Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

எழுத்து இயக்கம் தயாரிப்பு சூப்பர் ஸ்டாரின் லேகசி!

திரை உலகின் பிரம்மாண்டமான பின்னணி, ஸ்டைலின் அடையாளமான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் பாரம்பரியம், தனக்கென ஒரு பாதையை உருவாக்கிக்கொண்ட கூர்மையான படைப்பாற்றல்... இவை அனைத்தும் சேர்ந்த கம்பீரமான ஆளுமைதான் சௌந்தர்யா ரஜினிகாந்த்! திரைக்கதையின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ளும் தயாரிப்பாளராகவும், இந்திய சினிமாவில் தொழில்நுட்ப ரீதியான புதிய முயற்சிகளை முன்னெடுத்தவராகவும், தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்துடன் இயங்கி வருகிறார்.

சினிமா தயாரிப்பு, பிரம்மாண்டமான இணையத் தொடர் என ஒரே நேரத்தில் களமிறங்கியிருக்கிறீங்க. எது உங்களை தொடர்ந்து இயக்குகிறது? கதைகளை எப்படி தேர்வு செய்றீங்க?

மனசுக்குப் பிடிச்ச விஷயங்களை ரொம்ப பிஸியாகச் செய்வதுதான் எனக்கு மிகப்பெரிய திருப்தியையும் சந்தோஷத்தையும் தருது. இந்த வருஷம் பிப்ரவரியில் ‘வித் லவ்’ படம் நல்லபடியா அமைஞ்சது. இப்போ ‘ஹேஷ்டேக் லவ்’ (#Love) சீரிஸ், நெட்ஃப்ளிக்ஸுடன் நான் செய்கிற முதல் புராஜெக்ட். தமிழ் சினிமாவிலிருந்து காதலை மையமா வைத்து உருவாகும் முதல் ஒரிஜினல் சீரிஸ்ங்கிறதால இது எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்!

அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லெட்சுமியுடன் வேலை செய்தது அருமையான அனுபவம். மக்களால் சுலபமாகக் கனெக்ட் பண்ணிக்க முடிகிற கதைகளைத் தேர்வு செய்வதில் நான் எப்போதுமே ரொம்ப கவனமாக இருப்பேன்.

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தை வைத்து ‘கோச்சடையான்’ இயக்கிய அந்தப் பிரம்மாண்ட அனுபவம் பற்றி... மீண்டும் அப்படி ஒரு மாஸ் கூட்டணி அமையுமா?

அந்த அனுபவம் என் வாழ்நாள் முழுமைக்குமான ஒரு பெரிய சொத்து மாதிரி! ‘கோச்சடையான்’ திரைப்படம்தான் இன்றளவும் என் கெத்தான அடையாளமாக இருக்கு. அதை நினைச்சு நான் எப்போதுமே ரொம்பவே பெருமைப்படுறேன்.

கிட்டத்தட்ட 12 வருஷங்களுக்கு முன்னாடி, அனிமேஷன், மோஷன் கேப்சர் டெக்னாலஜினா என்னன்னு பலருக்கும் புரியாத காலகட்டத்துல, நாங்க அதைத் துணிச்சலா செய்தோம். இப்போ அந்தத் தொழில்நுட்பத்தை நிறைய பேர் பயன் படுத்துறதைப் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு. மீண்டும் அப்பாவுடன் அப்படி ஒரு வாய்ப்பு அமைஞ்சா, அது கண்டிப்பாக ஒரு பிளெஸ்ஸிங்தான்!

தொடர்ந்து காதல் சார்ந்த கதைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறீங்களே...?

காதலில் எனக்கு அதீத நம்பிக்கை உண்டு. காதல்ங்கிறது எப்போதுமே மாறாத ஒரு மேஜிக்கல் உணர்வு. ஆனா காதல் எப்போதுமே ஒரு நேர்க்கோடு கிடையாது. அதுல நிறைய சிக்கல்களும், மனித உணர்வுகளும் கலந்திருக்கும்.

யாருக்கும் கத்துக்கொடுக்கத் தேவையில்லாமல், இயல்பாக வெளிப்படுற ஒரே உணர்வு காதல் மட்டும்தான். இந்த சீரிஸில் மேத்யூ, தாரா என்கிற இரண்டு முக்கிய கதாபாத்திரங்களுக்கு இடையில இருக்குற கெமிஸ்ட்ரியும், மோதல்களும்தான் கதையின் மையம். அதை சுவாரஸ்யமாகச் சொல்ல முயற்சி செஞ்சிருக்கோம்.

திரைத்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக முத்திரை பதிச்சுட்டு வர்றீங்க. தொடக்கக் காலத்துக்கும் இப்போதைக்கும் கதைகளை அணுகும் விதத்தில் என்ன மாற்றம் வந்திருக்கு?

வயசு கூடக்கூட நம் பார்வையும், சிந்தனையும் கண்டிப்பா மாறும். 16 வயசுல காதலைப் பார்க்குற விதமும், 20 வயசுல பார்க்குற விதமும், 35 வயசுக்கு மேல பார்க்குற விதமும் கண்டிப்பா வேற வேறதான். ஆனா அடிப்படை உணர்வு ஒன்றுதான்.

கதையைத் தாண்டி, தொழில்நுட்ப ரீதியாகவும் சினிமா இப்போ மிகப்பெரிய அசுர வளர்ச்சியைக் கண்டிருக்கு. விஷுவல் ஃபீல்டுல இருந்து வந்தவள் என்ற முறையில், இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சி கதைகளை இன்னும் பிரம்மாண்டமாகக் காட்சிப்படுத்த உதவுது. எதுவானாலும் கதை தான் அடித்தளம். அந்த உறுதியான மனநிலை வந்திருக்கு.

