Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மகளிர் விடியல் பயண திட்டத்தில் தினந்தோறும் 58 லட்சம் பெண்கள் கட்டணம் இல்லாமல் பஸ் பயணம்

*திமுக 4 ஆண்டு கால சாதனைக்கு சாட்சி

*மீன்வளர்ச்சி கழக தலைவர் பெருமிதம்

நாகப்பட்டினம் : மகளிர் விடியல் பயணம் மூலம் தினந்தோறும் 58 லட்சம் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணம் செய்வது முதல்வரின் நான்கு ஆண்டு கால சாதனைக்கு சாட்சி என தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் பேசினார்.

நாகப்பட்டினம் நகர திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு என்ற தலைப்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நாகப்பட்டினம் அபிராமிஅம்மன் சன்னதி திருவாசல் முன்பு நடந்தது.

நாகப்பட்டினம் நகர்மன்ற தலைவரும், நகர செயலாளருமான மாரிமுத்து தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் மேகநாதன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் லோகநாதன், பொதுக்குழு உறுப்பினர் பாண்டியன், நகர அவைத்தலைவர் முருகையன், நகர துணைச்செயலாளர்கள் திலகர், சித்ரா, மாவட்ட பிரதிநிதி ரமணி, நகர பொருளாளர் அபுபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகப்பட்டினம் சட்டசபை தொகுதி தேர்தல் பார்வையாளர் அருட்செல்வன், இளம் பேச்சாளர் அகிலா, தலைமை கழக பேச்சாளர்கள் ஆரூர்மணிவண்ணன், ஆருர்ஜோதி ஆகியோர் பேசினர்.

தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் பேசியதாவது:புதுமைப்பெண் திட்டம், பத்திரப்பதிவில் பெண்களுக்கு 1 சதவீத தள்ளுபடி என முதல்வரின் திட்டங்களை இந்தியாவில் உள்ள பிற மாநில முதல்வர்கள் வியந்து பார்க்கின்றனர்.

மகளிர் விடியல் பயணம் என்ற திட்டம் மூலம் தினந்தோறும் 58 லட்சம் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணம் செய்கின்றனர். இதன் மூலம் தினந்தோறும் வேலைக்கு செல்லும் பெண்கள் கவலையில்லாமல் பயணம் செய்ய முடிகிறது. மகளிர் விடியல் பயணம் பஸ் வந்தவுடன் தற்போது பெண்கள் எல்லாம் ஸ்டாலின் பஸ் வந்துவிட்டது என கூறி மகிழ்ச்சியுடன் பயணம் செய்கின்றனர்.

மகளிர் உழைப்புக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் மகளிர் உரிமைத்தொகை என்ற பெயரில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய். இந்த திட்டத்தில் இதுவரை பயன்பெறாதவர்கள் வரும் ஜூன் மாதம் முதல் விண்ணப்பித்து பயன் பெற முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இவ்வாறு நான்கு ஆண்டு காலத்தில் முதல்வர் எண்ணற்ற திட்டங்களை தமிழக மக்களுக்கு வழங்கியுள்ளார். முதல்வர் உங்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பது போல் நீங்கள் முதல்வருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றார். இதை தொடர்ந்து பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியதை வரவேற்று வெடிவெடித்தனர். நகர துணை செயலாளர் சிவா நன்றி கூறினார்.