Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கேரள நாட்டிளம் பெண்களுடனே!

தனியாகப் பயணம் செய்யும் ஆசை பல பெண்களுக்கு இருக்கிறது. ஆனால் பாதுகாப்பு, தங்குமிடம், போக்குவரத்து, புதிய ஊரைப் பற்றிய அறிமுகம், குறிப்பாக பாதுகாப்பு போன்ற கேள்விகள் அந்தப்

பயணத்தைத் தள்ளிப்போடச் செய்கின்றன. இந்தத் தடைகளைக் குறைக்க, கேரள சுற்றுலாத்துறை “பெண்களுக்கு உகந்த சுற்றுலா” (Women-Friendly Tourism) முயற்சியை முன்னெடுத்து வருகிறது.

இந்த முயற்சியின் சிறப்பு, பெண் பயணிகளுக்கான வசதிகளோடு நின்றுவிடாமல், உள்ளூர் பெண்களையும் சுற்றுலாத் துறையின் பங்குதாரர்களாக மாற்றுவதுதான். சுற்றுலா ஒருங்கிணைப்பு, வழிகாட்டுதல், தங்குமிட நிர்வாகம், வாகனம் ஓட்டுதல் போன்ற பணிகளில் அவர்களுக்குப் பயிற்சியும் வாய்ப்பும் அளிக்கப்படுகிறது. அதனால் வெளியூரிலிருந்து தனியாக வரும் பெண், உள்ளூர் பெண்ணின் உதவியையும் துணையையும் பெற முடிகிறது.

கேரளாவின் பொறுப்பான சுற்றுலா (Responsible Tourism) திட்டங்கள், இடங்களைப் பார்த்துவிட்டுத் திரும்புவதோடு நின்றுவிடாமல், அந்த மக்களின் வாழ்க்கை முறையை நேரில் அறியும் வாய்ப்பைத் தருகின்றன. அவற்றில் சில:

உள்ளூர் பெண் வழிகாட்டியுடன் கிராமத்தைச் சுற்றிப்பார்த்தல்.

பாரம்பரிய கேரள உணவுத் தயாரிப்பில் பங்கேற்றல்

கைவினைப் பொருட்கள், நெசவு, மண்பாண்டம், கயிறு திரித்தல், படகு சவாரி போன்ற பாரம்பரியத் தொழில்களை நேரில் காணுதல்.

மாலையில் கதகளி, மோகினியாட்டம், களரி போன்ற கலை நிகழ்ச்சிகளைக் காணுதல்.

சில பகுதிகளில் தெய்யம் போன்ற தனித்துவமான சடங்குக் கலைகளைக் காணுதல்.

இப்படி அமையும் பயணம், ஒரு இடத்தின் உணவு, கலை, தொழில், மக்கள் ஆகிய அனைத்தையும் நெருக்கமாக அறியும் அனுபவமாக மாறுகிறது.

மூன்று நாள் பயணத் திட்டம் எனில்

நாள் 1: கிராமத்தை அறிதல்

உள்ளூர் பெண் வழிகாட்டியுடன் கிராமச் சுற்றுலா. பாரம்பரிய வீடுகள், விவசாயம், அன்றாட வாழ்க்கையைப் பார்த்தல். குறிப்பாக அவர்களின் அகழ்வாராய்ச்சிகள் குறித்து அறிதல்

உள்ளிட்டவை அடங்கும்.

நாள் 2: உணவு, கைவினை, கலை

உள்ளூர் பெண்களுடன் சேர்ந்து பாரம்பரிய உணவு தயாரித்தல். பின்னர் கைவினை அல்லது நெசவுத் தொழிலைப் பார்வையிடுதல். மாலையில் பாரம்பரியக் கலை நிகழ்ச்சி.

நாள் 3: இயற்கையும் வரலாறும்

இயற்கைச் சுற்றுலா அல்லது வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள். மாலையில் உள்ளூர்ச் சந்தைகள், கலைப்பொருள் விற்பனை நிலையங்கள். ஒருவேளை இரவு திட்டம் எனில் ‘கும்பலாங்கி நைட்ஸ்' உள்ளிட்ட ப்ளூ கடல் பயணம் கூட திட்டமிடலாம்.

