Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மீண்டும் போராட்டம் எதிரொலி; வங்கதேசத்தை இந்தியா நிலைகுலைய செய்கிறது: இடைக்கால அரசின் தலைவர் குற்றச்சாட்டு

டாக்கா,மே 30: வங்கதேசத்தை இந்தியா நிலைகுலையச்செய்கிறது என்று வங்கதேசத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் குற்றம் சாட்டியுள்ளார். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்த பிறகு அங்கு இடைக்கால அரசாக தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது. இருப்பினும் டிசம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தக்கேட்டு மாணவர் அமைப்பினர் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

இதுபற்றி வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் கூறுகையில்,’ இந்தியா வங்கதேசத்தை நிலைகுலையச் செய்கிறது. வங்கதேசத்தை சீர்குலைக்க இடைவிடாத முயற்சிகள் நடைபெற்று வருகிறது. உள்நாட்டிலும் வெளிப்புறத்திலும் இவை நடக்கிறது.

இதனால் போர் போன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது’ என்றார். வங்கதேச அரசியல் கட்சியான நாகோரிக் ஓய்கியாவின் தலைவர் மஹ்முதுர் ரஹ்மான் மன்னாவிடம், தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் இதுபற்றி தெரிவித்துள்ளார். இதுபற்றி மன்னா கூறுகையில்,’ இந்திய மேலாதிக்கத்தால் நாடு பெரும் நெருக்கடியில் உள்ளது என்று தலைமை ஆலோசகர் கூறினார் நாம் ஆழ்ந்த நெருக்கடியில் இருக்கிறோம் என்று கூறி விவாதத்தைத் தொடங்கினார். நெருக்கடி என்றால், அவர் இந்தியாவின் சதி என்று அர்த்தப்படுத்தினார். நம் நாட்டில் இந்த மாற்றத்தை இந்தியா ஏற்றுக்கொள்ளவே விரும்பவில்லை என்றார்.

அவர்களால் முடிந்தால், அவர்கள் ஒரே நாளில் நம்மை அழித்துவிடுவார்கள், அதற்காக தேவையான அனைத்தையும் அவர்கள் செய்கிறார்கள். அதைத்தான் அவர் கூறினார் முழு தேசமும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அவர் நம்புகிறார்’ என்று மன்னா கூறினார்.

2026 ஜூன் 30ல் பதவி விலகல்

முமகது யூனுஸின் செய்தித் தொடர்பாளர் ஷபிகுல் ஆலம் கூறுகையில்,’ வரும் 2025 டிசம்பர் முதல் 2026 ஜூன் 30 வரை தேர்தல்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் 2026 ஜூன் 30க்குப் பிறகு ஒரு நாள் கூட ஆட்சியில் நீடிக்க மாட்டார்’ என்று ஷபிகுல் ஆலம் கூறினார்.

திசைதிருப்பும் முயற்சி; இந்தியா கண்டனம்

வங்கதேசத்தின் குற்றச்சாட்டு குறித்து ஒன்றிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘வங்கதேசத்தின் குற்றச்சாட்டுகள் உண்மையான பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சி. உண்மையான பிரச்னையிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவும், பழியை மற்றவர்கள் மீது மாற்றவும் முயற்சிப்பதாகத் தெரிகிறது. இத்தகைய அறிக்கைகள் பிரச்சினையைத் தீர்க்காது; அவை பொறுப்பைத் தவிர்க்கும் முயற்சியாகத் தெரிகிறது. வங்காளதேசம் மக்களை உள்ளடக்கிய, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை ஆரம்பத்திலேயே நடத்துவதன் மூலம் மக்களின் விருப்பத்தையும் ஆணையையும் உறுதிப்படுத்த வேண்டும்’ என்றார்.