Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மகளிர் டி20 உலகக்கோப்பை: 7வது முறையாக கோப்பையை முத்தமிட்ட ஆஸ்திரேலிய அணி!

லண்டன்: சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தை ஆஸ்திரேலிய அணி மீண்டும் நிரூபித்துள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இங்கிலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 7வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. இந்த தொடர் முழுவதும் ஒரு போட்டியில் கூட தோற்காமல் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் சோபி மோலினக்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பம் சாதகமாக இல்லை. தொடக்க வீராங்கனைகளான அமி ஜோன்ஸ் (6) மற்றும் டேனி வியாட் (8) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும், பொறுப்புடன் ஆடிய கேப்டன் நாட் சீவர் பிரண்ட் 53 பந்துகளில் 58 ரன்கள் குவித்து அசத்தினார். இறுதி ஓவர்களில் அதிரடி காட்டிய ஃபிரேயா கெம்ப் 28 பந்துகளில் 44 ரன்கள் விளாசினார். இதனால் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது.

151 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு பெத் மூனி அபாரமான தொடக்கம் தந்தார். ஆரம்பம் முதலே இங்கிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த மூனி, 49 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் குவித்தார். அவரைத்தொடர்ந்து வந்த போப் லிட்ச்ஃபீல்ட் 35 பந்துகளில் 48 ரன்கள் (2 சிக்ஸர், 6 பவுண்டரி) எடுத்து வலுவான ஆதரவு அளித்தார். இவர்களின் அதிரடியால் ஆஸ்திரேலிய அணி 17.1 ஓவர்களிலேயே 153 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மகளிர் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலியா 7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு 2010ஆம் ஆண்டு நியூசிலாந்தை வீழ்த்தி தனது முதல் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா, அதைத் தொடர்ந்து 2012, 2014 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டங்களை வென்றது. மேலும், 2020ல் இந்தியாவையும், 2023ல் தென்னாப்பிரிக்காவையும் வீழ்த்திய ஆஸ்திரேலிய படை, தற்போது 2026ல் மீண்டும் இங்கிலாந்தை வீழ்த்தி தனது 7வது உலகக்கோப்பை யை தன்வசப்படுத்தியுள்ளது.