உலகம் முழுவதும் தனது தூதரகங்களில் அனைத்து விசா நேர்காணலை அமெரிக்கா தற்காலிக நிறுத்தம்: அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி
வாஷிங்டன்: விசா மதிப்பீடு மேலும் துல்லியமாக்கும் வகையில் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்குவதற்காக, உலகம் முழுவதும் தனது தூதரங்களில் அனைத்து விசா நேர்காணல்களையும் அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு விசா நடைமுறைகளை கடுமையாக்கி வருகிறது. சமீபத்தில் 75 நாடுகளுக்கு விதித்த புலம்பெயர்ந்தோர் விசா தடையை அமெரிக்க நீதிமன்றம் சட்டவிரோதம் என ரத்து செய்த நிலையில், உலகம் முழுவதும் தனது தூதரகங்களில் அனைத்து விசா நேர்காணலையும் அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் அனைவருக்கும் உலகளாவிய அளவில் புதிய சிறப்புப் பயிற்சி வழங்கப்பட உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. விசா கேட்டு விண்ணப்பிப்பவர்கள் அமெரிக்காவிற்குச் சென்ற பிறகு அங்குள்ள அரசு நலத்திட்டங்களை மட்டுமே நம்பி வாழும் சுமையாக மாறுவார்களா என்பதை இன்னும் துல்லியமாகவும், சீராகவும் பரிசோதிக்க அதிகாரிகளுக்கு இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஏற்கனவே நேர்காணல் தேதிகள் பெற்றிருந்த பலருக்கு, அவர்களின் அப்பாயிண்ட்மெண்ட்கள் ரத்து செய்யப்பட்டு, புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று இமெயில் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சிறப்புப் பயிற்சி எவ்வளவு காலம் நீடிக்கும், எப்போது மீண்டும் வழக்கமான அப்பாயிண்ட்மெண்ட்கள் தொடங்கும் என்பது குறித்த துல்லியமான காலக்கெடுவை அமெரிக்க வெளியுறவுத்துறை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.



