காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை வேலை, குடும்பம், குழந்தைகள், உறவுகள், சமூகப் பொறுப்புகள் என பல்வேறு தளங்களில் ஒரே நேரத்தில் செயல்பட வேண்டிய கட்டாயம் பெண்களுக்கு உள்ளது. குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் கல்வி, பொருளாதார சுதந்திரம் மற்றும் தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் பெண்கள் முன்னேறியுள்ள நிலையில், “வேலைக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான சமநிலை” என்பது மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.
பல பெண்கள் தொழிலில் வெற்றிபெற்றாலும், மனஅழுத்தம், குற்ற உணர்வு, உடல்நலப் பிரச்னைகள் போன்றவற்றை சந்திக்கின்றனர். இதற்குக் காரணம் Work-Life Balance இல்லாமையே.
வொர்க் - லைஃப் சமநிலை (Work-Life Balance) :
ஒரு பெண்ணின் தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டுக்கும் சமமான முக்கியத்துவம் அளித்து, எந்த ஒன்றும் மற்றொன்றை பாதிக்காத வகையில் வாழ்வதே வொர்க் லைஃப் சமநிலை (Work-Life Balance).
இது வேலை நேரத்தை குறைப்பது அல்ல. மாறாக, நேரம், ஆற்றல் மற்றும் மனநிலையை சரியாக நிர்வகிப்பதே அதன் நோக்கம்.
வேலை - குடும்பம் பொறுப்புகள் இடையே பெண்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகள்
1. இரட்டை பொறுப்புகளின் அழுத்தம்
ஆண்களுடன் இணைந்து வேலை செய்தாலும், வீட்டு வேலைகளின் பெரும்பகுதி இன்னும் பெண்களின் தோளில்தான் உள்ளது.
அலுவலகத்தில் எட்டு மணி நேரம் பணியாற்றிய பிறகும், சமையல், குழந்தை பராமரிப்பு, குடும்ப நிர்வாகம் போன்ற பணிகள் தொடர்கின்றன.
இதனால் பெண்கள் உடல் மற்றும் மன சோர்வுக்கு ஆளாகின்றனர்.
2. ‘Perfect Woman’ ஆக இருக்க வேண்டும் என்ற அழுத்தம்
ஒரு நல்ல தாய், நல்ல மனைவி, சிறந்த ஊழியர், பொறுப்பான மகள் என எல்லா துறைகளிலும் பூரணமாக இருக்க வேண்டும் என்ற சமூக எதிர்பார்ப்பு பெண்களிடம் உள்ளது.
இந்த அழுத்தம் தன்னம்பிக்கையைக் குறைத்து, தேவையற்ற மன உளைச்சலை உருவாக்குகிறது. எங்கேயும் நல்ல பெயருடன் இருக்க வேண்டும் என்கிற மனநிலை.
3. குற்ற உணர்வு
வேலைக்குச் செல்லும்போது குழந்தைகளுடன் போதுமான நேரம் செலவிடவில்லை என்ற குற்ற உணர்வு.
வீட்டில் அதிக நேரம் செலவிட்டால் தொழிலில் கவனம் குறைகிறது என்ற கவலை.
இரண்டு பக்கங்களிலும் பெண்கள் குற்ற உணர்வுடன் வாழும் சூழல் உருவாகிறது.
4. தங்களுக்கான நேரம் இல்லாமை
பல பெண்கள் தங்கள் உடல்நலம், பொழுதுபோக்கு, ஓய்வு, தனிப்பட்ட வளர்ச்சி, நண்பர்கள் ஆகியவற்றை புறக்கணிக்கின்றனர்.
இது நீண்ட காலத்தில் (Burnout) எனப்படும் மன-உடல் சோர்வை ஏற்படுத்துகிறது.
5. வேலை இடங்களில் புரிதல் இல்லாமை
சில நிறுவனங்களில் இன்னும் பெண்களின் குடும்பப் பொறுப்புகள் புரிந்துகொள்ளப்படுவதில்லை.
