ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை அந்தச் சமூகத்தில் பெண்கள் வகிக்கும் நிலையை வைத்து அளவிட முடியும். சம வேலைக்குச் சம ஊதியம், உழைப்பில் சமத்துவம் ஆகியவற்றில் பெண்களுக்கு திராவிட மாடல் திமுக அரசு அதி முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. திமுக ஆட்சியில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் (விடியல் பயணம்), மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
அந்த வரிசையில், தமிழ்நாட்டு பெண் அரசு ஊழியர்களுக்கு ஒரு ‘மெகா ஜாக்பாட்’ அறிவிப்பு குறித்து தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் காலங்காலமாக இருந்த ஒரு பெரிய சிக்கலுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்களான பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த மகப்பேறு விடுப்பு விதிகளில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதுவரைக்கும் அரசு விதிகளின்படி, முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் தான் ஒரு வருடம் (365 நாட்கள்) முழு சம்பளத்துடன் மகப்பேறு விடுப்பு கிடைத்துக் கொண்டிருந்தது. மூன்றாவது குழந்தை பிறந்தால் தங்களது சொந்த விடுப்பை எடுக்க வேண்டும் என்கிற நிலைமை இருந்தது. ஆனால் இனி மூன்றாவது குழந்தைக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு உண்டு என தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.
இதுநாள் வரை பெண் அரசு ஊழியர்கள் தங்களின் முதல் இரண்டு பிரசவங்களுக்கு, தலா ஒரு வருடம் (365 நாட்கள்) முழு ஊதியத்துடன் கூடிய விடுப்பைப் பெறலாம். இனிமேல் மூன்றாவது பிரசவத்திற்கும் 12 வாரங்கள் (சுமார் 3 மாதங்கள்) முழு ஊதியத்துடன் கூடிய விடுப்பு கட்டாயமாக வழங்கப்படும் எனக்கூறி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு வேலைக்குச் செல்லும் பெண் அரசு ஊழியர்களின் உடல்நலம் மற்றும் குழந்தைகளின் பராமரிப்பைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, பெண்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், அவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவவும் திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தி வரும் நிலையில், பெண்களின் உடல் மற்றும் உளவியல் பிரச்னையையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருவது இந்த அறிவிப்பின் மூலமாக நிரூபணமாகி உள்ளது. இந்த மாற்றம், அரசு பணியில் உள்ள பெண்களின் உரிமைகளை விரிவுபடுத்தும் முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, குடும்பத் திட்டமிடல் காரணங்களால் முன்பு ஏற்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் பெண்கள் தங்கள் உடல்நலத்தையும், குழந்தை பராமரிப்பையும் சிறப்பாக கவனிக்க உதவும் சூழல் உருவாகும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த புதிய உத்தரவு, பெண்கள் நலனுக்கான தமிழக அரசின் கவனத்தை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துவதோடு, வேலை மற்றும் குடும்ப வாழ்க்கையை சமநிலைப்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. பெண்கள் முன்னேற்றம் என்பது தேசிய முன்னேற்றத்திற்கு அடிப்படை என்பதை எண்ணி பெண்களின் பங்களிப்பை அங்கீகரித்து, அவர்களுக்கு மரியாதை வழங்குவதை திமுக அரசு நோக்கமாக கொண்டிருப்பது மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
