Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

யோகாவின் மூலம் நல்லதொரு தொழில் வாய்ப்புகளைப் பெற முடியும்!

பிளாரன்ஸ் ஹெலன் நளினி

கடந்த 2021 ஆம் ஆண்டில் கோவிட் காலகட்டத்தில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு, மரணப் படுக்கை வரை சென்றுவிட்டேன். அப்போது முதல் என்னை உயிர்ப்புடன் வைத்தது எனது இடைவிடாத யோகா பயிற்சியும், நம்பிக்கையும்தான். அப்போது உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் ஆகிய இரண்டுக்கும் நமது உடலைப் பராமரிப்பது அவசியம் என்று தோன்றியது. அதன் காரணமாகவே யோகாவின் மீது கூடுதல் ஈடுபாடு வந்துவிட்டது. அதன் பிறகு தொடர்ந்து யோகபயிற்சிகள் செய்து வந்தேன். எனது தொழில் மற்றும் வாய்ப்புகளுக்கு யோகா நல்லதொரு விஷயங்களை ஏற்படுத்தி தந்தது என்றால் மிகையில்லை என்கிறார் பிளாரன்ஸ் ஹெலன் நளினி. யோகா குறித்தும் தனது வாழ்வில் அதனால் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் பகிர்ந்து கொள்கிறார்.

யோகா என்பது அழகியலோடு கூடிய ஆரோக்கியம் சார்ந்தது தான் என்கிறார் பிளாரன்ஸ் ஹெலன் நளினி. பிளாரன்ஸ் ஹெலன் நளினி மனநல சிகிச்சை நிபுணர், தொழில் முனைவோர், எழுத்தாளர், மொழி பயிற்றுனர், யோகா பயிற்சியாளர் என பல்துறை வித்தகர். இவர் உளவியல் ஆலோசகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. யோகாவினை முறையாக கற்றுக் கொண்டு பட்டங்கள் பெற்று, நிறைய பேருக்கு தற்போது யோகாக்கலைகளை கற்று கொடுத்தும் வருகிறேன் என்கிறார் ஹெலன்.

இன்றைய வேகமாக இயங்கி கொண்டிருக்கும் நவீன சூழலில் பல்வேறு நோய் உபாதைகள் ஸ்ட்ரெஸ் மன அழுத்தம், மனச்சோர்வு என பல்வேறு விஷயங்கள் பலரையும் வாட்டி எடுத்து வருகிறது. இதற்கு ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றுவதோடு தினமும் யோகாசன பயிற்சிகள் செய்து வந்தால் உடலும் மனதும் நன்றாக இருக்கும். நல்ல ஆரோக்கியமான வாழ்க்கைக்கு யோகாவும் சத்தான உணவு முறையும் சீரான வாழ்க்கை முறைகளும் மிகவும் நல்ல பலன்களை தருகிறது. மன அமைதி மற்றும் சிறந்த உடல் மன ஆரோக்கியத்திற்கு யோகா மற்றும் தியானம் அவசியம்.

பொதுவாக உடலை நெகிழ வைப்பதற்காக மட்டுமே யோகா செய்யப்படுகிறது என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் யோகாசனங்கள் நமக்கு பலவிதமான நன்மைகளை அள்ளி தருகின்றன. ஒருவர் தொடர்ந்து யோகா செய்து வந்தால் வாழ்நாள் முழுவதும் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க முடியும்.

பல்வேறு நோய்களை கட்டுக்குள் வைக்கும் திறன் யோகாவிற்கு இருக்கிறது. யோகா, தியானம் போன்றவை உடல்நலனோடு மன நலனையும் பாதுகாக்கும். குழந்தையின்மை பிரச்னைகள், சர்க்கரை நோய், மலச்சிக்கல், ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராடவும் யோகா உதவுகிறது. நாட்பட்ட உடல் வலிகளுக்கு யோகாவை விட சிறந்த தீர்வுகள் இல்லை. முக்கியமாக யோகா நம்மை இளமையாகவும் ஆரோக்கியத்துடனும் வைத்திருக்கும்

