புதுடெல்லி: பிட்டபுள்யுஎப் உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதியில் விளையாட, இந்தியாவின் த்ரீசா ஜாலி காயத்ரி கோபிசந்த் ஜோடி தகுதி பெற்று சாதனை படைத்தது. ரவுண்ட் ஆப் 16ல் ஜப்பானின் ரின் இவனகா கீ நகானிஷி ஜோடியுடன் நேற்று மோதிய ஜாலி காயத்ரி ஜோடி 21-16, 21-12 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி காலிறுதிக்கு முன்னேறியது.
கடந்த 11 ஆண்டுகளில் உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் மகளிர் இரட்டையர் காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய இணை என்ற பெருமை ஜாலி காயத்ரி ஜோடிக்கு கிடைத்துள்ளது. முன்னதாக, 2015ல் ஜுவாலா கட்டா அஷ்வினி பொன்னப்பா இணை காலிறுதிக்கு முன்னேறி இருந்தது. போராடி தோற்றார் சிந்து: மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தய சுற்றில் நேற்று களமிறங்கிய இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து சீனாவின் வாங் ஸீ யி (3வது ரேங்க்) சவாலை சந்தித்தார்.
முதல் செட்டை 11-21 என்ற கணக்கில் இழந்து பின்தங்கிய சிந்து, 2வது செட்டில் சிறப்பாக விளையாடி 21-15 என வென்று சமநிலை ஏற்படுத்தினார். இதையடுத்து 3வது மற்றும் கடைசி செட் ஆட்டம் விறுவிறுப்பானது. இரு வீராங்கனைகளும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்து, ஒரு கட்டத்தில் 16-16 என சமநிலை வகித்தனர்.
எனினும், கடைசி கட்டத்தில் அதிரடியாகப் புள்ளிகளைக் குவித்த வாங் ஸீ யி 21-11, 15-21, 21-17 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு ரவுண்ட் ஆப் 16ல் களமிறங்கிய ஆயுஷ் ஷெட்டி 19-21, 11-21 என்ற நேர் செட்களில் இந்தோனேசியாவின் ஆல்வி பர்ஹானிடம் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். இப்போட்டி 45 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.




