உலகப்புகழ் ஜல்லிக்கட்டு திருவிழா இன்று ஆரம்பம் அதிரப்போகுது அவனியாபுரம்: நாளை பாலமேடு, மறுநாள் அலங்காநல்லூர்
ஜல்லிக்கட்டு பாதுகாப்பு, போக்குவரத்து சீர் செய்யும் பணியில் மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் 4 இணை கமிஷனர்கள், 10 உதவி கமிஷனர்கள், 20 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 2 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர். சிசிடிவி கேமரா அமைத்தும் கண்காணிக்கப்படுகிறது. கால்நடைத்துறை மண்டல இயக்குனர் சுப்பையன் மேற்பார்வையில் கால்நடை துறை உதவி இயக்குனர் பழனிவேல் தலைமையில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் டோக்கன்கள் க்யூ ஆர் கோடு மூலம் ஆய்வு செய்யப்படும். 21 கால்நடை மருத்துவர்கள் தலைமையில் 65 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். போட்டியில் காயம் அடையும் காளைகளுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கவும், மிகுந்த காயம் அடையும் காளைகளை உடனடியாக அழைத்துச் செல்ல இரண்டு கால்நடை ஆம்புலன்ஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மதுரை மாநகராட்சி சார்பில் மாநகராட்சி தலைமை மருத்துவ அலுவலர் இந்திரா தலைமையில் 70 பேர் கொண்ட 10 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு மாடுபிடி வீரர்களுக்கு உடல் பரிசோதனை செய்து ஒரு மணிநேரத்திற்கு 100 வீரர்கள் வீதம் 900 வீரர்களை களத்தில் இறக்க விடவும், காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க அருகில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
படுகாயம் அடைந்தவர்களை மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் 10ம், இரண்டு இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளன. போட்டியில் ஆயிரத்து 100 காளைகள் பங்கேற்கின்றன. இம்முறை சிறந்த காளைக்கு முதல் பரிசாக டிராக்டரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக காரும் வழங்கப்படுகிறது. இன்று காலை 7 மணிக்கு அவனியாபுரம் ஜல்லிக்கட்டை வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைக்கிறார். மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. நாளை பாலமேடு, நாளைமறுநாள் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடக்கின்றன. இதேபோல் திருச்சி பெரிய சூரியூரில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.