சென்னை:குற்ற வழக்குகளில், நீதிமன்றங்களுக்கு காவல் துறையினர் தவறான தகவல்களை அளிப்பதை தடுக்கும் வகையில் விதிகளை வகுக்கக் கோரி டில்லியைச் சேர்ந்த ஆதித்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், எனக்கு எதிராக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்திருந்த மனு உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அந்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்று, எனது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர், குற்றப்பத்திரிகை நகல் கேட்டு விண்ணப்பித்தபோது, எந்த குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை என்று மனு திருப்பி அனுப்பப்பட்டது. அதனால், நீதிமன்றத்தில் தவறான தகவலை தெரிவித்த அரசு வழக்கறிஞர் மற்றும் பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த பொதுநல வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு நீதிமன்றத்தில் தவறான தகவலை தெரிவித்திருந்தால் அதற்கு ஆதாரம் இருந்தால், சட்டப்படியான நடவடிக்கையை மனுதாரர் எடுத்திருக்க வேண்டும். அதை விடுத்து, அரசு வழக்கறிஞர், காவல் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தனிப்பட்ட காரணத்துக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை பொதுநல வழக்காக கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
எல்லா தவறுகளுக்கும், பொதுநல வழக்கு சர்வ ரோக நிவாரணி அல்ல. நீதிமன்றத்தை நாட முடியாதவர்களின் பிரச்னைகளுக்காக மற்றவர்கள் நீதிமன்றத்தை நாட உருவாக்கப்பட்டதுதான் பொது நல வழக்கு. இதை தனிப்பட்ட பிரச்னைகளை தீர்த்துக் கொள்வதற்காக பயன்படுத்த அனுமதிக்க முடியாது. நீதிமன்றங்களில் தவறான தகவல்கள் தெரிவிப்பதை தடுக்க சட்ட விதிகள் ஏற்கனவே உள்ளன. இதுசம்பந்தமாக விதிகள் வகுப்பது அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. மனுதாரர் தனது குறைகளுக்கு உரிய அமைப்பை நாடி நிவாரணம் பெறலாம் என்று உத்தரவிட்டனர்.
