கோடை விடுமுறை என்றாலே பெரும்பாலான மாணவர்களுக்கு சுற்றுலா, விளையாட்டு, ஓய்வு போன்றவைதான் நினைவுக்கு வரும். ஆனால் கோவாவைச் சேர்ந்த பள்ளி மாணவி கிரேஸ் டி சோசா, கடந்த விடுமுறையை தனது வாழ்க்கையின் முதல் தொழில்முனைவு பயணமாக மாற்றியிருக்கிறார். பள்ளியில் படித்து வரும் கிரேஸுக்கு சிறு வயதிலிருந்தே இயற்கை உணவுகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை மீது அதிக ஆர்வம் இருந்தது. குறிப்பாக வீட்டில் வளர்ந்திருந்த முருங்கை மரங்களே உற்ற தோழனாக, தோழியாக மாற இன்று மிகச்சிறு வயதில் பெண் தொழில் முனைவோராக மாறியிருக்கிறார் கிரேஸ்.
கோவாவைச் சேர்ந்த 13 வயது சிறுமியான கிரேஸ் டி சோசா, தனது கோடை விடுமுறை நாட்களைப் பயனுள்ள முறையில் கழிப்பதற்காகத் தனது வீட்டுத் தோட்டத்திலிருந்த முருங்கை மரங்களைப் பயன்படுத்தி ஒரு புதிய சுயதொழிலைத் தொடங்கியுள்ளார். மாபுசாவில் உள்ள செயின்ட் மேரிஸ் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் கிரேஸ், தாவரங்களின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். விடுமுறை நாட்களில் சாதாரணமாகப் பொழுதுபோக்குவதைத் தவிர்த்து, தனது கைகளால் இயற்கையான மற்றும் ஆரோக்கியமான வாழ்வியலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இறங்கினார்.
தன் வீட்டில் முருங்கை மரம் இல்லாத மற்ற குடும்பங்களும் இதன் சத்துக்களை எளிதாகப் பெற வேண்டும் என்ற நோக்கில், முருங்கை இலைகளைப் பொடியாகத் தயாரிக்கும் யோசனையை கிரேஸ் தனது தாயிடம் பகிர்ந்து கொண்டார். கிரேஸின் தாய் மரியா டி மெல்லோ ‘தி கோவன் ஹோம்ஸ்டெட்’ என்ற பெயரில் ஊறுகாய், ஜாம், மசாலாப் பொருட்கள், தேங்காய் எண்ணெய் மற்றும் கைவினை சோப்புகளைத் தயாரித்து விற்கும் சிறுதொழிலைச் செய்து வருகிறார். சிறுவயது முதலே தனது தாய் வேலை செய்வதைக் கூர்ந்து கவனித்து வந்த கிரேஸுக்கு, இந்தத் தயாரிப்பு முறை புதியதாக இருக்கவில்லை.
மே 1, 2026 அன்று தொடங்கப்பட்ட இந்த முயற்சியில், கிரேஸ் தனது வீட்டுத் தோட்டத்து முருங்கை இலைகளைப் பறித்து, தண்டுப்பகுதிகளை நீக்கிவிட்டு, அவற்றை ஒரு நாள் வெயிலிலும், பின்னர் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு
நிழலிலும் உலர வைத்திருக்கிறார். இலைகளின் சத்துக்கள் வீணாகாமல் இருக்கவும், தூசிகள் மற்றும் விலங்குகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் மிகவும் சுகாதாரமான முறையில் இவற்றை அவர் தூய்மை செய்து. இலைகள் நன்றாகக் காய்ந்ததும், அவற்றை மிக்சியில் அரைத்து நயமான பச்சைப் பொடியாக மாற்றி, பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்கிறார். ஒரு கிலோ முருங்கை இலைகளை உலர வைக்கும் போது, அதிலிருந்து வெறும் கால் கிலோ அளவே பொடி கிடைக்கிறது. 100 கிராம் எடையுள்ள ஒரு முருங்கைப்பொடி பாக்கெட்டை 150 ரூபாய்க்கு அவர் விற்பனை செய்கிறார்.
தொடக்கத்தில் வாடிக்கையாளர்களை எதிர்கொள்ளத் தயங்கிய கிரேஸ், தற்போது தனது தயாரிப்புக்குக் கிடைக்கும் நேர்மறையான வரவேற்பால் மிகுந்த நம்பிக்கைப் பெற்றுள்ளார். ஒரு மாதத்திற்குள்ளாகவே சுமார் 20 பாக்கெட்டுகளை விற்பனை செய்து 3,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டியுள்ளார். இந்த வருமானத்தை அவர் தனது எதிர்காலத் தயாரிப்புகளுக்காகச் சேமித்தும் வருகிறார். பள்ளி மீண்டும் திறக்கப்பட்ட பிறகும் இந்தத் தொழிலைத் தொடர விரும்புவதாகக் கூறும் கிரேஸ், தங்களைச் சுற்றியுள்ள பெரியவர்களின் பணிகளைக் கவனிப்பதன் மூலமே குழந்தைகள் பல பயனுள்ள விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும் என்றும், எந்த ஒரு சிறு யோசனையையும் முயற்சியாக மாற்றத் தயங்கக் கூடாது என்றும் தனது அனுபவத்தின் மூலம் பகிர்ந்து கொள்கிறார்.
முருங்கை மரம், மற்றும் இலை மூலம் அபரிமிதமான கால்சியம், மற்றும் இரத்த சிவப்பணுக்கள் அதிகரிப்பு உள்ளிட்ட நன்மைகள் கிடைப்பதன் காரணத்தால் கிரேஸ் டிசோசா விற்பனை செய்யும் இந்த முருங்கைப் பொடிக்கு தற்போது அவரது பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்களும் கூட ஆர்வம் காட்டி வருகிறார்கள். மேலும் இதனை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்று முழுமையான ஊட்டச்சத்து மாவுகள், சிறுதானிய உணவுகள் என விரிவுபடுத்தவிருப்பதாகவும் உற்சாகமாக சொல்கிறார் இந்த தாவரக் காதலி கிரேஸ் டிசோசா. இதற்கிடையில் அம்மாவின் ஃபுட் புராடெக்ட் பிஸினஸ் இணைந்து இருவரும் பிசியான தொழில் நிபுணர்களாக மாறிவிட்டனர்.
- ஆ.கவின்.


