யம்லி செயலி (Yummly) என்பது சமையலை எளிதாகவும், தனிப்பட்ட அனுபவமாகவும் மாற்ற உதவும் செயலி. இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், “என்ன சமைப்பது?” என்ற தினசரி கேள்விக்கு துல்லியமான பதிலை வழங்குவதில் இந்த செயலி முக்கிய பங்கு வகிக்கிறது. ஒருவரின் உணவு விருப்பங்கள், ஆரோக்கியத் தேவைகள் மற்றும் சமையல் பழக்கங்களை புரிந்துகொண்டு, அதற்கேற்ற ரெசிபிகளைப் பரிந்துரைப்பது இதன் முக்கிய அம்சம்.
இந்த செயலியின் முக்கிய தனிச்சிறப்பு, அதன் தனிநபருக்கான வடிவமைத்துக் கொள்ளும் திறன். நீங்கள் சைவமா, அசைவமா, இல்லை, முட்டை மட்டும் உண் பவரா என கேட்டு அதற்கேற்ற உணவுகளைத் தானாகவே வடிகட்டி வழங்கும். மேலும், நீங்கள் விரும்பாத உணவு மூலப் பொருட்களைத் தவிர்த்து, உங்களுக்கு பிடித்த உணவுகளை அடிப்படையாகக் கொண்டு புதிய ரெசிபிகளைக் கண்டு பிடிக்க உதவுகிறது.
குறிப்பாக “no-cook” அல்லது “quick recipes” போன்ற விருப்பங்கள் மூலம், குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய உணவுகளை எளிதாகத் தேர்வு செய்ய முடியும். நெருப்பில்லாமல், புகையில்லாமல், சால்ட், ஸ்மூதிகள் என இது சிலிண்டர் சிக்கனத்துக்கும் மறைமுகமாக உதவுகிறது.
மேலும், இந்த செயலி உணவுத் திட்டமிடலை மிகவும் எளிதாக்குகிறது. ஒரு வாரத்திற்கான உணவுத் திட்டத்தை முன்கூட்டியே அமைத்துக் கொள்ளலாம். அதற்கேற்ற பலசரக்குப் பட்டியலையும் தானாக உருவாக்கும் வசதி இருப்பதால், தேவையற்ற பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்க முடியும். இது பணச் சிக்கனத்தையும், உணவு வீணாவதையும் குறைக்கிறது.
சமையலில் புதிதாக இருப்பவர்களுக்கும் யம்லி ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கும். பேச்சிலர்களுக்கான திடீர் சமையல், சிக்கனச் சமையல், குழந்தைகளுக்கான ஆரோக்கிய சமையல் என அனைத்தும் விளக்கமாக, படிப்படியான செய்முறையுடன் வீடியோக்கள் இந்தச் செயலியில் உண்டு.
