Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரியில் இந்த ஆண்டு கோடைவிழா நடைபெறுமா?

*சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

ஏலகிரி : ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரியில் இந்த ஆண்டு கோடை விழா நடைபெறுமா? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஏலகிரிமலை ‘ஏழைகளின் ஊட்டி’ என்று அழைக்கப்படுகிறது.

கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான ஏலகிரிமலை கடல் மட்டத்தில் இருந்து 1,200 மீட்டர் உயரத்தில் நான்கு மலைகளால் சூழப்பட்டு அமைதியான சூழலில் அமைந்துள்ளது. சுமார் 28 சதுர மைல் பரப்பளவு கொண்ட இம்மலை 14 கிராமங்களை கொண்டுள்ளது.

தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கும் ஏலகிரியில் படகு சவாரி வசதிகளுடன் பூங்காவும் அமைந்துள்ளது. மேலும் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிகள், தொலைநோக்கி ஆய்வகம் மற்றும் சுவாமி மலை ஆகியவையும் அமைந்துள்ளது.

பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் இந்த மலைக்கு வந்து தங்கி செல்கின்றனர். குறிப்பாக கோடை காலத்திலும், விடுமுறை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது பாராகிளைடிங் சாகச விளையாட்டு தளம் போன்றவற்றை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏலகிரியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி வாரியத்தால் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்.

அப்போது பல்வேறு துறைகளை சேர்ந்த அரங்குகள், மலர் கண்காட்சி, படகு இல்லத்தில் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள், ஆடல், பாடல் நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான நாய்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில் மாநிலம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொள்வதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் கடந்த 2017ம் ஆண்டிற்குப் பிறகு 8 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் கோடை விழா நடைபெறாமல் இழுபறியில் உள்ளது. கடந்த ஆண்டும் கோடை விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், திடீரென விழா தடையானது.

இந்நிலையில் இந்த ஆண்டாவது ஏலகிரியில் கோடை விழா நடைபெறுமா? எனப் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கோடை விழா நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.