Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

உலக கோப்பை ஹாக்கி இந்தியாவுக்கு எதிராக நெதர்லாந்து வெற்றி

ஆம்ஸ்டெல்வீன்: உலக கோப்பை ஹாக்கி (ஆண்கள்) 2ம் கட்ட லீக் ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதிய நெதர்லாந்து 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது. நெதர்லாந்தின் வேஜ்னர் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், முதல் 2 கால் மணி நேர ஆட்டத்திலும் நெதர்லாந்துக்கு ஈடுகொடுத்து விளையாடிய இந்திய அணி கோல் விழாமல் பார்த்துக்கொண்டது.

இடைவேளையின்போது இரு அணிகளும் 0-0 என சமநிலை வகித்தாலும், 3வது குவார்ட்டரில் தாக்குதலை தீவிரப்படுத்திய நெதர்லாந்து அணிக்கு 41வது நிமிடத்தில் டுகோ டெல்கென்காம்ப், 51வது நிமிடத்தில் டெப் ஹோட்மேக்கர்ஸ் அபாரமாக கோல் அடிக்க, அந்த அணி 2-0 என முன்னிலை பெற்றது. 52வது நிமிடத்தில் இந்திய அணி கேப்டன் ஹர்மான்பிரீத் சிங் ஒரு கோல் அடிக்க, ஆட்டம் விறுவிறுப்பானது.

மேற்கொண்டு கோல் அடிக்க இந்திய அணி வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்த நெதர்லாந்து, 55வது நிமிடத்தில் வான் டாம் கோல் அடிக்க 3-1 என முன்னிலையை மேலும் அதிகரித்துக்கொண்டது.ஆட்ட நேர முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்திய நெதர்லாந்து அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.

நெதர்லாந்துக்கு 4 பெனால்டி கார்னர் வாய்ப்புகளும், இந்தியாவுக்கு 6 பெனால்டி கார்னரும் கிடைத்த நிலையில், இரு அணிகளுமே அவற்றில் கோல் போடாதது குறிப்பிடத்தக்கது. இ பிரிவில் நெதர்லாந்து 2 போட்டியில் 2 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது. இந்தியா 2 போட்டியிலும் தோற்று 4வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து (3), அர்ஜென்டினா (0) 2வது மற்றும் 3வது இடங்களில் உள்ளன.