ஒரு ஆலோசனை: முழுப் பயணத்தையும் தனியாக ஏற்பாடு செய்வதை விட, கேரள சுற்றுலாத்துறையின் அங்கீகாரம் பெற்ற அல்லது பொறுப்பான சுற்றுலா அமைப்புகளுடன் இணைந்த உள்ளூர் சேவைகளைப் பயன்படுத்துவது வசதியையும், நம்பகத்தன்மையையும் கூட்டும்.

பயணத்துக்கு முன் செய்ய வேண்டியவை’ ...

தங்குமிடத்தை முன்கூட்டியே பதிவு செய்து, மற்ற பயணிகளின்

மதிப்பீடுகளைப் படியுங்கள். குறிப்பாகப் பெண் பயணிகளின் அனுபவங்களைக்

கவனியுங்கள்.

முகவரி, பயணத் திட்டம், போக்குவரத்து விவரங்களை குடும்பத்தினர் அல்லது நம்பகமான நண்பர்களிடம் பகிருங்கள். பயணத்தின்போது லைவ் லொகேஷனையும் பகிரலாம்.

இரவு நேரப் பயணங்கள், தனிமையான இடங்கள் ஆகியவற்றைத் தவிர்த்து, இருட்டுவதற்குள் தங்குமிடம் திரும்பும்படி திட்டமிடுங்கள்.

பயண நாட்களில் மழைக்காலம், உள்ளூர் விழாக்கள் போன்றவற்றைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். பொதுவாக கேரளாவில் மழைக்காலச் சுற்றுலா (Monsoon Tour) தற்போது பிரபலம். அதற்கான ஆயத்தப் பணிகளையும் சுற்றுலாத் துறை மேற்கொள்வதாகவும் சுற்றுலாத் துறை அமைச்சர் பி.சி.விஷ்ணுநாத் தெரிவித்துள்ளார். எனவே பொதுவாக ஒரு மாநிலம் விட்டு மாநிலம் செல்கையில் அந்தந்த மாநிலச் சுற்றுலாத் துறை உதவிகளை பெறத் தயக்கம் காட்ட

வேண்டாம்.

அவசர உதவி எண்கள்

இவற்றை முன்கூட்டியே உங்கள் கைப்பேசியில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்:

112 : அனைத்து அவசர உதவிகள்

1091 : பெண்கள் காவல் உதவி

181 : பெண்கள் உதவி எண்

108 : மருத்துவ அவசர உதவி

(ஆம்புலன்ஸ்)

101 : தீயணைப்பு

எங்கே தொடர்புகொள்வது?

உள்ளூர் கலாசார அனுபவங்கள் மற்றும் சுற்றுலாத் தொகுப்புகள் குறித்த தகவல்களுக்கு, கேரள சுற்றுலாத்துறையின் பொறுப்பான சுற்றுலாப் பிரிவைத் தொடர்புகொள்ளலாம்.

பெண்களுக்கு உகந்த சுற்றுலா முயற்சிகள் பற்றிய தற்போதைய தகவல்களை கேரள சுற்றுலாத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் பார்க்கலாம்.

முடிவுரை

இந்த முயற்சியின் முக்கிய அம்சம், பெண்களைப் பயணிகளாக மட்டுமின்றி, சுற்றுலாத் துறையின் பார்ட்னராகவும் மாற்றுவதுதான். ஒரு பெண் தனியாக கேரளாவுக்குச் செல்லும்போது,

அவருக்கு உதவக்கூடிய இன்னொரு பெண் அங்கே இருக்கிறார் என்பது பெரிய

நம்பிக்கையைத் தருகிறது.

அதனால், அடுத்த முறை தனிப் பயணத்தைத் திட்டமிடும்போது ‘‘எங்கே தங்குவது?” என்பதோடு, ‘‘அந்த ஊரின் கலாசாரத்தை எப்படி அனுபவிப்பது? அங்குள்ள பெண்களுடன் எப்படி இணைவது?” என்பதையும் சேர்த்துக் கேளுங்கள். அப்போது இது ஒரு பாதுகாப்பான பயணமாக மட்டுமல்லாமல், ஒரு பெண் இன்னொரு பெண்ணின் வாழ்க்கையையும் கலாசாரத்தையும் அறியும் புதிய பயண அனுபவமாகவும் மாறும்.

- ஷாலினி நியூட்டன்