Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமெரிக்கா முதல் நடவடிக்கை சிரியா மீதான பொருளாதார தடை நீக்கங்கள் தொடங்கின

வாஷிங்டன்: சிரியா மீதான பொருளாதார தடையை நீக்குவதில் அமெரிக்கா முதல் நடவடிக்கையை எடுத்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளாக உள்நாட்டு போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரியா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதற்கிடையே, இம்மாத தொடக்கத்தில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், சவுதி அரேபியாவில் சிரியா அதிபரான முன்னாள் போராளி அஹ்மத் அல்-ஷாராவை சந்தித்து பேசினார். திட்டமிடப்படாத இந்த சந்திப்பில், சிரியா மீதான பொருளாதார தடைகள் நீக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார். நீண்டகால சர்வாதிகார தலைவர் பஷார் அசாத்தை ஆட்சியிலிருந்து வெளியேற்றிய அல்-ஷாரா சிரியாவில் நிலையான ஆட்சிக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், டிரம்ப் அறிவித்தபடி அமெரிக்கா தனது பொருளாதார தடைகளை நீக்குவதற்கான முதல் நடவடிக்கையை நேற்று முன்தினம் எடுத்துள்ளது. சிரியாவின் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுடன் வர்த்தகம் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக அமெரிக்க கருவூலத் துறை அறிவித்துள்ளது. சிரியாவுடன் வர்த்தக உறவு வைக்க நட்பு நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்வதாக அமெரிக்க வெளியுறவு துறை அறிவித்துள்ளது. இந்த தடை நீக்கம் அடுத்த 6 மாதத்திற்கு அமலில் இருக்கும். இதன் மூலம் சிரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே புதிய உறவு தொடங்குவதற்கான முதல் படி எடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ கூறி உள்ளார்.