பெய்ஜிங்: இலங்கை அதிபராக கடந்த செப்டம்பர் மாதம் பொறுப்பேற்ற அனுர குமார திசநாயக்க முதல் வௌிநாட்டு பயணமாக இந்தியா வந்திருந்தார். இதனை தொடர்ந்து சீன அதிபர் ஜீ ஜின்பிங் அழைப்பை ஏற்று அதிபர் திசநாயக்க 4 நாள் அரசு முறை பயணமாக சீனா புறப்பட்டுச்சென்றார். செவ்வாயன்று சீனா வந்த அதிபர் அனுர குமார திசநாயக்க நேற்று அந்நாட்டின் அதிபர் ஜீ ஜின்பிங்கை சந்தித்து பேசினார். அதிபர் ஜீ ஜின்பிங் உடன் பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு குறித்து அதிபர் அனுர குமார திசநாயக்க பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. இரு நாடுகளின் உறவுகளை ஆழப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இரு நாட்டு அதிபர்களும் விவாதித்தனர்.
சீன பிரதமர் லீ கியாங் மற்றும் சீன தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழு தலைவர் ஜாவோ லெஜி ஆகியோரையும் இலங்கை அதிபர் சந்திக்க உள்ளார். விவசாயம், சுற்றுலா , கல்வி மற்றும் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இருநாடுகளும் கையெழுத்திட உள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் இலங்கையின் இரண்டு அரசு தொலைக்காட்சியை டிஜிட்டல் மயமாக்குவது, மத்திய விரைவு சாலை திட்டத்தை முடிக்க சீனாவின் உதவியை கோருவது, ஹம்பந்தோட்டா சீன தொழில்துறை மண்டலம் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