ஒரு தயாரிப்பாளராகவோ, இயக்குநராகவோ கதை கேட்கும்போது உங்களுடைய அணுகுமுறை எப்படி இருக்கும்?

ஒரு தயாரிப்பாளராகக் கதை கேட்கும்போது, இந்தக் கதை ஆடியன்ஸுக்கு எந்த அளவுக்குப் போய்ச் சேரும், அவங்களால இதைக் கனெக்ட் செய்துக்க முடியுமா என்றுதான் முதலில் யோசிப்பேன்.

கதையைத் தாண்டி, அதைச் சொல்ல வர்ற இயக்குநருக்கு பேஷனும் ரொம்ப முக்கியம். அவர் கதை சொல்லும் போதே அவருடைய ஆர்வமும், ஆசையும் நமக்குத் தெரிஞ்சிடும். ஆனா ஒரு இயக்குநராக யோசிக்கும்போது, என்னுடைய சொந்த அனுபவங்கள், நான் முக்கியம்னு நினைக்கிற விஷயங்கள் அந்தக் கதையில் இருக்கா என்பதைத்தான் பார்ப்பேன். மேலும் நான் ஒரு ஆடியன்ஸா இந்தக் கதை ரசிப்பேனா என்கிறதையும் யோசிப்பேன்.

உங்களுக்கு அனிமேஷன், காமிக்ஸ் மேல பெரிய ஈர்ப்பு உண்டு. இப்போதைய சூழலில் காமிக்ஸ் கலாச்சாரம் குறைஞ்சுடுச்சுன்னு நினைக்கிறீங்களா?

இப்போ எல்லாமே விஷுவல் மோடுக்கு மாறியிருக்கு. நான் சின்ன வயசுல அமர் சித்ர கதா, சந்தாமாமா, டிங்கிள் எல்லாம் படிச்சுதான் வளர்ந்தேன். எனக்கு வார்த்தைகளாக யோசிக்கிறதைவிட, காட்சிகளாக யோசிக்கிறதுதான் பழக்கம்.

இப்போ இருக்கிற தலைமுறையினருக்கு அந்தக் காமிக்ஸ் கலாச்சாரம் ரொம்பவே குறைஞ்சு போச்சு. நவீன ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நம்ம ஊருக் கதைகளை கிராஃபிக் நாவல்களாகவும், ஆப் அடிப்படையிலான கதைகளாகவும் கொண்டு வரணும்கிற ஆசை எனக்கு நிறையவே இருக்கு. அதற்கான வேலைகளும், யோசனைகளும் ஒரு பக்கம் ஓடிட்டே இருக்கு.

சினிமாவில் பெண்களின் பங்களிப்பு, குறிப்பாக தொழில்நுட்பத் துறையில் புதிய பெண்

களின் வருகையைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?

இதுல எனக்கு ரொம்பவே பெருமை! ஒரு காலத்துல பெண்கள்னா காஸ்ட்யூம் அல்லது மேக்கப் துறையில் மட்டும்தான் இருப்பாங்க என்ற நிலை இருந்தது. ஆனா இப்போ ஆர்ட் டைரக்சன், ஒளிப்பதிவு, புரொடக்சன் மேனேஜ்மென்ட், தயாரிப்பு என எல்லாத் துறைகளிலும் பெண்கள் கெத்தா கலக்குறாங்க!

என்னுடைய சொந்த டீம்லயே ஃபைனான்ஸ் கண்ட்ரோலர் ஒரு பெண்தான். ஒரு பெண் தயாரிப்பாளராக, மத்த பெண்களுக்கு உறுதுணையாக இருக்கிறதுல நான் பெருமையாக உணர்றேன்.

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் மகளாக வளர்ந்ததால, மற்ற பெரிய பிரபலங்களைப் பார்க்கும்போது உங்களுக்கு பிரம்மாண்டமான வியப்பு வருமா… அப்படி யாரைப் பார்த்து வியந்தீங்க?

உண்மையா சொல்லணும்னா, நான் பிறக்கும்போதே அப்பா ஒரு சூப்பர் ஸ்டார். அதனால சிறுவயதிலிருந்தே அந்த மாஸ் பிரம்மாண்டத்தைப் பார்த்து வளர்ந்ததால, மனிதர்கள் புகழ் அல்லது அந்தஸ்தைப் பார்த்து எனக்கு பிரமிப்பு வராது.

அவங்க ஆளுமையும், மனிதநேயமும்தான் என்னைக் கவரும். ஆனா, ஒரே ஒருத்தரைப் பார்த்து மட்டும் நான் அப்படியே வியந்து போய் நின்னிருக்கேன்... அது ஐஸ்வர்யா ராய்!

நான் அவங்களுக்கு மிகப்பெரிய ஃபேன். அவங்களுக்குள்ளேயும் சரி, வெளியேயும் சரி ஐஸ்வர்யா ராய் ஒரு ஆச்சர்யம்தான். இதை அவங்க கிட்டேயே சொல்லியிருக்கேன்.

அப்பா…!

‘‘ அவருக்கு நானும் ஒரு ரசிகை. சினிமா பற்றி நிறைய பேசுவோம். எங்களுடைய வேலைகள் பற்றி தெரிஞ்சுக்கவும் அதிகம் ஆர்வம் காட்டுவார். அவரே கேட்பார், ‘‘என்னம்மா போகுது?’’ அப்படின்னு. அவர் படம் ரிலீஸ்ன்னாலே முதல் நாள் முதல் காட்சியிலே போய் என்ஜாய் செய்ய காத்திருப்பேன்''. இதோ ‘‘ஜெய்லர் 2'' படத்துக்கு காத்திருக்கேன்’’.

- ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஆ. வின்சென்ட் பால்