Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மார்க்கெட்டில் எப்போதும் மஞ்சள் சாமந்திக்கு மவுசு ஜாஸ்தி!

திருவண்ணாமலை அடுத்த முனியந்தல்சத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். எலக்ட்ரீஷியனாக பணிபுரியும் இவர் தனது 2 ஏக்கர் நிலத்தில் விவசாயமும் செய்து வருகிறார். மற்ற விவசாயிகளைப் போல நெல், கரும்பு பயிர்களை சாகுபடி செய்தாலும் 10 சென்ட் நிலத்தை மலர் சாகுபடிக்காக ஒதுக்கி விடுகிறார். அதில் தற்போது மஞ்சள் சாமந்தியைப் பயிரிட்டு மகசூல் எடுத்து வருகிறார். ஒரு காலைப்பொழுதில் வயலில் பூ அறுவடையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முருகனை சந்தித்துப் பேசினோம். `` எங்களுக்கு சொந்தமாக 2 ஏக்கர் நிலம் இருக்கிறது. இந்தப் பகுதியில் பெரும்பான்மையாக பயிரிடப்படும் நெல் மற்றும் கரும்பை சாகுபடி செய்திருக்கிறேன். இந்த இரண்டு பயிர்களும் சாகுபடியின் இறுதியில்தான் மகசூல் கொடுக்கும். அன்றாட செலவுக்கு பணம் வேண்டுமே என்பதற்காக நான் பூக்கள் சாகுபடியை தொடர்ந்து செய்கிறேன். சீசனுக்கு தகுந்தபடி பூக்களை பயிரிட்டு வருமானம் பார்க்கிறேன். இதற்கு முன்பு சம்பங்கி பயிரிட்டேன். இப்போது 10 சென்ட் நிலத்தில் மஞ்சள் சாமந்தி பயிரிட்டிருக்கிறேன்.

நிலத்தில் எங்கள் குடும்பத்துடன் சேர்ந்து உழைக்கிறோம். கல்லூரி செல்லும் எனது மகளும், வீட்டில் இருக்கும் சமயங்களில் எங்களுக்கு உதவியாக பூக்களைப் பறிக்க உதவுகிறார். இதனால் நாங்கள் வேலைக்கு வெளியாட்களை வைப்பதில்லை. 10 சென்ட் அளவில் பயிரிடுவதால் கூலிக்கு ஆட்களை வைக்காமல் நாங்களே பார்த்துக்ெகாள்ள முடிகிறது. சாமந்திக்கு அதிகமான தண்ணீர் தேவையில்லை. வாரத்துக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினாலே போதும். தரையில் பதமாக ஈரம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதிகமாக தண்ணீர் தேங்கினாலும் ஆபத்து. அதனால், அதிகமான மழை பெய்யும் காலங்களில் மஞ்சள் சாமந்தி பயிரிடக் கூடாது.சாமந்தியில் சிவப்பு சாமந்தி, செண்டு சாமந்தி என பல ரகம் இருக்கிறது. ஆனாலும் மஞ்சள் சாமந்திக்குதான் மார்க்கெட்டில் எப்போதும் நிலையான விலை கிடைக்கும். அதனால், மஞ்சள் சாமந்தியைத்தான் எங்கள் பகுதியில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் பயிரிடுகிறார்கள். 10 சென்ட் இடத்துக்கு 1,200 செடிகள் தேவைப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூர், ராயக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து வரும் செடிகள் அதிகளவில் பூக்களை தருகின்றன. எனவே, அந்த பகுதியில் இருந்து செடிகளை வாங்குகிறோம். திருவண்ணாமலை அருகே பாச்சல் போன்ற பகுதிகளிலும் மஞ்சள் சாமந்தி செடிகள் கிடைக்கின்றன. சிலர் அங்கு சென்றும் வாங்கி வருவார்கள். ஒரு செடி 70 பைசா முதல் 1 ரூபாய் வரை விலை கொண்டதாக இருக்கும். மஞ்சள் சாமந்திக்கு அதிகமான உரமும் தேவையில்லை. பூக்கும் பருவத்துக்கு முன்பு பேக்டம்பாஸ் போட்டால் போதும். அதோடு, இயற்கையாக கிடைக்கும் சாணம், எரு போன்றவற்றையும் போடலாம். செடிகளை நடும்போது, ஒரு அடிக்கு ஒரு அடி இடைவெளி விட வேண்டும். சிலர் இடைவெளியை குறைத்து விடுவதால், செடி கிளைத்து வளராது. அதோடு, களை எடுப்பதும் கஷ்டம். மல்லி சாகுபடி போல அதிகமான கஷ்டம் சாமந்தி சாகுபடியில் இல்லை. பூக்களை பறிப்பது எளிது. செடி நட்டதில் இருந்து பூக்கும் காலம் வரை 5 முறை களை எடுக்க வேண்டும். சில நேரத்தில் பூச்சி தாக்கவும் வாய்ப்பு உண்டு. அதற்கு சாம்பல் தூவி விட்டாலே போதுமானது. அப்படியும் பூச்சி கட்டுப்படவில்லை என்றால் மட்டும் மருந்து தெளிக்கலாம். செடியை நடவு செய்த 40 நாட்களில் இருந்து நமக்கு மகசூல் கிடைக்க ஆரம்பிக்கும்.

அதன்பிறகு, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அல்லது தினமும் பூக்களை எடுக்கலாம். 10 சென்ட் நிலத்தில் தினமும் அதிகபட்சம் 10 முதல் 15 கிலோ வரை சாமந்தி பூக்களை அறுவடை செய்கிறேன். சாதாரண நாட்களில் கிலோ ரூ.60க்கு விற்பனையாகும். வளர்பிறை முகூர்த்த நாட்களிலும், திருவிழா காலங்களிலும் அதிகபட்சமாக கிலோ ரூ.160 வரையும் விலைபோகும். திருவண்ணாமலை பூ மார்க்ெகட்டில் எப்போதும், மஞ்சள் சாமந்திக்கு டிமாண்ட் அதிகம். இங்குள்ள தேவைக்கு போக, வெளி மாவட்டங்களுக்கும் அனுப்புகிறார்கள். அதோடு, மற்ற பூக்களைப் போல எளிதில் வாடிவிடாது என்பதால் வியாபாரிகளுக்கும் இது உதவியாக இருக்கிறது. நகரப் பகுதிக்கு அருகே விவசாய நிலம் இருப்பதால், பறித்தவுடன் விரைவாக மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல முடிகிறது.ஒருசில நேரங்களில் வரத்து அதிகமாக இருந்தால் மட்டுமே விலை வீழ்ச்சியடையும். பெரும்பாலான நாட்களில் நியாயமான விலை கிடைப்பதால் விவசாயிகளுக்கு உற்ற நண்பனாக மஞ்சள் சாமந்தி இருக்கிறது. உழவு கூலி, பயிர் செலவு, உழைப்பு, மருந்து செலவு என்று எல்லா செலவுகளும் போக, ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் லாபம் கிடைக்கிறது’’ என மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

தொடர்புக்கு: முருகன்: 86374 51544.