தீராத மற்றும் தொடர்ந்த உடல்வலிகளுக்கு யோகா மற்றும் அக்குபங்சர் மூலமாக நிரந்தர தீர்வு காண முடியும் என நம்பிக்கையுடன் சொல்கிறார் யோகா பயிற்சியாளர் பத்ம பிரியதர்ஷினி. இதற்காக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு எளிமையான யோகாசன பயிற்சிகளை உருவாக்கி அதனை பலருக்கும் கற்றுத் தருகிறார். மேலும் சவுண்ட் ஹீலிங் முறை குறித்தும் நிறைய ஆய்வுகளை மேற்கொண்டு அதன் மூலமாகவும் பல்வேறு வலிகளுக்கும், மன அமைதிக்கும் நல்லதொரு தீர்வுகளை உருவாக்கி தருகிறார் இவர். இவரிடம் யோகாசன பயிற்சிகளை கற்றுக்கொண்டு நாட்பட்ட வலிகளிலிருந்து விடுதலை பெற்றவர்கள் ஏராளமானோர். இவர் தனது யோகாசன பயிற்சி குறித்தும், அக்குபஞ்சர் மற்றும் சவுண்ட் ஹீலிங் குறித்தும் நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்.
யோகாத்துறையில் ஆர்வம் ஏற்பட்டது எப்போது எப்படி?
நான் முதலிலேயே அடிப்படை யோகா வினை கற்றுக் கொண்டேன். அப்போது நான் ஐடி துறையில் தான் பணிபுரிந்து வந்தேன். அப்போது எனக்கு ஏற்பட்ட விபத்து ஒன்றின் காரணமாக தொடர்ச்சியான கழுத்து வலிக்கு யோகாவின் மூலமாக மட்டுமே தான் தீர்வு காண முடிந்தது. அதன் பிறகே யோகா மற்றும் அக்குபஞ்சர் குறித்து தீவிரமாக படிக்க ஆரம்பித்தேன். யோகாவில் பத்து வருட அனுபவம் காரணமாக யோகா தத்துவா மூலமாக எளிமையான ஆசனங்களை உருவாக்கி பலருக்கும் கற்றுத்தர ஆரம்பித்தேன். அதே போன்று அக்குபங்சர் மூலமாகவும் பல்வேறு வலிகளுக்கு தீர்வு காண முடிந்தது. அதன் பிறகும் தொடர்ந்த முறையான யோகாசன பயிற்சிகளை செய்வதன் மூலமாகவும் நாட்பட்ட தொடர்ந்த வலிகளுக்கு நிரந்தரமாக தீர்வு காண முடிந்தது. இதனால் பலரும் தங்கள் உடல்வலி குறைந்து ஆக்டிவ்வாக இருப்பதாக சொன்னார்கள் என்பதே எனது உழைப்பிற்கான அங்கீகாரம். தற்போது கார்ப்பரேட் ஊழியர்கள், குடும்ப தலைவிகள் , கல்லூரி மாணவிகள், தொடர்ந்து ஒரே இடத்தில் நின்றபடியோ உட்கார்ந்தபடியோ வேலை பார்ப்பவர்கள் என பல தரப்பினரும் எங்களிடம் வருகிறார்கள். முறையான யோகாசன பயிற்சிகளை கற்றுக் கொண்டு செய்வதன் மூலமாக நல்லதொரு பலன்களை பெறுகிறார்கள். தேவைப்படுவோருக்கு அக்குபங்சர் சிகிச்சையையும் மேற்கொண்டு வருகிறோம். தற்போது ஹீலிங் தெரபி முறைகளும் நல்லதொரு சிறப்பான பலன்களை அளித்து வருகிறது.
யோகாவினால் உடல்நலனோடு மனநலனும் சேர்ந்து மேம்படுகிறது. யோகாசனங்கள் நமது உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்க செய்வதோடு , உடல் அசைவினை மிகவும் எளிதாக்குகிறது. தோலை பளபளப்பாக்குவதுடன் இளமையான தோற்றத்துடன் இருப்பதற்கு யோகா பயிற்சி உதவும். நமது வயதிற்கும் உடல் அமைப்பிற்கும் ஏற்ப ஒவ்வொரு காலகட்டத்திலும் செய்யக்கூடிய நிறைய வகையான பயிற்சி முறைகள் உள்ளன. யோகா செய்வதன் மூலம் தூக்கமின்மை குறைபாடு நீங்கி, உடலுக்கு போதுமான ஓய்வும் நல்லதொரு தூக்கமும் கிடைக்க செய்கிறது. ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்களை கட்டுக்குள் வைக்கும். குழந்தைமின்மை சிகிச்சைக்கு கூட யோகா ஒரு நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தி தருகிறது. மலச்சிக்கலை கூட யோகாசனம் சீராக்கும். தற்போது அனைத்து தரப்பினரின் முக்கிய பிரச்சினை ஸ்ட்ரெஸ் தான். இதற்கு யோகாசனங்கள் மூலமே மிக சிறப்பானதொரு தீர்வுகளை பெற முடியும்.
