பிரம்மபுத்திரா நதியில் கட்டப்படும் புதிய அணை இந்தியா, வங்கதேசத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை: சீனா தகவல்
பெய்ஜிங்: பிரம்மபுத்திரா நதியில் கட்டப்படும் புதிய அணையால் இந்தியா, வங்கதேசத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று சீனா தெரிவித்துள்ளது. உலகிலேயே மிகப்ெபரிய அணையை பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே ரூ.14 லட்சம் கோடி மதிப்பில் கட்டத்தொடங்கியிருக்கிறது சீனா. யார்லங் ஸாங்போ என்ற பெயரில்( நம் நாட்டில் பிரம்மபுத்திரா) திபெத் பிராந்தியத்தில் ஓடும் இந்த நதியின் குறுக்கே அணை கட்டுவதற்கான தொடக்க விழா கடந்த ஜூலை 19ஆம் தேதி சீனப் பிரதமர் லீ கியாங் தலைமையில் நடந்தது.
இந்த தகவல் இந்தியா, வங்கதேசம் நாடுகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. பிரம்மபுத்திரா நதி சீனாவில் பிறந்தாலும், இந்தியா வழியாக கடந்து வங்கதேசத்திற்கு சென்று கடலில் கடக்கிறது. சீனா அணை கட்டி அதை தடுக்கும் பட்சத்தில் இந்தியா மற்றும் வங்கதேச பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும். இந்த புதிய அணைக்கு மொடுடோ நீர்மின் நிலையம் என பெயர் கூட சீனா சூட்டிவிட்டது. இந்த மெகா அணை கட்டப்பட்டுவிட்டால், உலகின் மிகப் பெரிய அணை புதிய சாதனை நிகழ்த்தப்படும். அதேசமயம் நமது நாட்டின் அருணாச்சல் உள்ளிட்ட சில மாநிலங்கள் வறண்டு விடும்.
இதுபற்றி அருணாச்சல் முதல்வர் பெமா காண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனா அணை கட்டுவது பற்றி கூறும்போது,
இந்த அணை கட்டப்பட்டால் ஸியாங், பிரம்மபுத்திரா நதிகள் குறிப்பிடத்தக்க அளவு வறண்டு போகும். இதனால், அந்த நதியை நம்பியிருக்கும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். இது மிகவும் கவலைக்குரிய விஷயம். ஏனென்றால் இதனை சீனா நமக்கெதிரான ஓர் ஆயுதமாக பயன்படுத்தும். தண்ணீரை தடுத்து பேராபத்தை விளைவிப்பதால் இதனை ‘வாட்டர் வெடிகுண்டு’ என்று சொல்லலாம்’என்று கூறியிருந்தார்.
இதே போல் வங்கதேசமும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. ஆனால் இந்தியா, வங்கதேசம் எதிர்ப்புகளை சீனா நேற்று நிராகரித்து உள்ளது. புதிய அணை இந்தியா, வங்கதேசத்தில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தப்போவது இல்லை என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் குவோ ஜியாகுன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில்,’ சீனாவில் புதிய அணை கட்டுவது தொடர்பாக இந்தியா மற்றும் வங்கதேசத்தில் எழுந்துள்ள உள்ள கவலைகள் ேதவையற்றவை. இந்த அணை ஒவ்வொரு ஆண்டும் 300 பில்லியன் கிலோ வாட்டுக்கும் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 30 கோடிக்கும் அதிகமான மக்களின் வருடாந்திர தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானது. இந்தத் திட்டம் தொடர்பாக வும், அணை நிலை, ஆற்றின் வெள்ள அளவு ஆகிய தகவல்கள் இந்தியாவின் எல்லை மாநிலங்களுக்கு சீனா தரப்பில் இருந்து பகிரப்படும். மேலும் ஆற்றின் கரையோர மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சீனா தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்கும். அதே சமயம் யார்லுங் சாங்போ நதியின் கீழ்ப் பகுதியில் இந்தத் திட்டத்தை மேம்படுத்துவது சீனாவின் இறையாண்மை சார்ந்த விஷயம். இதில் எந்த நாடும் தலையிட முடியாது. இந்த திட்டம் பேரழிவுகளைத் தடுக்க உதவும். இந்தியா மற்றும் வங்கதேசத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.


