வாவ்ரே: ஆண்கள் உலக கோப்பை ஹாக்கி தொடரில் ஜெர்மனி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை தக்கவைத்துக் கொண்டது. பெல்ஜியத்தின் பெல்பியஸ் ஹாக்கி அரங்கில் நேற்று நடந்த பரபரப்பான பைனலில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி அணியுடன் ஸ்பெயின் அணி மோதியது. இரு அணிகளும் தடுப்பாட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதால் இடைவேளை வரை கோல் ஏதும் விழாமல் 0-0 என சமநிலை வகித்தன.
மூன்றாவது குவார்ட்டரிலும் கோல் விழாமல் இழுபறி நீடித்தது. கடைசி 15 நிமிட நேர ஆட்டத்தில் தாக்குதலை தீவிரப்படுத்திய ஜெர்மனி அணிக்கு, 44வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் மைகேல் ஸ்ட்ரதாப் அபாரமாக கோல் போட்டு 1-0 என முன்னிலை கொடுத்தார்.
பதில் கோல் அடிக்க ஸ்பெயின் வீரர்கள் கடுமையாக முயற்சித்தும், ஜெர்மனியின் தடுப்பு அரணை அவர்களால் முறியடிக்க முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் வென்று மீண்டும் உலக சாம்பியனாகி அசத்தியது. ஸ்பெயின் அணிக்கு 4 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தும், அவற்றில் ஒரு கோல் கூட அடிக்க முடியாதது குறிப்பிடத்தக்கது.




