Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

ஒருதலை காதலால் விபரீதம்; பெட்ரோல் ஊற்றி இளம்பெண் எரித்து கொலை செய்யப்பட்ட கொடூரம்: புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரி: ஒருதலை காதல் விவகாரத்தில் இளம்பெண் உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்டார். புதுவை காவல்நிலையம் அருகே நடந்த இந்த சம்பவத்தில் வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகர், அசோக் வீதியை சேர்ந்தவர் ரவி மகள் சர்மிளா (28). புதுவை அண்ணா சாலையில் உள்ள பிரபல தனியார் துணிக்கடையில் வேலை செய்தார். இவருக்கும், இந்திரா நகரை சேர்ந்த டிரைவர் ஜோசப் (36) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஜோசப், திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.

இவரது நடவடிக்கை சர்மிளாவுக்கு பிடிக்கவில்லை. இதனால், அவரிடம் பேசுவதை நிறுத்தினார். ஆனால், ஜோசப் அவரை திருமணம் செய்ய ஆசைப்பட்டு தொல்லை கொடுத்து வந்தார். அவர் வேலை செய்யும் இடத்துக்கு சென்றும் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சர்மிளா பெரியகடை, ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஜோசப்பை அழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

இந்நிலையில் நேற்றிரவு சர்மிளா வேலையை முடித்து விட்டு ஒதியஞ்சாலை காவல் நிலையம் அருகே உழவர்சந்தை வழியாக வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, ஜோசப், தனது நண்பருடன் சர்மிளாவை பைக்கில் பின் தொடர்ந்து வந்து, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தியுள்ளார். ஆனால் சர்மிளா பேசாமல் சென்றுள்ளார். ஆத்திரமடைந்த ஜோசப், ஏற்கனவே ஒரு பாட்டிலில் வாங்கி தயாராக வைத்திருந்த பெட்ரோலை அவரது மீது ஊற்றி தீ வைத்தார். உடல் முழுவதும் தீ பரவியதில் அலறி துடித்தார். இதனை பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் திகைத்து ஓடினர். ஒரு சிலர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். படுகாயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு புதுவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே ஒதியஞ்சாலை போலீசில் ஜோசப் நேற்றிரவு சரணடைந்தனர். பெட்ரோல் ஊற்றி தீ வைக்கும் போது ஜோசப் கையிலும் தீக்காயம் ஏற்பட்டதால் அவரை ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சீனியர் சீனியர் எஸ்.பி. கலைவாணன், எஸ்.பி. ஸ்ருதி ஆகியோர் நேரில் சென்று விசாரித்தனர். சம்பவம் தொடர்பாக சர்மிளாவிடம் போலீசார் புகார் பெற்று, ஜோசப் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், 80 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த சர்மிளா இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக போலீசார் மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.