இஸ்லாமாபாத்: வெளிநாடுகள், சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியை பாகிஸ்தான் எதிர்பார்த்து நிற்கும் நிலை ஏற்படாது என் அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நம்பிக்கை தெரிவித்தார். பாகிஸ்தானில் கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.பொருளாதாரத்தை சீரமைக்க சவுதி அரேபியா பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளித்துள்ளது.
ரூ.66,400 கோடி கடன் வாங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம்(ஐஎம்எப்) பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில்‘‘, ஐஎம்எப்பிடம் நிதி உதவி கோரிய பல நாடுகள் உள்ளன. ஒரு முறை நிதி உதவி கோரிய நாடுகள் மீண்டும் ஐஎம்எப்பிடம் நிதி உதவி கோருவதற்கான தேவை ஏற்படவில்லை. இனி மேல் ஐஎம்எப்பிடம் கோரப்படும் நிதியுதவி தான் பாகிஸ்தான் வரலாற்றில் கடைசியாக இருக்கும்.
இனி அரசிற்கு கிடைக்கும் வருவாயில் ஒவ்வொரு பைசாவும் நாட்டின் வளர்ச்சிக்கு செலவிடப்படும். செலவுகள் குறைக்கப்பட்டு, இன்னும் 5 ஆண்டுகளுக்குள் இளைஞர்களுக்கு கல்வி மற்றும் திறன் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்.அரசின் செலவினங்களை குறைக்க துணிச்சலான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.இதன் மூலம் பொருளாதாரம் மீண்டும் வலுப்பெறும்.வெளிநாட்டு சுற்றுபயணத்தின் போது அங்கு உள்ள தலைவர்களை சந்தித்தபோது, கடன்பெறுவதற்கு நான் வரவில்லை. வர்த்தக உறவுகளுக்காக வந்துள்ளேன் என்று சொன்னேன்.பாகிஸ்தானின் கடன் சங்கிலி உடைக்கப்படும்.நாட்டின் நலனுக்காக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்றார்.


