இளம்பெண்ணுடன் இருந்தபோது மாஜி காதலனை வீட்டோடு எரித்து கொன்ற நடிகையின் தங்கை கைது
நியூயார்க்: பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் தங்கை ஆலியா ஃபக்ரி தன் முன்னாள் காதலர் மற்றும் அவரின் காதலியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தி படங்களில் நடித்து வருபவர் அமெரிக்காவில் வசிக்கும் காஷ்மீர் பெண் நர்கிஸ் ஃபக்ரி. 2011ல் வெளியான ‘ராக்ஸ்டார்’ படத்தில் ரன்பிர் கபூர் ஜோடியாக நடித்து பாலிவுட்டில் அறிமுகமானார். இவரது தங்கை ஆலியா ஃபக்ரி (43). நியூயார்க்கில் வசிக்கும் இவர் எட்வர்ட் ஜேக்கப்ஸ் (35) என்பவரை காதலித்துள்ளார்.ஆனால் காதல் முறிந்துவிட்டது. இதையடுத்து அனஸ்தேசியா எட்டியன்(33) என்கிற பெண்ணை காதலித்து வந்தார் எட்வர்ட் ஜேக்கப்ஸ்.
இந்நிலையில் சமீபத்தில் எட்வர்ட் ஜேக்கப்ஸ் மற்றும் அனஸ்தேசியா இருந்த கட்டிடத்தில் திடீரென நள்ளிரவில் தீப்பிடித்தது. தீயில் கருகி, எட்வர்ட் ஜேக்கப், அனஸ்தேசியா பலியானார்கள். இதுதொடர்பாக போலீசார் விசாரித்ததில் எட்வர்ட் ஜேக்கப்பின் வீட்டுக்கு வெளியில் இருந்த கேமராவில் ஒரு பெண் பெட்ரோல் கேனுடன் செல்வது தெரியவந்தது. விசாரணையில் அவர் ஆலியா ஃபக்ரி என தெரிந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீஸ் விசாரித்ததில், வீட்டுக்கு தீ வைத்ததை ஒப்புக்கொண்டார். எட்வர்ட் ஜேக்கப் தனக்கு துரோகம் செய்ததால் இதை செய்ததாக கூறினார். இதையடுத்து அவர் கைது ெசய்யப்பட்டார்.