குறிப்பாக சிறு குழந்தைகள் உள்ள தாய்மார்கள் அதிக சிரமங்களை சந்திக்கின்றனர். இதனை பல நிறுவனங்கள் பொருட்படுத்துவதில்லை.
போக்குவரத்து புரிதலும் கிடையாது. பெரும்பாலான பெண்கள் பொதுப் போக்குவரத்துதான் பயன்படுத்த வேண்டிய சூழல் இருக்கிறது.
எல்லோராலும் இருசக்கர வாகனம் கற்றுக்கொண்டு வாங்கி அதில் பயணிப்பது என்பதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் உண்டு. அதையும் நிறுவனங்கள் புரிந்துகொள்வதில்லை.
வொர்க் -லைஃப் சமநிலை இல்லாததற்கான அறிகுறிகள்
* எப்போதும் சோர்வாக உணர்வது
* தூக்கமின்மை
*எரிச்சல் மற்றும் கோபம்அதிகரித்தல்
*குடும்ப உறவுகளில் விரிசல்
*அடிக்கடி உடல்நலக் குறைபாடுகள்
*வேலை மீது ஆர்வம் குறைதல்
*மகிழ்ச்சியை உணர முடியாத நிலை
*நண்பர்கள் வட்டத்தில் கூட காணாமல் போன உணர்வு
*அதிகமான மறதி குறிப்பாக கடவுச் சொற்களில் (Passwords) மறதி.
*மூளை மந்த (Brain Fog) நிலை
*வேலையில் அடிக்கடி விடுமுறை, வீட்டிலும் அதிகம் தன்னிலை மறந்த மனநிலையில் இருத்தல்.
*உயரதிகாரிகளிடம் அடிக்கடி திட்டு வாங்கும் சூழல்.
இவை தொடர்ந்து இருந்தால் உடனடியாக வாழ்க்கை முறையில் மாற்றங்கள் தேவை என அர்த்தம்.
எப்படி இதனை சரி செய்யலாம்.
1. “எல்லாவற்றையும் நானே செய்ய வேண்டும்” என்ற எண்ணத்தை விடுங்கள்
பெண்கள் செய்யும் மிகப்பெரிய தவறு எல்லா பொறுப்புகளையும் தாங்களே ஏற்றுக்கொள்வதுதான்.
குடும்ப உறுப்பினர்களுடன் பொறுப்புகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
வீட்டு வேலை என்பது குடும்பப் பொறுப்பு; பெண்களின் தனிப்பொறுப்பு அல்ல. குறிப்பாக மகள்கள், மருமகள்கள் வசம் கூட பொறுப்புகளைக் கொடுப்பதில் ஐயம் தேவையில்லை.
வீட்டு ஆண்களை வேலை வாங்கக் கூடாது என்கிற பழமையான பழக்கம் மிகப்பெரும் காரணம்.
2. முன்னுரிமைகளைத் தீர்மானியுங்கள்
அனைத்து வேலைகளும் அவசரமானவை அல்ல.
“முக்கியம்”, “அவசரம்”, “காத்திருக்கலாம்” என்று பணிகளைப் பிரித்து செயல்படுங்கள்.
இதனால் தேவையற்ற அழுத்தம் குறையும்.
3. ‘இல்லை’ என்று சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள்
அனைவரையும் திருப்திப்படுத்த முயற்சிப்பது சாத்தியமில்லை.
உங்களால் முடியாத விஷயங்களுக்கு மரியாதையுடன் ‘இல்லை’ என்று சொல்வது மனநலத்திற்கு அவசியம். மேலும் நன்றாக செய்யக் கூடிய ஒருவரிடம் பொறுப்பு செல்வது நமக்கும் நல்லது.
4. தனக்கான நேரத்தை( Me-time ) ஒதுக்குங்கள்
ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது உங்களுக்காக செலவிடுங்கள்.
*புத்தகம் படியுங்கள்
*நடைப்பயிற்சி செய்யுங்கள்
*இசை கேளுங்கள்
*தியானம் செய்யுங்கள்
*நண்பர்களுடன் பேசுங்கள்
இவை மனநிலையை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.
