தமிழ்நாட்டில் தவெக அரசு கடந்த மே 10ம் தேதி ஆட்சி பொறுப்பேற்றது. தேர்தலுக்கு முன் திமுகவை கடுமையாக விமர்சித்த விஜய், அந்த கட்சியோடு கூட்டணி அமைத்து, வெற்றி பெற்ற கட்சிகளோடு சேர்ந்துதான் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். இதுபோக, அமைச்சர் ஆசை காட்டி, அதிமுகவிலும் சலசலப்பை உருவாக்கினார். அவரது பேச்சை நம்பி தவெக அரசுக்கு அதிருப்தி அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் ஆதரவு அளித்தனர். எதிர்பார்த்தபடி அமைச்சர் பதவியை யாருக்கும் தரவில்லை.
இப்படியாக, திமுக கூட்டணியிலும், அதிமுகவிலும் ‘அரசியல் விளையாட்டு’ நடத்திக் கொண்டிருக்கும் வேளையில், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிகப்பெரிய அளவில் சீரழிந்துக் கொண்டிருக்கிறது. குழந்தைகள், பெண்கள் மீதான பாதுகாப்பை உறுதி செய்யும் சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்திற்கு, ஆட்சிக்கு வந்த முதல்நாளே கையெழுத்திட்டார் முதல்வர் விஜய். ஆனால், தமிழ்நாட்டில் தினந்தோறும் பாலியல் குற்றங்கள் நடந்தவண்ணம் உள்ளன.
கோவையில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையானது பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. நடைப்பயிற்சி சென்ற மூதாட்டி உட்பட இரண்டரை வயது சிறுமி வரை, பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு தொகுதியிலே பாலியல் பலாத்காரம் சம்பவம் நிகழ்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
18 வயதிற்குட்பட்ட சிறுமிகளை பாருக்குள் அனுமதித்தது, அங்கு வந்த 2 இளம்பெண்களை கார் ஏற்றிக் கொலை செய்தது, நேற்று கூட திருப்புத்தூர் அருகே 10ம் வகுப்பு மாணவன் கழுத்தறுத்து கொலை என கடந்த 25 நாட்களில் 25க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. வழிப்பறி, கொள்ளை சம்பவங்களும் அதிகரித்துள்ளன. மேலும், தவெக பிரமுகர் அரசு பஸ் டிரைவர் மீது கும்பலாக சேர்ந்து, கொலைவெறி தாக்குதல் நிகழ்த்திய சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தமிழகத்தில் நடக்கும் இத்தனை குற்றச்சம்பவங்கள் முதல்வரின் கவனத்திற்கு செல்கின்றனவா என தெரியவில்லை. உங்களுக்கு அண்ணனாக, தம்பியாக என பிரசாரத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து கவலைப்பட்ட விஜய், முதல்வரானதும் அமைதி காப்பதன் மர்மம் புரியவில்லை. இதையெல்லாம் விட கொடுமையாக திருச்சியில் நடந்த நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், யார் ஆட்சியிலோ இந்த கொடுமைகள் நடப்பதாக எண்ணி பேசிவிட்டு சென்றது, நன்றி கூறும் கூட்டத்தில் பிரசார பாணியில் பேசியதும் மக்களை பெரியதாக கவரவில்லை.
விவசாயக்கடன் தள்ளுபடி என அறிவித்தது தவெக அரசு. முழுமையாக தள்ளுபடி செய்யாமல், கண் துடைப்பாக செய்ததாக கூறி, தமிழகமெங்கும் விவசாயிகள் இதனை எதிர்த்து போராடி வருகின்றனர். தவெக கட்சி வேட்பாளரே இதை எதிர்த்து பேசினார். இவையெல்லாம் அரசின் கவனத்திற்கு செல்கிறதா? மூடப்படுவதாக அறிவித்த டாஸ்மாக் கடைகள் மீண்டும் செயல்படுகின்றன. தேர்தல் பிரசாரத்தில் வெறும் ரீல்ஸ்களாக போட்டு பிரசாரம் செய்தீர்கள்...
அது முடிந்து ரியலாக இப்போது ஆட்சியில் அமர்ந்தும் விட்டீர்கள். நீங்கள்தான் முதல்வர். இனி யாரையும் குறை கூறி பயனில்லை. சீரழிந்து கிடக்கும் சட்டம், ஒழுங்கை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். மாற்றம் தேவை என வாக்களித்த மக்களை, ஏமாற்றாதீர்கள். இனியாவது, பிற கட்சிகளுக்குள் குழப்பம் ஏற்படுத்தும் தேர்தல் அரசியலில் ஈடுபடாமல், உங்களை நீங்களே கூறிக்கொள்ளும் ‘தூய சக்தியாக’, மக்களுக்கான அரசியல் சக்தியாக செயல்பட தொடங்குங்கள் என்பது தான் மக்களின் வலியுறுத்தல்.


