உலக கோப்பை சூப்பர் 6 போட்டிகளில் நைஜீரியா, இலங்கை வெற்றி: நாளை அரை இறுதி போட்டிகள்
கோலாலம்பூர்: ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை டி20 சூப்பர் சிக்ஸ் பிரிவுகளில் கடைசியாக நேற்று நடந்த போட்டிகளில் நைஜீரியாவும், இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. மலேசியாவில் நடந்து வரும் 19 வயதுக்கு உட்பட்ட வீராங்கனைகள் பங்கேற்கும் 2வது ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை டி20 போட்டிகளில் லீக் சுற்றுகளின் முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த 12 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. இந்த அணிகள் குரூப் 1, குரூப் 2 என இரு சூப்பர் சிக்ஸ் பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த குரூப்புகளில் இடம் பெற்ற அணிகள் இடையே நடந்த போட்டிகளின் முடிவில் இரு குரூப்புகளிலும் முதல் இரு இடங்களை பிடித்துள்ள இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
நாளை கோலாலம்பூரில் பயுமாஸ் ஓவல் மைதானத்தில் நடக்கும் முதல் அரை இறுதியில் இங்கிலாந்து அணியுடன் இந்தியா மோதும். 2வது அரை இறுதியில் தென் ஆப்ரிக்கா அணியுடன் ஆஸ்திரேலியா மகளிர் அணி மோதும். முன்னதாக, நேற்று சூப்பர் சிக்ஸ் பிரிவுகளில் கடைசி இரு போட்டிகள் நடந்தன. முதல் போட்டியில் நைஜீரியா அயர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற அயர்லாந்து பந்து வீசியது. முதலில் களமிறங்கிய நைஜீரியா மகளிர் அணியில் கிறிஸ்டபெல் சுக்வோனி மட்டும் சிறப்பாக ஆடி 25 ரன் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 94 ரன் எடுத்தது. இதையடுத்து 95 ரன் வெற்றி இலக்குடன் அயர்லாந்து மகளிர் களமிறங்கினர். துவக்க வீராங்கனை ஆலிஸ் வால்ஷ் பூஜ்யத்தில் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார்.
பின் வந்தோர் யாரும் சிறப்பாக ஆடாததால் 18.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அந்த அணி 88 ரன் எடுத்தது. இதனால், 6 ரன் வித்தியாசத்தில் நைஜீரியா வென்றது. சூப்பர் சிக்ஸ் 2வது போட்டியில் ஆஸ்திரேலியா இலங்கை மகளிர் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீராங்கனைகள் சஞ்ஜனா 19, சுமுது நிசன்சலா 18 ரன் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்தனர். இருப்பினும் பின் வந்தோர் மெத்தனமாக ஆடியதால், 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.
அதைத் தொடர்ந்து 100 ரன் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸி துவக்க வீராங்கனைகள் கேட் பெல்லி 1, இனெஸ் மெக்கியான் 10 ரன்னில் அவுட்டாகினர். பின் வந்த கேப்டன் லுாசி ஹாமில்டன் 10ல் வீழ்ந்தார். கெயோமே பிரே 27 ரன் எடுத்து அவுட்டானார். மற்ற வீராங்கனைகள் சொதப்பியதால் 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா மகளிர், 8 விக்கெட் இழப்புக்கு 87 ரன் எடுத்தனர். இதனால், 12 ரன் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.