Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மஞ்சள் வேட்டியுடன் வந்த மவுனகுரு

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரு மாதங்களில் நடைபெற உள்ளது. பணிவுக்கு பேர் வாங்கிய முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தன்னை அதிமுகவில் சேர்க்குமாறு அதே பணிவோடு வேண்டுகோள் விடுத்தும் இபிஎஸ் அதனை நிராகரித்து விட்டார். இதையடுத்து ஓபிஎஸ் என்ன முடிவு எடுக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் மாலை ஓபிஎஸ் ஆதரவாளர்களுடன் வந்து சுவாமியை வழிபட்டார். இரவில் கடற்கரையில் உள்ள தனியார் ரிசார்ட்டில் ஓய்வெடுத்தார்.

நேற்று 2வது நாளாக தனது 2 சகோதரிகள், சகோதரர் மகன் உள்ளிட்ட குடும்பத்தினருடன் கோயிலில் மூலவர் அபிஷேகத்தில் பங்கேற்று வழிபட்டார். திருச்செந்தூர் கோயிலுக்கு எப்பொழுது வந்தாலும் ஓபிஎஸ், அன்றைய அரசியல் நிலை குறித்து பேட்டி கொடுப்பார். மேலும் நிருபர்கள் மற்றும் பக்தர்களிடமும் கலகலவென சிரித்து பேசி நலம் விசாரிப்பார். ஆனால், நேற்று முன்தினம் கோயிலுக்கு வந்தது முதல், நேற்று குரு பகவானுக்கு உகந்த வியாழக்கிழமை என்பதால் கோயிலில் தர்மயுத்த நாயகன் ஓபிஎஸ் சிறப்பு பரிகாரம் செய்யப் போகிறார்.

சிறப்பு பூஜை செய்து வழிபட போகிறார். தியானம் செய்யப் போகிறார் என்று தகவல் பரவியது. மேலும், கோயிலுக்கு வந்தது முதல் 2 நாள் தரிசனம் முடிந்து சென்றது வரை நிருபர்கள் கேட்ட கேள்விக்கு எல்லாம் அவருக்கே உரிய பாணியில் வாயை மூடி மவுனமாக புன்னகைத்து சென்றார். நேற்று முன்தினம் வந்தபோது உலக நன்மைக்காக வேண்டியதாகவும், தை முடிவதற்கு இன்னும் சில நாட்கள் இருப்பதாக கூறிய ஓபிஎஸ், நேற்று கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று ஒற்றை பதிலை மட்டும் சொல்லிவிட்டு சென்றார். குரு பகவானுக்கு உகந்த மஞ்சள் வேட்டியை அணிந்திருந்த ஓபிஎஸ், எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் மவுன குருவாக விளங்கினார்.

* சம்ஹார பூஜை

சத்ரு சம்ஹார சன்னதியில் நடைபெற்ற பூஜையில் ஓபிஎஸ் பங்கேற்றதாக கூறப்படுகிறது. மூலவர், ஷண்முகர், சத்ரு சம்ஹாரர் சன்னதி திருச்செந்தூர் கோவிலில் உள்ளது. சூரனை வதம் செய்வதற்கு முருகர் சம்ஹாரர் சன்னதியில் இருந்துதான் எழுந்தருளுவார். பொதுவாக சம்ஹாரர் என்பது எதிரிகளை அழிப்பதற்கும், எதிரிகளிடம் இருந்து தன்னை காப்பதற்கும் இந்த சம்ஹார சன்னதியில் பூஜை நடப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில்தான் ஓபிஎஸ்சும் சம்ஹாரர் சன்னதி பூஜையில் பங்கேற்றதாக தெரிகிறது. இதற்காகவே அவர் திருச்செந்தூரில் 2 நாட்கள் முகாமிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.