5. தொழில்நுட்பத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள்
கால அட்டவணை செயலிகள், மறதிக்கான செயலிகள், குறித்து வைத்துக்கொள்ளும் கேலண்டர் செயலிகள் போன்றவற்றை பயன்படுத்தி நேரத்தை மிச்சப்படுத்தலாம். வேலைகளையும் பகிர்ந்து திட்டமிட்டு செயல்படுத்தலாம்.
6. குடும்பத்துடன் நேரம் செலவிடுங்கள்
அளவைக் காட்டிலும் தரமே முக்கியம்.
ஒரு மணி நேரம் முழு கவனத்துடன் குடும்பத்துடன் இருப்பது, நாள் முழுவதும் உடன் இருந்தும் கவனம்
செலுத்தாததை விட சிறந்தது.
வாரம் ஒரு நாள் விடுமுறை எனில் எப்படிப்பட்ட அலுவலக வேலை என்றாலும் அதற்கு நோ சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள். அந்த ஒரு நாள் குடும்பத்துக்கானது.
அலுவலகம் சென்றால் குடும்பப் பொறுப்புகளை தற்காலிகமாக மறக்க முயற்சியுங்கள்.
7. உடல்நலத்தை முதன்மைப்படுத்துங்கள்
சரியான தூக்கம், சத்தான உணவு மற்றும் உடற்பயிற்சி ஆகியவை Work-Life Balance-இன் அடிப்படை அம்சங்கள்.
உடல்நலம் பாதிக்கப்பட்டால் மற்ற எல்லா பொறுப்புகளும் சிரமமாகிவிடும்.
வேலை பார்க்கும் தாய்மார்களுக்கான சிறப்பு ஆலோசனைகள்
*குழந்தைகளுடன் தினசரி பேசும் நேரத்தை நிர்ணயிக்கவும்.
*பள்ளி நிகழ்ச்சிகளில் முடிந்தவரை பங்கேற்கவும்.
*குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தில் மொபைல் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
*உதவி கேட்க தயங்காதீர்கள்.
*‘Super Mom’ ஆக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
*உங்களுக்கு வீட்டில் ஒரு குழந்தை இருக்கிறான்/றாள் என்கிற தகவலையும், உங்களுக்கு அதனால் என்னென்ன பொறுப்புகள் உள்ளன என்பதையும் அலுவலகத்தில் தெரியப்படுத்துங்கள்.
*வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் வேலை செய்ய மாட்டீர்கள் என்பதை மறைமுகமாக, நேரடியாக அலுவலக உயரதிகாரிகளுக்கு உணர்த்துங்கள்.
நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும்?
பெண்கள் மட்டும் முயற்சி செய்தால் வொர்க் -லைஃப் சமநிலை உருவாகாது.
நிறுவனங்களும் பின்வரும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.
*சீரான வேலை நேரம்.
* தேவையான காலங்களில் வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதி.
*பிரசவம் மற்றும் பெற்றோர்களுக்கான ஆதரவு பணியிடத்தில் அவசியம்.
*ஆரோக்கியமான மனநிலைக்கான பயிற்சிகள், மற்றும் ஆலோசனைகள்.
*குழந்தைகள் உள்ள பெற்றோர்களுக்கான கூட்டங்கள், திட்டமிடல்கள்.
*விடுமுறைகள் எதற்கு அவசியம், எது அனாவசியம் என புரிந்து பணியாளர்களுக்கு விடுமுறைகள் வழங்குவது அவசியம்.
வொர்க் -லைஃப் சமநிலை வெறும் ஒருநாள் செயல்பாடு அல்ல. தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டிய வாழ்க்கை முறை. எல்லா நாட்களிலும் சமநிலை கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. சில நாட்களில் வேலை முக்கியமாக இருக்கும்; சில நாட்களில் குடும்பம் முக்கியமாக இருக்கும். ஆனால் எதுவானாலும் எந்தப் பொறுப்பிற்காகவும் உங்களை நீங்கள் இழந்து விடக்கூடாது என்பதுதான்.
- ஷாலினி நியூட்டன்
