யாங்கூன்: சிறையில் அடைக்கப்பட்டுள்ள மியான்மர் முன்னாள் தலைவர் ஆங்சான் சூகியின் வீட்டை ஏலம் விடும் முயற்சி 3வது முறையாக தோல்வி அடைந்தது. மியான்மர் நாட்டின், தலைவராக இருந்தவர் ஆங்சான் சூகி. கடந்த 2021ல் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் அரசு கவிழ்கப்பட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. ஆங்சான் மீது ஊழல் உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் போடப்பட்டன. இதில், 27 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாங்கூனில் உள்ள இன்யே ஏரிக்கரையோரம் 2 மாடிகளை கொண்ட வீட்டில் ஆங் சான் வசித்து வந்தார்.
அவர் அந்த வீட்டில் வசித்த போது அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஓபாமா உள்ளிட்ட உலக தலைவர்கள் ஆங் சான் சூகியை சந்தித்துள்ளனர். இந்த வீடு தொடர்பாக ஆங் சான் சூகிக்கும், அவரது சகோதாரர் ஆங் சான் ஊ ஆகியோர் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த வீட்டை ரூ.1224 கோடிக்கு ஏலம் விட தீர்மானிக்கப்பட்டது. ஆனால் வீட்டை ஏலம் எடுப்பதற்கு யாரும் வரவில்லை. ஏற்கனவே 2 முறை நடந்த ஏலம் விடும் முயற்சி தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.


