பைக் திருடிய தவெக நிர்வாகி விதி சும்மா விடல... சிக்கியதை கேட்டா சிரிப்பீங்க...
நெல்லை: நெல்லை, வி.எம். சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (26). தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 12ம் தேதி காலை 11.30 மணியளவில் தனது பைக்கை நெல்லை புதிய பஸ் நிலையத்தின் 1ம் பிளாட்பாரம் அருகே நிறுத்தி விட்டு, ஏடிஎம்மில் பணம் நிரப்பச் சென்றுள்ளார். சுமார் 12.15 மணிக்கு திரும்பி வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை.
இதுகுறித்து அவர் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் புதிய பஸ் நிலையத்தில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். சிறிது நேரத்தில் 2 பேர் ஒரு பைக்கை தள்ளிக்கொண்டு வருவதை போலீசார் பார்த்தனர். போலீசார் பைக்கை எதற்காக தள்ளிக்கொண்டு வருகிறார்கள் என்பதை அறிய அவர்களை நோக்கி நடந்து சென்றபோது, அந்த நபர்கள் பைக்கை அங்கேயே போட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை விரட்டிச் சென்று பிடித்து, அவர்களை மேலப்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
பைக்கை தள்ளிக் கொண்டு வந்தவர்கள் சாத்தான்குளத்தைச் சேர்ந்த முத்துக்குமார் (30), நாங்குநேரியைச் சேர்ந்த தங்கராஜா (37) என்பது தெரியவந்தது. அவர்கள் புதிய பேருந்து நிலையத்தில் பைக்கை திருடிக் கொண்டு சென்றுள்ளனர். சிறிது தூரத்தில் பைக் பெட்ரோல் தீர்ந்து நின்று விட்டது. இதனால் செய்வதறியாமல் திகைத்த அவர்கள் பைக்கை தள்ளிக் கொண்டு புதிய பஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது போலீசாரை பார்த்ததும் பைக் திருடியதை கண்டுபிடித்து விட்டதாக நினைத்து ஓட்டம் பிடித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
தொடர் விசாரணையில், முத்துக்குமார் தமிழக வெற்றிக்கழக நிர்வாகி என்பதும், பைக் மெக்கானிக் கடை வைத்திருப்பதும், பழைய பைக்குகளை திருடினால் யாரும் புகார் அளிக்க மாட்டார்கள். அப்படியே புகார் அளித்தாலும் போலீசார் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களிடமிருந்து 5 பைக்குகளை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
‘புத்திசாலி’ பதில்
விசாரணையின்போது, திருடர்களிடம் போலீசார் பைக்கில் பெட்ரோல் தீர்ந்ததால் அங்கே விட்டுச் செல்லாமல் எதற்காக மீண்டும் இங்கே கொண்டு வந்தீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு திருடர்கள் பைக்கை அங்கு விட்டால் அந்த பகுதி கண்காணிப்பு கேமராக்களை பார்த்து போலீசார் எங்களை கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால் எடுத்த இடத்தில் விட்டால் திருடியது தெரியாமல் போய்விடும். புகாரும் இருக்காது என்பதால் அதே இடத்திற்கு கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளனர்.