நமது சுவாசம் மற்றும் தோலின் பொலிவுக்கு யோகாவுடன் பிராணாயாம பயிற்சி செய்வதே சிறந்த பலனை பெற உதவும். பிராணாயாமம் செய்வதன் மூலம் சுவாசம் சீரடைகிறது, இது சருமத்தின் பொலிவை அதிகரிக்கவே உதவுகிறது. குறிப்பாக எங்களை போல் மாடலிங் துறையில் இருப்பவர்களுக்கு யோகா மிகப்பெரிய வரப்பிரசாதம் என்பேன். அழகுக்கலை சார்ந்த துறைக்கு தொடர்ந்து யோகா பயிற்சிகள் உடலமைப்பை சீராக வைக்க உதவுகிறது. மேலும் எந்த கடினமான சூழலிலும் அமைதியாக கேள்விகளை எதிர்கொண்டு பதிலளிக்க உதவுகிறது. குறிப்பாக டென்ஷனே நமக்கு மிகப்பெரிய எதிரி. யோகா செய்யும் உடலும் மனமும் அமைதியடைந்து விடுகிறது. அதனால் எச்சூழலையும் எளிதாக கையாள ஏதுவாக இருக்கும்.

அழகுக்கும் ஆரோக்கியத்திற்கும் யோகாவிற்கும் நிறைய தொடர்புகள் உண்டு. யோகா செய்வதன் மூலம் தூக்கமின்மை குறைபாடு நீங்கி, உடலுக்கு நல்லதொரு ஓய்வும் நல்லதொரு தூக்கமும் கிடைக்க செய்கிறது. நன்றாக தூங்கினாலே முகம் பிரகாசமாக தான் இருக்கும். அழகு போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் யோகாவை நிறைய பயிற்சி செய்யலாம். தொடர்ந்த பயிற்சிகளால் நல்லதொரு பலனை பெற முடியும். கழுத்துவலி, முதுகுவலி போன்ற உடல் வலிகள் தற்போது பலருக்கும் அதிகமாகி வருகிறது. இதற்கு யோகா பயிற்சிகளை செய்வதன் மூலம் நல்ல நிவாரணம் கிடைக்கிறது.

எனது தொழில் சார்ந்த வெற்றிகளுக்கு யோகா முக்கியமான காரணம் என்பேன். நான் கற்ற இந்த பயிற்சிகளை எனது துறை சார்ந்த மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்து வருகிறேன். எனது உளவியல் ஆலோசனையோடு யோகாப் பயிற்சிகளை செய்வதன் மூலம் நல்லதொரு தீர்வுகளை பெற முடிவது குறித்து விளக்கி சொல்லி வருகிறேன். இதன் பயன் பெற்றோர் ஏராளம். எத்துறையில் வெற்றி பெற வேண்டுமானாலும் யோகா பயிற்சிகளை மேற்கொள்வது கூடுதல் பலனை அதிகரிக்க செய்யும். யோகாவோடு எட்டு மணி நேர தூக்கம், ஆரோக்கியமான உணவுகளை உண்பது, உடலுக்கு தேவையான நீரை அருந்துவது என இருந்தால் அழகான ஆரோக்கியமான உடலை பெற முடியும் என உறுதியாக சொல்வேன். அழகுப்போட்டி மற்றும் மாடலிங் சார்ந்த துறையில் ஈடுபட விரும்புபவர்களுக்கும் இதனை வலியுறுத்தி வருகிறேன். நடைப்பயிற்சி மற்றும் ப்ராணாயாமம் என்னும் சுவாசப் பயிற்சியும் சிறப்பான மாற்றங்களை உண்டாக்கி தரும். ஸ்ட்ரெஸ் நிறைந்த வாழ்வியல் சூழலில் உடலோடு மன ஆரோக்கியம் முக்கியமான ஒன்று என்பதை உணர்ந்தாலே போதும் என்கிறார் ஹெலன் நளினி.