குமார் என்னுடன் கடந்த சில மாதங்களாக நட்பாக பழகி வந்தார்.
என்னை திருமணம் செய்வதாக கூறி வந்தார். என்னிடம் நகைகளை கேட்டு வாங்கி கொண்டு, தற்போது வேறு ஒருவருடன் எனக்கு தொடர்பு இருப்பதாக கூறி, சரமாரியாக தாக்கினார்,’என்றார்.