Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உலகக்கோப்பை டி20 செமிபைனல்: ஈடன் கார்டனில் இன்று ஈடேறப் போவது யார்? தென் ஆப்ரிக்கா-நியூசி மல்லுக்கட்டு

கொல்கத்தா: உலகக் கோப்பை டி20 முதல் அரையிறுதிப் போட்டி கொல்கத்தாவில் இன்று, தென் ஆப்ரிக்கா - நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெறுகிறது. உலகக் கோப்பை டி20 தொடரில் சூப்பர் 8 சுற்றுகள் நிறைவடைந்ததை அடுத்து, முதல் அரை இறுதிப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பலம் வாய்ந்த தென் ஆப்ரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் அய்டன் மார்க்ரம், நியூசி அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னர் ஆகிய இருவரும், வியக்கத்தக்க திறமைகள் வாய்ந்த கேப்டன்களாக திகழ்கின்றனர்.

இதுவரை நடந்த போட்டிகளில் மார்க்ரம், சான்ட்னர் ஆகியோரின் குறிப்பிடத்தக்க பங்களிப்பால் அவர்களின் அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன. எனவே, இன்றைய போட்டி இரு அணிகளின் கேப்டன்கள் இடையில் நடக்கும் உக்கிரப் போராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன், கடந்த 2015ல், உலகக் கோப்பை ஒரு நாள் போட்டிகளின்போது நடந்த அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்ரிக்காவும், நியூசிலாந்தும் மோதின. நாற்காலியின் நுனியில் அமர வைத்த அந்த திரில்லிங்கான போட்டியில் தென் ஆப்ரிக்காவை, நியூசிலாந்து அணி வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது.

அதன் பின்னர், தென் ஆப்ரிக்கா அணி பல வகையில் முன்னேற்றம் கண்டு, கடந்தாண்டு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி வாகை சூடியது. சிறந்த பேட்டராக திகழும் மார்க்ரம், நடப்பு தொடரில் 268 ரன்கள் குவித்து, 175க்கும் கூடுதலான ஸ்டிரைக் ரேட்டுடன் உள்ளார். அதேசமயம் சிறந்த ஆல் ரவுண்டரான சான்ட்னரின் பந்துவீச்சு எகானமி ரேட், 6.35 ஆக உள்ளது. தனது அற்புத பந்து வீச்சால், எதிரணி பேட்டர்களை கலங்கடிப்பவராக சான்ட்னர் திகழ்வது நியூசி அணிக்கு கூடுதல் பலம்.

தென் ஆப்ரிக்கா அணியில், குவின்டன் டிகாக், டெவால்ட் புரூவிஸ், ரையான் ரிக்கெல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், மார்கோ யான்சன் ஆகியோர் அதிரடி ஆட்டக்காரர்களாக உள்ளனர். நியூசி அணியில் ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், கோல் மெக்கொன்சி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். சிறந்த சுழல் பந்து வீச்சாளர்களை கொண்ட நியூசி அணி, தென் ஆப்ரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் என எதிர்பார்க்கலாம். இந்த சூழலில் இன்றைய போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற முனைப்பு காட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

போட்டி துவங்கும் நேரம்: இரவு 7 மணி