70-ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம் - பிரேசிலில் R15 மற்றும் R3 மாடல்களின் லிமிட்டட் எடிஷனை அறிமுகம் செய்துள்ள யமஹா
யமஹா மோட்டார் நிறுவனம் துவக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி, ஆர்15 மற்றும் ஆர்3 ஆகிய 70வது ஆண்டு விழா எடிஷன் மோட்டார் சைக்கிள்களை சர்வதேச சந்தைக்காக பிரேசிலில் அறிமுகம் செய்துள்ளது. ஆர்15 மோட்டார் பைக்கில் 155 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு மோட்டார் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 18.5 எச்பி பவரையும் 14.7 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. ஆர்3 மோட்டார் சைக்கிளில் 321 சிசி பேரரல் டிவின் லிக்விட் கூல்டு இன்ஜின் உள்ளது.
இது அதிகபட்சமாக 40.7 பிஎஸ்பி பவரையும், 29.4 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. இந்த பைக்குகளில் முன்புறம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், பின்பறம் மோனோ ஷாக் அப்சர்வர்கள், டூயல் சானல் ஏபிஎஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் இடம் பெற்றுள்ளன. இரண்டு பைக்குகளுமே சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. முன்புற போர்க்குகளில் தங்க நிற பூச்சு இடம் பெற்றுள்ளது.
பெட்ரோல் டேங்க்கில் 70வது ஆண்டு விழா எடிஷன் பேட்ச் இடம் பெற்றுள்ளது. ஸ்பெஷல் எடிஷன் என்பதால் ஆர் 15 1,200 மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே தயாரிக்கப்படும் எனவும், ஆர்3 600 பைக்குகள் மட்டும் உற்பத்தி செய்யப்படும் எனவும் நிறுவன தரப்பில் கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த பைக்கை அறிமுகம் செய்யும் வாய்ப்புகள் இருப்பதாகவும் நிறுவன வட்டாரங்கள் கூறுகின்றன.