யோகாவில் உங்களது சிறப்பான பணிகள் மற்றும் பலன்கள் குறித்து சொல்லுங்கள்?
யோகாவின் மூலமாக நிறைய வலிகளை குறைக்க முடியும். இது குறித்து நிறைய விழிப்புணர்வுகளை பலருடையே ஏற்படுத்தியும் வருகிறோம். இதற்காக நிறைய பயிற்சி வகுப்புகளையும் எடுத்து வருகிறோம். மன அழுத்தத்தை குறைப்பது குறித்து நிறைய பயிற்சிகளை அளித்து வருகிறோம். மேலும் உணவுக்கட்டுப்பாடு மற்றும் எடை கட்டுப்பாட்டில் வைப்பது குறித்து சொல்லி தருகிறோம். மேலும் ஆரம்பகால கர்ப்பம் மற்றும் குழந்தை பிறப்பிற்கு பிறகான எளிதான ஆசனங்களை கற்று தருகிறோம். சர்க்கரை நோயாளிகள் யோகாசனம் மற்றும் பிராணயோமம் போன்றவற்றை முறையாக செய்வதன் மூலமாக நல்லதொரு சிறப்பான பலன்களை பெற்று வருகிறார்கள். தொடர்ந்த உடல்வலிகளுக்கான யோகாசனம் செய்வதன் மூலமாக உடலில் ஏற்படும் வலிகள் குறைந்து நல்ல சீரான தூக்கத்தை பெற முடிகிறது. பொதுவான தூக்கமின்மை பிரச்சினைகளுக்கும் யோகாவில் நல்ல தீர்வுகள் இருக்கிறது. இதற்கான பயிற்சிகளை நேரிடையாக வருகின்ற பலருக்கும் சொல்லி தருகிறோம். ஆன்லைன் மூலமாகவும் நிறைய பேர் கற்றுக் கொள்கிறார்கள். வலிகளுக்காக யோகா தெரபி மற்றும் கவுன்சிலிங் அளித்தும் வருகிறோம். பொதுவாகவே யோகா தெரபி மூலமாக உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதுகாக்க முடியும் என்பதே உண்மை.
தற்போது சவுண்ட் தெரபி மூலமாகவும் நிறைய நல்ல பலன்களை பெற முடிகிறது. இதற்காக சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளும் நடத்தி வருகிறோம். நிறைய பேர் எங்களிடம் கற்றுக்கொண்டு சொந்தமாக தொழில் தொடங்கி சிறப்பாக பலருக்கும் கற்று தந்தும் வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் யோகா மற்றும் தியானம் போன்றவற்றின் தேவைகள் அதிகமாகி வருகிறது. பணி மற்றும் மன அழுத்தம் காரணமாக தூக்கமின்மை போன்ற தொந்தரவுகள் அதிகமாகி வரும் சூழலில் பலரும் தேடி வருவது யோகாவையே. அதனை முறையாக கற்றுக்கொண்டு தொடர்ந்து செய்து வந்தால் உடல் மற்றும் மலநலனை சிறப்பாக வைத்துக்கொள்ள முடியும் .
உங்களுக்கு கிடைத்த விருதுகள் மற்றும் பாராட்டுகள்...
நாங்கள் கார்ப்பரேட் வெல்னஸ் மற்றும் பெயின் மேனேஜ்மென்ட் பணிகளை மிகச்சிறப்பாக செய்து வருகிறோம். இதனால் பலன் பெற்றவர்கள் ஏராளமானோர் . எங்களது பணிகளுக்கான நிறைய விருதுகளும் பாராட்டுதல்களும் கிடைத்தது பெரும் மகிழ்வாக இருந்தது. அதில் சில விருதுகள் குறிப்பிடத்தக்கது.
SIWAA 2019 மிக சிறந்த தொழிலதிபருக்கான விருது வழங்கி கௌரவித்தது.
நோபல் கிரௌன் மிக சிறந்த யோகா தெரபிஸ்ட் விருது வழங்கி கௌரவித்தது.
ஏசியன் ஐகானிக் யோகா தெரபிஸ்ட் விருது கிடைத்தது.
ஏசியா இன்டர்நேஷனல் விருது
2020 ஆம் ஆண்டில் கிடைத்தது சிறந்த நியூட்ரிஷியனுக்கான ஸ்டார் ஐகான் விருது 2023 ல் கிடைத்தது என்கிறார் யோகா பயிற்சியாளர் பத்மப்ரியதர்ஷினி.
- தனுஜா ஜெயராமன்
