டமாஸ்கஸ்: சிரியா கிளர்ச்சியாளர் படை கடந்த வாரம் சிரியா தலைநகர் டமாஸ்கஸ்சை கைப்பற்றியது. இதையடுத்து சிரியாவில் 54 ஆண்டுகால கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. 29 ஆண்டுகள் சிரியாவை ஆட்சி செய்து வந்த அல் பஷீர் ஆசாத், நாட்டை விட்டு தப்பியோடி தற்போது ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ளார். சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் நடந்து வந்த உள்நாட்டு போர் முடிவுற்று, புதிய அரசு அமைய உள்ளதை அந்நாட்டு மக்கள் வரவேற்றுள்ளனர்.
இதற்கு உலகின் பல நாடுகளும் வரவேற்றுள்ளன. இஸ்ரேலும் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளது. ஆனால் அல் பஷீத் ஆசாத் ஆட்சியில் நிறுவப்பட்ட ரசாயான ஆயுத கிடங்குகள், ஏவுகணை கிடங்குகள் சிரியா கிளர்ச்சியார்கள் கைகளில் கிடைத்தால் தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என அஞ்சி சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிரியாவின் முந்தைய அரசின் ராணுவ இலக்குகளை குறி வைத்து நேற்று முன்தினம் இரவு முழுவதும் வான்வழி தாக்குதல்களை நடத்தியது.
டமாஸ்கஸ்சில் உள்ள முக்கிய இடங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக மனித உரிமைகளுக்கான சிரியா கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் டமாஸ்கஸ்சை நோக்கி இஸ்ரேல் ராணுவம் முன்னேறி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து கிளர்ச்சியாளர்கள் குழு எந்த தகவலையும் வௌியிடவில்லை.

